'வைட்டமின்-டி' குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்

வைட்டமின்-டி குறைபாட்டால் எலும்பு வலிமை இழக்கும் மலைக்கிராம மக்கள்
X
பைல் படம்.
தமிழகம் முழுவதும் மலைக்கிராம மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

நமது வாழ்வியல் முறைகளில் வயது கூடக்கூட எலும்பில் கால்சியம் குறைபாடு அதிகரிக்கும். இதனால் எலும்பு வலுவிழந்து லேசாக வழுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும். குறிப்பாக வயதானவர்களுக்கு எலும்பு முறிந்தால் அவர்கள் நிலைமை மோசமாக இருக்கும். நமது உடம்பில் ஏற்படும் 'வைட்டமின்-டி' குறைபாடே கால்சியம் சத்து குறைந்து இப்படி சிறு விபத்துகளுக்குக்கூட எலும்பு முறிவு ஏற்பட காரணமாகிறது.

இந்த விஷயத்தை வைத்தே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் 'வைட்டமின்-டி' நிறைந்த உணவுகள் என வியாபாரத்தில் இறங்கிவிட்டனர். வழக்கமாக நிலப்பரப்பில் 70 வயது முதியவர்கள் அல்லது மூதாட்டிகளுக்கு வரும் 'வைட்டமின்-டி' குறைபாடு மலைக்கிராமங்களில் வசிப்பவர்களுக்கு அவர்களின் நடுத்தர வயதிலேயே வந்து விடுகிறது.

காரணம் மலைக்கிராமங்களில் பெரும்பாலும் வெயிலின் தாக்கம் இருப்பதில்லை. வெயில் மூலம் கிடைக்கும் வைட்டமின் டி தான் மிகவும் பரிசுத்தமானது. உடலுக்கு மிக, மிக ஏற்றது. மலைக்கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இந்த வெயில் கிடைப்பதில்லை. குறைந்தபட்சம் ஒரு மனிதன் தினமும் ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை வெயிலில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி வெயிலி்ல் இருப்பவர்களுக்கு 'வைட்டமின்-டி' குறைபாடு ஏற்படுவதில்லை. ஆனால் மலைக்கிராமங்கள் பெரும்பாலும் வெயில் இல்லாமலோ அல்லது மேகமூட்டத்துடனோ காணப்படும். அருமையான இயற்கை சூழல் என இதனை ரசித்து வாழும் மக்கள் தங்கள் உடலில் வலுவை இழந்து விடுகின்றனர்.

இது தவிர, நிலப்பரப்பில் கீரைகள் அதிகம் விளையும். முட்டையும், பாலும் தாராளமாக கிடைக்கும். இவை மூன்றும் சாதாரண நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு எளிதில் ஜீரணமாகும். ஆனால் மலைக்கிராமங்களில் பால், முட்டை கூட சரியாக கிடைக்காது. அங்குள்ள பருவநிலைக்கு முட்டை ஜீரணமாகாது. வயிற்று கோளாறு ஏற்படும் என்பதால் பலரும் முட்டையினை தவிர்த்துவிடுகின்றனர். பால், டீ, காபி கூட குடிப்பதில்லை. மாறாக பிளாக் டீ, பிளாக் காபி குடிக்கின்றனர்.

எல்லாவற்றையும் விட பெரும் பிரச்னை, சாதாரண நிலப்பரப்பில் வளரும் கீரைகள் கூட மலைக்கிராமங்களில் விளைவதில்லை. அங்கு ஓரிரு வகை கீரைகளே கிடைக்கின்றன. இப்படி வாழ்வியலில் 'வைட்டமின்-டி' உடலில் சேர தேவைப்படும், பால், முட்டை, கீரை வகைகள், சூரியஓளி என நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் எதுவும் மலைக்கிராம மக்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு கடுமையான 'வைட்டமின்-டி' குறைபாடு ஏற்பட்டு, எலும்பின் வலுவை இழக்கின்றனர். இதன் மூலம் பல கடும் இடற்பாடுகளில் எளிதில் சிக்கி விடுகின்றனர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!