முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை சீண்டும் கேரள அமைப்பு.. பதிலடிக்கு தயாராகும் தமிழக விவசாயிகள்..

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை சீண்டும் கேரள அமைப்பு.. பதிலடிக்கு தயாராகும் தமிழக விவசாயிகள்..
X

சேவ் கேரளா முகநுால் பக்கத்தில் வெளியான விளம்பரம்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் கேரளா அமைப்பின் நிர்வாகியின் முகநூல் பக்கப் பதிவு தற்போது சரச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கும், தமிழகத்திற்கும் தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் வேலைக்கு வாங்க என ஒரு பதிவை சேவ் கேரளா என்ற அமைப்பின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது பல்வேறு சர்சைகளை கிளப்பி உள்ளது. இந்த அறிவிப்பைக் கண்டு முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக திகழ்வது சேவ் கேரளா என்ற அமைப்பு தான். கேரளாவில் இயங்கும் சேவ் கேரளா என்ற அமைப்பினை ரசல் ஜோய் (ரசல் நோய் என தமிழக விவசாயிகள் குறிப்பிடுவது வழக்கம்) என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் முல்லைப் பெரியாறு அணை பலகீனமாக உள்ளது. அதில் இருந்து கேரள மக்களை பாதுகாக்க வேண்டும் என பொய் பிரச்சாரம் செய்து, கேரள தொழிலதிபர்களிடமும், வெளிநாடு வாழ் கேரள மக்களிடமும் பணம் வசூலித்து பெரிய அளவில் செல்வ வாக்கோடு திகழ்கிறார். இதனால், அவரது முழு நேர பணியே முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பது மட்டும் தான்.

அவரது பேச்சை கேட்டு தமிழக விவசாயிகள் கொந்தளித்தாலும், தமிழக அரசு இப்படி ஒரு நபரை என்ன செய்ய முடியும் என கண்டு கொள்வதில்லை. இதனை விட முக்கிய காரணம் அந்த நபருக்கு கேரள அரசின் மறைமுக ஆதரவும் உண்டு. இதனால் எந்த தடையும் இன்றி மனதில் உதித்ததை எல்லாம் பேசும் ரசல் ஜோயின் முகநுால் பக்கத்தில் இப்போது ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் ''வேலை வாய்ப்பு அறிவிப்பு'', தகுதி: எஸ்.எஸ்.எல்.சி., மாதச் சம்பளம் 60,000 ரூபாய். சாப்பாடு, தங்கும் இடம் இலவசம். வேலை: முல்லைப்பெரியாறு அணை உடையாமல் தாங்கிப்பிடிப்பது. இடம்: முல்லைப் பெரியாறு, இடுக்கி மாவட்டம். எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை பார்த்ததும் வழக்கம் போல் கொந்தளித்த தமிழக விவசாயிகள், நாம் இந்த வேலைக்கு விண்ணப்பித்தால் என்ன என கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர். சிலர் ''வாங்க...! வாங்க...! முல்லைப்பெரியாறு அணைக்கு வேலைக்கு போகலாம்'' என தங்களுக்குள் நையாண்டி செய்து வருகின்றனர்.

ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்னையில் வரம்பு மீறி விளையாடும் ஒரு தனிநபரை ஊக்குவிக்கும் கேரள அரசை, தமிழக அரசும் தட்டிக் கேட்கவில்லை. மத்திய அரசும் வேடிக்கை பார்க்கிறது. சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை. அது ஜனநாயகமும் இல்லை. ஆனால் 'தனியாக கேட்டால் தகராறு, கும்பலாக கேட்டால் வரலாறு' என்ற வார்த்தைகளையும் மத்திய, மாநில அரசுகள் மறந்து விடக்கூடாது.

வரலாற்றை மாற்றி எழுத தயங்கவே மாட்டோம். அந்த சூழல் உருவாகாமல் பார்த்துக் கொள்வது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும் என தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர் கடந்த 2011-ஐ மறந்து விட வேண்டாம் எனவும் எச்சரிக்க தொடங்கி உள்ளனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers