முல்லைப்பெரியாறு அணையினை பாதுகாக்க கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

முல்லைப்பெரியாறு அணையினை  பாதுகாக்க கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

பெரியாறு அணையினை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகள் லோயர்கேம்பில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

முல்லைப்பெரியாறு அணையினை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், லோயர்கேம்பில் தொடங்கிய விவசாயிகளின் பேரணி, குமுளி நோக்கி சென்றது. தமிழக போலீசார் விவசாயிகளை லோயர்கேம்பிலேயே தடுத்து நிறுத்தினர். விவசாயிகள் ரோட்டில் அமர்ந்து பெரியாறு அணையினை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அவர்கள் கூறியதாவது:

அக்டோபர் 1 ம் தேதி முதல், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள், முல்லைப் பெரியாறு அணையை கொண்டு வருவதற்கான வேலை தீவிரமாக டெல்லியில் நடக்கிறது. கடந்த மாதம் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான ஜெயின், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினரான டீயின் டீன் குரியா கோஸிடம் கொடுத்த செய்தியின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, எர்ணாகுளத்தைச் சேர்ந்த டாக்டர் ஜோ ஜோசப், உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வழக்கின் கீழ், அடுத்த 12 மாதங்களுக்குள்,முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

கடந்த 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் படி, அணையினுடைய நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தி விட்டு, அதற்குப் பிறகு பேபி அணையை பலப்படுத்தி விட்டு, 152 அடியாக தண்ணீரை உயர்தலாம் என்று இருக்கும் போது,,,

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அணையை ஏன் கேரளா பலப்படுத்த விடவில்லை என்கிற கேள்வி எழுகிறது. அணையை பலப்படுத்த விடாமல் எந்த அடிப்படையில் 12 மாதங்களுக்குள் சோதனை செய்ய முடியும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதிக்குள் வரும் ஆணவச்சால் கார் பார்க்கிங் தொடர்பாக, கடந்த மாதம் சர்வே ஆஃப் இந்தியா மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஆணவச் சால் கார் பார்க்கிங் பகுதி பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதிக்குள் வரவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சர்வே ஆப் இந்தியாவின் இந்த போலியான அறிக்கைக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

மேற்கண்ட மூன்று விஷயங்களான தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை தன் கைவசம் எடுத்து விடக்கூடாது என்பதற்காகவும், 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் பேபி அணையை பலப்படுத்தி விட்டு தான் அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை முன்னிறுத்தியும், ஆனவச்சால் கார் பார்க்கிங் பகுதி பெரியாறு அணைக்கான நீர் தேங்கும் பகுதிக்குள் வரும் நிலையில் அது குறித்து போலியான அறிக்கை வெளியிட்ட சர்வே ஆஃப் இந்தியாவை கண்டித்தும் இன்று முற்றுகை போராட்டத்தை நடத்தி இருக்கிறோம். கூடுதலாக வேறொரு தகவலும் கிடைத்திருக்கிறது. 12 மாதங்கள் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யும் காலத்தில், அணையினுடைய நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்பதற்காக கேரளா மறுபடியும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட இருப்பதாக அறிகிறேன்.

அந்த மனிதக் கடவுள் மாமனிதர் கர்னல் பென்னிகுயிக் நமக்கு கட்டிக் கொடுத்த முல்லைப் பெரியாறு அணை என்று ஒன்று இல்லாவிட்டால், கம்பம் பள்ளத்தாக்கு முதல் ராமநாதபுரம் கடைமடை வரை பாலைவனமாக மாறும் என்பதை மறந்து விடாதீர்கள். கேரளாவில் பெரியாறு அணைக்கு எதிராக நடக்கும் விஷம பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story