இறைச்சி விலை அதிகரிப்பால் கிராமத்து பாணியில் விற்பனை..!
தேனி அல்லிநகரத்தில் உள்ள ஒரு ஆட்டு இறைச்சி கடையில் இறைச்சியை கூறு போட்டு விற்பனைக்கு வைத்திருந்தனர்.
தேனி மார்க்கெட்டில் ஆட்டு இறைச்சி விலை கிலோ 1000 ரூபாய் வரை எட்டி உள்ளதால், மக்களை கவர கிராமிய பாணியில் கூறு கறி போட்டு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
தேனி நகர் பகுதியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு கடந்த தீபாவளிக்கு ஒரு கிலோ ஆட்டுக்கறி 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அப்போது முதல் தனிக்கறி கிலோ 1000 எனவும் எலும்புக்கறி கிலோ 800 எனவும் விற்கப்பட்டது.
இவ்வளவு விலை கொடுத்து இறைச்சி வாங்க பொதுமக்கள் தயாராக இல்லை. ஆட்டு இறைச்சி வாங்க தயக்கம் காட்டி வந்தனர். அதே சமயம் மழை பெய்யும் காலங்களில் மட்டும் மீன் உணவை தவிர்க்குமாறு டாக்டர்களும் தங்கள் கிளினிக்கிற்கு வரும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். பிராய்லர் கோழி வாங்குபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
இந்த சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்தி தனது வாடிக்கையார்களைத் தக்க வைக்க இறைச்சிக் கடைக்காரர்கள் கிராமத்து பாணியில் கூறு கறி விற்பனைக்கு மாறி விட்டனர்.
இது குறித்து இறைச்சி கடைக்காரர்கள் கூறியதாவது: ஆட்டு இறைச்சியை கூறு போட்டு பிரித்து பகிர்ந்து உண்ணும் வழக்கம் கிராமங்களில் உள்ளது. தேனியில் பழனிசெட்டிபட்டி, அல்லிநகரம் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள கடைகளில் இந்த வழக்கம் இருந்து வந்தது. தற்போது பெரும்பாலான இறைச்சி கடைகள் இந்த வகை வியாபாரத்திற்கு மாறி விட்டனர்.
கூறுக்கறியில் எலும்பு, நுரையீரல், கொழுப்பு, குடல், இறைச்சி, ஈரல் என ஆட்டின் அனைத்து பாகங்களையும் சமமாக பிரித்து போடுவோம். எங்களை பொறுத்தவரை ஆட்டின் எந்த ஒரு பாகமும் வீணாகாது. மீதம் விழுகாது. இதனால் ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.
இதனால் மக்கள் வந்து வாங்குகின்றனர். தற்போதைய பொருளாதார சூழலில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி உணவிற்கு வாரம் 600 ரூபாய் ஒதுக்குவதே பல குடும்பங்களுக்கு சிரமம் உள்ளது. இந்நிலையில் ஆட்டுக்கறி 1000 ரூபாய் என அதிகரித்து விட்டதால் பலரும் ஆட்டு இறைச்சி எடுக்க தயங்கினர். தற்போது கூறு கறி போட்டு விற்பதால், தயங்கிய மக்கள் தாரளமாக வாங்குகின்றனர். எங்களுக்கும் எந்த நஷ்டமும் இல்லை. கட்டுபடியான விலையால் மக்களும் விரும்பி வாங்குகின்றனர். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu