இன்று 142 அடியை எட்டுகிறது முல்லை பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.
முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் கடந்த ஆண்டு பல முறை 142 அடியை எட்டியது. இந்த ஆண்டு மழை கடந்த ஆண்டு அளவு போல் அதிகம் இல்லை. ஆனால் பரவாயில்லை என்ற நிலையில் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் நல்ல முறையில் கிடைத்தது. வடகிழக்கு பருவமழை தான் சுமாராக பெய்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து இருந்தாலும், இதுவரை அணையின் நீர்மட்டம் 142 -அடியை எட்டவில்லை.
நடவுப்பணிகள் முடிந்து ஒரு மாதத்தை கடந்த நிலையிலும், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 140க்கு மேல் தான் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், அணை நீர் மட்டம் 142-அடியை எட்ட வேண்டும். முல்லைப்பெரியாறு அணையில் நமது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என விரும்பினர்.
இந்நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் 141.80 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் 141.95 அடியாக உயர்ந்தது. இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி மழை நிலவரம்: (மழை எட்டு மணி வரை தொடர்ந்தது. இன்று காலை 6 மணிக்கு மேல் பதிவான மழையளவு நாளை காலை தான் தெரியும்). ஆண்டிபட்டியில் 17 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 1.2 மி.மீ., வீரபாண்டியில் 2.2 மி.மீ., போடியில் ஒரு மி.மீ., உத்தமபாளையத்தில் 2.6 மி.மீ., கூடலுாரில் 2.4 மி.மீ., பெரியாறு அணையில் 1.4 மி.மீ., தேக்கடியில் 13 மி.மீ., சண்முகாநதியில் 4.6 மி.மீ., மழை பதிவானது.
இந்த மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு விநாடிக்கு 700 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. மழை தொடர்வதால், இந்த நீர் வரத்து தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் நீர் மட்டமும் உயர்ந்து இன்று காலை பத்து மணிக்குள் 142 அடியை எட்டும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வைகை அணை நீர் மட்டம் 63.45 அடியாக உள்ளது. வைகை அணைக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 1269 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோத்துப்பாறை அணை தனது முழு கொள்ளவான 126 அடியை எட்டியே நிற்கிறது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் நான்கு மாதங்களாகவே 126 அடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மஞ்சளாறு அணையும், சண்முகாநதி அணையும் முழு அளவில் நிரம்பி நிற்கிறது.
அணைகளின் நீர் மட்டம் மட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள அத்தனை கண்மாய், குளங்களும் முழு அளவில் நிரம்பி காணப்படுகிறது. மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. . எனவே வரும் 2023ம் ஆண்டு தொடக்கமே மாவட்டத்தில் சிறப்பாக இருக்கும். விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமான நீர் உள்ளது என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu