முல்லைப்பெரியாறு நீர் மட்டம் சரிவு: இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல்?
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 127 அடியாக சரிந்துள்ளதால் இரண்டாம் போக நெல் சாகுபடி தடையின்றி நடைபெறுமா என கேள்விக்குறியாகியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலத்தில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. சுமார் 12 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் ஒரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது பெரியாறு அணை தண்ணீர் மூலம் முதல் போக நெல் சாகுபடி தொடங்கிய போது, தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்ததால், நீர் மட்டம் தொடர்ச்சியாக 136 அடி என்ற அளவிலேயே இருந்தது. சில நாட்களாக மழை இல்லை. இந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புகள் உள்ளது.
இந்நிலையில் பெரியாறு அணை நீர் மட்டம் 127 அடியாக சரிந்து விட்டது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடி விளைந்து அறுவடை தொடங்கி உள்ளது. அறுவடை தொடங்கும் போதே விவசாயிகள் இரண்டாம் போக நெல் விதைப்பினை தொடங்கி விடுவார்கள். இதனால் தண்ணீர் தேவை இருந்து கொண்டே இருக்கும்.
தற்போது அணையின் நீர் மட்டம் சரிந்துள்ளதால், இரண்டாம் போக நெல் சாகுபடி தொடர்ச்சியாக தடையின்றி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் நல்ல முறையில் கிடைத்து, அணை நீர் மட்டம் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 142 அடியை எட்டினால் மட்டுமே தேனி மாவட்டத்தில் உறுதியாக இரண்டாம் போக நெல் சாகுபடி நடைபெறும்.
அதேபோல் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டினால் தான் மதுரை மாவட்டத்திலும் இரண்டாம் போக நெல் சாகுபடி தடையின்றி நடக்கும். முல்லைப்பெரியாறு நீர் தான் வைகை அணையிலும் சேமிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வைகை அணைக்கான நீர் பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யவில்லை. எனவே வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. ஆனால் பெரியாறு தண்ணீர், கொட்டகுடி ஆறுகளின் தண்ணீர் மூலம் வைகை ஓரளவு நிரம்பிய நிலையில் உள்ளது. தற்போது வைகை அணை நீர் மட்டமும் 67 அடியாக குறைந்துள்ளது.
அதேபோல் மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணைகளிலும் நீர் மட்டம் குறைய தொடங்கி உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் பெய்தால் நெல் சாகுபடி பணிகள் பிரச்னை இன்றி நடக்கும். வடகிழக்கு பருவமழை குறைந்தாலோ பொய்த்தாலோ கடும் நெருக்கடி ஏற்படும். அதேபோல் தற்போது மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கி உள்ள நிலையில் அரசு தேவையான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu