முல்லை பெரியாறு: இரண்டு நாள் அவகாசம் கொடுத்த விவசாயிகள்
முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க தலைவர் எஸ்.ராஜசேகர், முதன்மை செயலாளர் இ.சலேத்து, பொதுச் செயலாளர் பொன்காட்சி கண்ணன், பொருளாளர் எஸ்.பி., லோகநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
1979-ஆம் ஆண்டு ஆரம்பித்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. மொத்தமாக 10 டிஎம்சி கூட இல்லாத பெரியாறு தண்ணீருக்காக தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 10 லட்சம் விவசாயிகள் ஆண்டுதோறும், கண்ணீரும் கம்பலையுமாக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை, புராதன நகரங்களான சிவகங்கை மற்றும் இராமநாதபுரம், விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்ட தேனி மாவட்டம் என அத்தனையும் அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கிறது. உச்சநீதிமன்றம் 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தெளிவான தீர்ப்பை கொடுத்தும் கூட பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியவில்லை. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை முழுக்க முழுக்க அரசியலாக்கிய கேரள அரசியல்வாதிகளின் அடாவடிகளால், தெளிவான தீர்ப்பை நோக்கி நகர்வதற்கு நம்மாலும் முடியவில்லை.
உச்சநீதிமன்றம் பேபி அணையை பலப்படுத்தி விட்டு, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்று தெளிவுபடுத்தி விட்ட பின்னரும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணைக்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது தான் கொடுமையின் உச்சம். அப்படியானால் உச்ச நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டது சுற்றுச்சூழல் அமைச்சகமா அல்லது சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கட்டுப்பட்டது உச்சநீதிமன்றமா என்ற அடுத்த கேள்வி எழுகிறது.
ஜனநாயகத்தைப் பேணிக்காக்கும் உச்சபட்ச நடவடிக்கையில் தமிழகம் பொறுமை காத்து நிற்க, ஜனநாயகத்தை அப்பட்டமாக மீறும் எதேச்சாதிகார நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது கேரளா என்பதை நாடு அறியாமல் இல்லை. உச்ச நீதிமன்றம் தன்னுடைய உச்சபட்ச அதிகாரத்தை நிலைநாட்டி இருக்க வேண்டும். ஏன் பாராமுகமாக இருக்கிறது என்கிற அடுத்தடுத்த கேள்விகள் நம்முன் நஞ்சாய் குத்தி நிற்கிறது.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது தமிழகம். ஆனால் போகிற போக்கில் மலையாளி ஒருவரால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படக் கூடிய ஒரு மனுவிற் காக இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது என்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட இழுக்காகவே நினைக்கிறோம். கேரள மக்களின் பாதுகாப்பு என்கிற அறிவிலித்தனமான காட்டுக்கூச்சல்களை முப்பதாண்டுகள் எழுப்பியதன் விளைவு ,ஐந்து மாவட்டங்களில் வாழும் 90 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்திலும் பெரியாறு பாசன கண்மாய்களில் வேலிக்கருவை மண்டிக் கிடக்கும் அவலநிலை கடந்த 25 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. முல்லைப்பெரியாறு தான் எங்கள் வாழ்க்கை. முல்லைப்பெரியாறு தான் எங்களுடைய ஜீவனம். 126 ஆண்டுகளாக கண்ணின் மணி என நாங்கள் பொத்திப்பாதுகாத்த பெரியாறு அணையை உங்களுடைய பாதுகாப்பு என்கிற முட்டாள்தனமான நடவடிக்கைகளால் இடிக்க முற்படுவீர்களானால், இந்த நாடு மறுபடி ஒரு மொழிவழிப் பிரிவினையை சந்திக்க நேரிடும் என்பதில் தயக்கம் ஏதுமில்லை.
எங்கள் மாநில அரசு தெளிவாக இருக்கிறது. அதனுடைய நடவடிக்கைகளுக்காக ஐந்து மாவட்ட விவசாய சங்கம் காத்திருக்கிறது. நடவடிக்கை தாமதமாகும் பட்சத்தில் நேரடியாக களத்தில் இறங்குவோம். மானமும் ரோஷமும் நிரம்பப் பெற்றவர்களானால், தமிழகத்தில் இருந்து வரும் உணவுப்பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் கேரளா நிறுத்த வேண்டும். இடதுசாரிகள் எப்போதுமே மிகுந்த ஆபத்தானவர்கள் என்பதை தோழர் பினராயி விஜயன் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். கடந்த மாதம் உச்சநீதிமன்றம் சொன்ன ஒரு விடயத்தை நினைத்து பார்க்க விரும்புகிறேன்...முல்லைப் பெரியாறு அணை மீதான தனி நபர் வழக்குகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெளிவாக அறிவித்த பின்னர் எந்த அடிப்படையில் இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினரின் மனுவை ஏற்றுக் கொண்டது என்பது புரியாத புதிராக இருக்கிறது. மத்திய நீர்வள ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மலையாள கைக்கூலிகள் என முல்லைப் பெரியாறு அணையை அப்புறப்படுத்த எவர் வந்தாலும் முட்டி நிற்போம், மோதிப் பார்ப்போம்.
தமிழகத்திலே தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டிருக்கும் மலையாள மக்களே உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள். நீங்கள் இனி இங்கு வாழக்கூடிய தகுதியை இழந்து விட்டீர்கள். கேரளாவிலே காலங்காலமாக கூலிகளாக வாழும் தமிழர்களும் தங்கள் தாயகத்தை நோக்கி வரவேண்டும். 2011 ல் நடந்த பிரளயத்தை மறுபடியும் கேரளா சந்திக்க கூடும் என்று நினைக்கிறோம். இரண்டொரு நாட்களில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த விடயத்தில் தக்க நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் பட்சத்தில்....காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஐந்து மாவட்ட விவசாய சங்கம் முன்னெடுக்க இருக்கிறது என்பதை அறிவிப்பாக தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம். வேறு வழி தெரியவில்லை எங்களுக்கு...நன்றி இவ்வாறு கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu