கிடுகிடுவென சரியும் முல்லைப்பெரியாறு அணை நீர்..! வறட்சியில் சிக்குமா தமிழகம்.?
தேனி சத்திரப்பட்டியில் நெல் நடவுப்பணிகள் நிறைவு பெற்று ஒரு வாரம் ஆன நெல் வயல்கள்.
தென்மேற்கு பருவமழை முழுமையாக கை விட்ட நிலையில், தேனி மாவட்டத்திலும் ஆங்காங்கே வறட்சி தென்படத் தொடங்கி உள்ளது. பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், அணைக்கு நீர் வரத்து முழுமையாக நின்று போனது. அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், பாசன தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 118.40 அடியாக குறைந்துள்ளது.
நீர் வரத்து இல்லாமல், நீர் திறப்பு மட்டும் உள்ளதால் நீர் மட்டம் மிக வேகமாக குறையும் அபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடி நிலங்களில் கூடலுார், கம்பம் பகுதியில் ஒரு மாதம் முன்பே நடவுப்பணிகள் முடிந்தாலும், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் கடந்த வாரம் தான் நெல் நடவுப்பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே இந்த பகுதிகளுக்கு இன்னும் 3 மாதங்களுக்கு தண்ணீர் தேவை உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் நான்கு நாட்களுக்கு ஒரு அடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
இப்படியே குறைந்தால் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. மிகவும் சிக்கலான இந்த சூழலில் தண்ணீரை மிக, மிக சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறி வருகின்றனர். வைகை அணை நீர் மட்டம் 47.10 அடியாக குறைந்துள்ளது.
வைகை அணைக்கும் நீர் வரத்து முழுமையாக இல்லை. அணையில் இருந்து மதுரை குடிநீர் மட்டும் ஆண்டிபட்டி- சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 69 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் தேனி மாவட்டமும், தற்போது கடும் வறட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. தேனி மாவட்டமே வறட்சியில் சிக்கினால், தமிழகத்தின் இதர பகுதிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu