140 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு அணை..!

140 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு அணை..!
X

பெரியாறு அணை.

முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 140 அடியை நோக்கி உயர்ந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியினை விட 50 சதவீதம் அதிகம் பெய்தது. அதுவும் டிசம்பர் மாதம் முழுக்க மழைப்பொழிவு இருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் பெய்த மழை பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது.

இதனால் தேனி மாவட்டம் முழுவதும் ஆறுகள், ஓடைகள், நீர் வீழ்ச்சிகள், அருவிகள், கண்மாய்கள் என எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயமாக இருந்தது. முல்லைப்பெரியாறு அணை ஒரே நாளில் 3 அடியும், வைகை அணை ஒரே நாளில் 5 அடியும் உயர்ந்தது. அப்போது பெய்த மழையினால் இப்போது வரை நீர் வரத்து நல்ல முறையில் உள்ளது.


வைகை அணை நீர் மட்டம் 70 அடியை தொட்டு விட்டது. இப்போதும் அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3699 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. பெரியாறு அணை நீர் மட்டம் 139.25 அடியை கடந்து விட்டது. அதாவது கிட்டத்தட்ட 140 அடியை நெருங்கி விட்டது. அணைக்கு விநாடிக்கு 2518 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 105 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் உள்ளன. உண்மையில் நான்கு நாட்களுக்கு முன்னர் பெய்த பலத்த மழை தேனி மாவட்டத்திற்கு கிடைத்த ஜாக்பாட் என்றே கூறலாம். காரணம் இந்த மழையால் எந்த பகுதியிலும், எந்த சேதமும் இல்லை. அதேநேரம் தண்ணீர் தேவைக்கு ஏற்ப சேமிக்கப்பட்டு விட்டது. இதனால் மாவட்டத்தின் நீர் வளம் நிம்மதியான ஒரு சூழலை எட்டி உள்ளது என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story