முல்லை பெரியாறு அணை நீர்தேக்கும் விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

முல்லை பெரியாறு அணை நீர்தேக்கும் விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

முல்லை பெரியாறு அணையினை ஆய்வு செய்த பின்னர்  தேக்கடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தஅமைச்சர் துரைமுருகன்.

ரூல்கர்வ் நடைமுறை பின்பற்றப்படுவதால்தான் முல்லை பெரியாறு அணை நீர் கேரளம் வழியாகத் திறக்கப்பட்டது

முல்லை பெரியாறு அணையில் தற்போது ரூல்கர்வ் முறை பின்பற்றப்படுகிறது. இதன்படி வரும் நவம்பர் 30ம் தேதி முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்குவோம் என அமைச்சர் துரைமுருகன் உறுதிபடக் கூறினார்.

முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய நீர்வள ஆணையம் ஒரு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இது பற்றி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளனர். அந்த சட்டத்திற்கு பேர் 'ரூல்கர்வ்'. இதன்படி கடந்த 30 ஆண்டுகளில் வந்த தண்ணீரின் அளவு கணக்கெடுக்கப்படும். அதற்கு தக்கபடி அணையில் எப்போது எவ்வளவு நீர் தேக்கலாம் என நீர் மட்ட உயர்த்தை அதிகாரிகள் நிர்ணயிக்கலாம் என கூறியிருக்கின்றனர். அதன்படி முல்லை பெரியாறு அணையில் இன்று நவம்பர் 10ல் 139.50 என நீர் மட்டத்தை உயர்த்தலாம் என நிர்ணயித்துள்ளனர். அதேபோல் நவம்பர் 30ல் 142 அடி நீரை தேக்கலாம். இந்த 'ரூல்கர்வ்' நடைமுறை புதியதாக கொண்டு வரப்பட்டதால் நிறைய பேருக்கு தெரியவில்லை.

முல்லைபெரியாறு அணையில் அதிக நீர் வரும் போது, தமிழகத்திற்கு கூடுதல் நீர் எடுப்பது குறித்து தமிழக முதல்வரிடம் பேசி, இருமாநில அரசுகளும் கலந்து இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். முல்லை பெரியாறு அணை பலப்படுத்தும் பணிகள் நிவைடைந்து விட்டதால், அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உரிமை பெற்றுள்ளோம். அடுத்து பேபி அணையினை பலப்படுத்திய பின்னர் அணையில் 152 அடி தண்ணீரை தேக்க முடியும். பேபி அணையினை பலப்படுத்தும் பணிக்கு மூன்று மரங்கள் இடையூறாக உள்ளது. வனத்துறை அனுமதி பெற்று இந்த மரங்களை அகற்றி விட்டு, பேபி அணையினை மீண்டும் பலப்படுத்தும் பணிகளை முடித்து, அணையில் 152 அடி தண்ணீரை தேக்குவோம்.

கேரளாவுடன் முடிந்த அளவு நட்புடன் இருப்போம். கேரள முதல்வர் பினராயி விஜயன் மிகவும் நேர்மையானவர். எதிர்மறை சிந்தனை கொண்டவர் இல்லை. அவரது காலத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு நல்ல தீர்வு ஏற்படும் என நம்புகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த அதே படகு தான் தற்போதும் உள்ளது. நல்ல வேளை அதில் நான் வரும் போது இடையில் பழுதாகி நின்று விடவில்லை. எனவே அணையினை பராமரிக்கவும் நிர்வாக பணிக்கும் உடனடியாக இரண்டு ஸ்பீடு போட்டுகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க., கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை முறை அணைக்கு வந்து அமைச்சர் குழு ஆய்வு செய்தது. சேலமாவது சற்று துாரம். தேனி மாவட்டம் மிகவும் அருகில் தானே உள்ளது. ஏன் அணைக்கு யாரும் வரவில்லை. நான் 80 வயதில் தட்டுத்தடுமாறி வந்துள்ளேன். இவர்கள் வந்திருக்க முடியாதா?. எனவே முல்லை பெரியாறு அணையின் உரிமை குறித்து பேசவோ, போராடவோ அதிமுக விற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. அவர்கள் நடத்தும் போராட்டத்தால் தமிழ்நாடு ஒன்றும் கிடுகிடுத்து விடாது என்றார் அமைச்சர் துரைமுருகன்.

Tags

Read MoreRead Less
Next Story