138 அடியை தாண்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

138 அடியை தாண்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
X

முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியை தாண்டியுள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரம் முல்லைப்பெரியாறு அணை. இந்த முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னரும், அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த விடாமல் கேரள அரசு தடுத்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ரூல்கர்வ் முறை கொண்டு வந்தது.

இதனால் மழைக்காலங்களில் நீர் மட்டத்தை உயர்த்த வாய்ப்பு உள்ள நேரங்களில் எல்லாம் உயர்த்த முடியாத நிலை உருவாகி விட்டது. கடந்த ஆண்டு இந்த பிரச்னை தீவிரம் அடைந்தது. விவசாயிகள் ரூல்கர்வ் முறைக்கு எதிராக போரடியும் பலனில்லை.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் நல்ல முறையில் கிடைத்தும் ரூல்கர்வ் காரணமாக நீர் மட்டத்தை 142 வரை கொண்டு செல்ல முடியவில்லை. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. ஆரம்பம் முதலே வடகிழக்கு பருவமழை பெரியாறு அணை பகுதியில் குறைவாக பெய்து வருகிறது. இதில் கேரளா திருடியது போக மீதம் விநாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி முதல் இரண்டாயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே பெரியாறு அணைக்கு வந்து கொண்டுள்ளது.

இந்த குறைந்த நீர் வரத்திலும் மெல்ல மெல்ல அணை நீர் மட்டம் உயர்ந்து 138 அடியை தாண்டி உள்ளது. வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர் மட்டம் 142 அடியை எட்டும் வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் கேரளாவில் முல்லைப்பெரியாற்றின் கரையில் வசிக்கும் வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு பகுதி மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து கேரளா நாடகத்தை தொடங்கி உள்ளது.

இதற்கு தமிழக விவசாயிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். கூடலுார் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தலைவர் கொடியரசன் கூறியதாவது:

உண்மையில் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் எவ்வளவு சென்றாலும், வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காரணம் முல்லைப்பெரியாறு நீர் செல்லும் படுகைகள் எல்லாம் மிகவும் பள்ளத்தில் உள்ளன. வல்லக்கடவும், வண்டிப்பெரியாறும் ஆற்றுப்பகுதிகளில் இருந்து மிகவும் உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த உண்மையை கேரளா அறிந்தும் வேண்டும் என்றே கேரளா சில குடும்பத்தினரை ஆற்றின் கரையோரம் வீடுகள் கட்டி வசிக்க ஏற்பாடுகளை செய்தது. இந்த வீடுகளை ஒட்டி தண்ணீர் செல்வது போல் வீடியோ, போட்டோ எடுத்து பிரிண்டிங் மீடியா செய்திகளிலும், டிஜிட்டல் மீடியா செய்திகளிலும் வெளியிட்டது. சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது. மாறாக அந்த ஆக்கிரமிப்புகளை நொடிப்பொழுதில் அகற்றி அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்திருக்க முடியும்.

கேரள அரசு திட்டமிட்டே இந்த நாடகத்தை அரங்கேற்றி முல்லைப்பெரியாறுக்கு இடையூறு செய்து வருகிறது. தனது நாடகத்தின் ஒரு பகுதியாக இப்போது இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பதன் மூலம், முல்லைப்பெரியாறு அணையின் மொத்த நீர் மட்ட உயரமே 142 அடி தான் என்பதை சட்ட ரீதியாக உறுதிப்படுத்த கேரளா முயன்று வருகிறது. தமிழக அரசு இதில் உள்ள சதித்திட்டத்தை புரிந்து கொண்டு இதனை முறியடிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதற்காக கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டி வரும். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story