குமுளி மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் ஐயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி
விபத்துக்குள்ளான வேனை மீட்கும் தீயணைப்பு படை மற்றும் போலீசார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி எஸ்.எஸ்., புரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 11 பேர் வேனில் சபரிமலை சென்றனர். இவர்கள் அங்கு தரிசனம் முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் இவர்கள் வந்த வேன் இறைச்சல் பாலத்தைக் கடந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது.
அப்போது டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்தார். இதனால் வேகமாக வந்த வேன் தடுப்புச்சுவரில் மோதி, போர் பை டேமில் இருந்து பெரியாறு மின்நிலையத்திற்கு தண்ணீர் வரும் குழாயில் கவிழ்ந்தது. 300 அடிபள்ளம் கொண்ட இந்த குழாயில் கவிழ்ந்ததோடு, 100 அடி துாரம் குழாயில் உருண்டது. அடுத்த தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இல்லாவிட்டால் அடுத்து சில நுாறு அடிகள் உருண்டிருக்கும்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் குமுளி லோயர்கேம்ப் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி., உட்பட பலரும் மீட்பு பணியில் இறங்கினர். வேன் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7பேர் உயிரிழந்தனர். மீதம் இருந்தவர்கள் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். (போலீசார் வெளியிட்ட கணக்குப்படி டிரைவர் கோபாலகிருஷ்ணன், 42, மற்றும் பக்தர்கள் முனியாண்டி, 55, தேவதாஸ், 55, நாகராஜ், 46, வினோத், 47, சிவக்குமார், 45 உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்). சிறுவன் ஹரிகரன், 7 உட்பட மீதம் 3 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்தாலும் மீட்பு பணிகளில் போலீசார், தீயணைப்பு படையினருடன் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 60 கி.மீ., தொலைவிற்கும் மேல் உள்ளது. இதனால் இவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து சேர்க்கவே சிறிது அவகாசம் ஆகி விட்டது. இருப்பினும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்களும் தீவிர சிகிச்சை அளித்து காயமடைந்தவர்களை காப்பாற்றினர்.
இதற்கிடையில் விபத்துக்களை முற்றிலும் தடுக்கும் வகையில், குமுளி மலைப்பாதையினை ஒருவழிப்பாதையாக மாற்றி மாவட்ட போலீஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி தேனி மாவட்டம் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் தேனி- சின்னமனுார்- கம்பம்- கம்பம் மெட்டு- கட்டப்பனை- வாகமண்- ஏலப்பாறை- குட்டிக்கானம்- பூத்துக்குழி- முண்டக்கயம்- எருமேலி- வழியாக பம்பை செல்ல வேண்டும்.
சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள் பம்பை- குட்டிக்கானம்- பீர்மேடு- பாம்பனாறு- வண்டிப்பெரியாறு- குமுளி- கூடலுார்- கம்பம்- சின்னமனுார் வழியாக தேனியை கடந்து செல்ல வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த ஒழுவழிப்பாதையினை பக்தர்கள் பயன்படுத்தினாலும், வழியோரம் போலீஸ் செக்போஸ்ட்களை அமைத்து, அவ்வப்போது சோதனையில் ஈடுபட போலீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த காலங்களில் அதாவது கொரோனாவிற்கு முந்தைய காலங்களில் சபரிமலைக்கு பக்தர்கள் வரும் போது, அவர்கள் துாக்க கலக்கம், பசி இல்லாமல் செல்ல, சுக்குகாபி வழங்குவது, முகம் கழுவி ஓய்வு எடுக்க இட வசதி செய்வது, அன்னதானம் வழங்குவது போன்ற பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வந்தன.
இந்த ஆண்டு சுக்குகாபி எங்குமே வழங்கப்படவில்லை. பக்தர்களுக்கு ஓய்வெடுக்க இடம் இல்லை. அன்னதானக்கூடங்களும் பாதிக்கும் மேல் குறைந்து விட்டது. கடந்த காலங்களை போல் பக்தர்களுக்கு வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu