முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: செப். 30ல் உச்சநீதிமன்றத்தில் என்ன நடக்கும்?
குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்திய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள், நடுவில் நிற்பவர் ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக்.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் ச.பென்னிகுயிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வயநாடு நிலச்சரிவுக்கு பின், ஒட்டுமொத்த கேரளாவின் கவனமும், முல்லைப் பெரியாறு அணை மீது திரும்பி இருக்கும் நிலையில், ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு நெருக்கடியை தமிழகம், உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப் போகிறது.
எப்படியாவது முல்லைப்பெரியாறு அணையை உடைத்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில், கேரளா நடத்தும் நாடகங்களை, தமிழக முதல்வர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை.
1886 ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி, திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும், சென்னை ராஜதானியின் பிரிட்டிஷ் இந்திய செயலாளருக்குமிடையே, 999 ஆண்டுகளுக்கு, குத்தகை பத்திரம் உருவாக்கப்பட்டு, ஆண்டு வாடகையாக 40 ஆயிரம் ரூபாய், அதாவது ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் செலுத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டு 800 ஏக்கர் நிலம் நீர் தேங்கும் பகுதிக்காகவும், 100 ஏக்கர் நிலம் அணை கட்டுமான பகுதிக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தம் அச்சுத மேனன் கேரள முதல்வராக இருந்தபோது புதுப்பிக்கப்பட்டது. அன்றைக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட தமிழக முதல்வர் எம்ஜிஆர். ஏக்கருக்கு ஐந்து ரூபாயாக இருந்த வாடகை, 30 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
மிக கவனமாகவும், பொறுப்பாகவும் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை தான், இப்போது கேரளா கேள்விக்குறியாக்கி இருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதியான ஆனவச்சாலில், கார் பார்க்கிங் அமைக்க பெரியார் புலிகள் காப்பகம் முடிவு செய்த போது ஏற்பட்ட பிரச்சனை, இன்றைக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்து இருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு, அணையின் நீர் தேங்கும் பகுதியும், குத்தகை நிலமுமான ஆனவச்சாலில், பெரியார் புலிகள் காப்பகம் 2.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து,மெகா கார் பார்க்கிங் அமைத்த போதே தமிழகம்,கேரளஅரசின் நடவடிக்கைகளை உடைத்தெறிந்திருந்தால், இந்த பிரச்சினையே வந்திருக்காது. நமது அளவு கடந்த மௌனத்தின் வெளிப்பாடு தான் இந்த நிலைமைக்கு நம்மை கொண்டு சென்றிருக்கிறது.
ஆனவச்சால் கார் பார்க்கிங் தொடர்பாக தமிழகம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கெட்டியாக பிடித்துக்கொண்ட கேரளா, 1886 முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
கேரளா சார்பில் ஆஜராகியிருக்கு மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ஜி.பிரகாஷ் வழக்கை கொண்டு செல்லும் விதம் கடுமையாகவே இருக்கிறது. கூடுதலாக ஆனவச்சால் கார் பார்க்கிங் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 2023 ல் தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கில், இந்திய நிலஅளவை துறையை அளவீடு செய்யப்பணித்தது உச்சநீதிமன்றம்.
இந்திய நிலஅளவை துறை அதிகாரிகள் குமுளியை வந்தடைந்த போது, கேரள மாநில அரசு மூன்று சிறப்பு பொறியாளர்களை தேர்ந்தெடுத்து, இந்திய நிலஅளவை துறை அதிகாரிகளின் உடன் இருக்க பணித்தது. மூன்று அதிகாரிகளின் பெயருடன் கூடிய கடிதத்தை தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கும் கேரளா அனுப்பி வைத்தது.
ஆனால் அந்த ஆனவச்சால் அளவு விவகாரத்தில், கடைசிவரை தமிழகம் யாரையும் பொறுப்பாக இந்திய நிலஅளவை துறையுடன் இருப்பதற்கு பணிக்கவில்லை. கேரளத்தின் சார்பில் ஆனவச்சால் வந்த மூன்று பொறியாளர்களும் கவனமாக அதிகாரிகளுடன் பணி செய்ய, அங்கே குருப் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் தமிழகத்தின் சார்பாக பங்கேற்ற நம் செயற்பொறியாளர் சாம் இர்வின்.
1886ல் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆனவச்சால் கார் பார்க்கிங் பகுதி, குத்தகை நிலத்தில் வருகிறது என்று நிரூபித்து, அதன் வரைபடத்தை அரசிடம் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறோம். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஒழுங்குடன் நடந்து கொள்ளவேண்டிய இந்திய நிலஅளவை துறை அதிகாரிகள், கேரளாவின் செல்லப் பிள்ளைகளாக மாறி, 1886 வரைபடத்தையே போலியாக்க முயற்சித்த நடவடிக்கையை, நீதிமன்றத்தில் தமிழக அரசு அம்பலப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட குத்தகை உரிமையில், கேரள மாநில அரசு தலையிடுகிறது என்பதோடு, ஒப்பந்தத்தையும் அது கேள்விக்குறியாக்குகிறது என்பதை, நீதிமன்றத்தில் நிரூபிக்க நாங்களும் துணை நிற்போம்.
மாநில மறுசீரமைப்பு சட்டம் மற்றும் குத்தகை ஒப்பந்தங்கள் கேரள மாநில அரசிடம் சிக்கி சின்னாபின்னமாவதை உச்சநீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும். திருவிதாங்கூர் மகாராஜா, இந்தியா டொமினியனில் சேர்வதற்கு முன்பு, இந்த ஒப்பந்தத்தை கண்டித்ததாக கதை விடுகிறது கேரளா. ஆனால் இந்திய டோமினியனில் சேர்வதற்கு முன் நிபந்தனையாக, இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால், கண்டிப்பாக ஒப்பந்தம் ரத்தாகி இருக்கும். ஏன் திருவிதாங்கூர் மஹாராஜா அதை செய்யவில்லை என்று கேரள மாநில அரசை நோக்கி கேட்கிறேன், பதில் இருக்கிறதா?
கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி, குத்தகை பத்திரத்தின் செல்லுபடியை மறு ஆய்வு செய்யும் வழக்கை எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், எட்டுவார காலங்களுக்குள் இரண்டு மாநில அரசுகளும் குத்தகை பத்திரம் தொடர்பாக தங்களிடம் இருக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
கூடுதலாக வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பட்டியலிடப்பட்டு இருக்கும் இந்த வழக்கு, தமிழகத்திற்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். குத்தகை ஒப்பந்தம் தொடர்பாக விரிவாக பரிசீலிப்பதாக நீதியரசர்கள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறி இருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பேபி அணையை பலப்படுத்தி விட்டு, 152 அடியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று அரசியல் சாசன அமர்வு கூறியதையே கேள்விக்குறியாக்கும். வழக்கில் மேத்யூ நெடும்பரா மற்றும் கேரள மாநில அரசின் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் ஜி பிரகாஷ் மற்றும் ஜெய்தீப் குப்தா ஆகியோரின் வாதங்களை, ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்ட முறையில் தமிழ்நாடு அரசு பைசல் செய்ய வேண்டும்.
2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதி அரசர் ஆர் எம் லோதா, நீதி அரசர் ஹெச் எல் தத்து, நீதி அரசர் சந்திர மௌலி கே ஆர் பிரசாத், நீதி அரசர் மதன் பி லோகூர், மற்றும் நீதியரசர் எம் ஒய் இக்பால் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கொடுத்த தீர்ப்பே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இறுதியானது என்பதை தமிழக அரசு தன்னுடைய வழக்கறிஞர்களின் வாதத் திறமையின் மூலம் நிரூபிக்க வேண்டும்.
ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு போகிற போக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் கேரள மாநில அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசு இந்த விஷயத்தில் துரிதமாகவும், துல்லியமாகவும் செயல்பட வேண்டும் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu