குரங்கணியில் டிரக்கிங் அழைத்துச் செல்ல வழிகாட்டிகளாக மலைவாழ் மக்கள்
குரங்கணி மலையேற்றம் - கோப்புப்படம்
குரங்கணி என்பது தமிழ்நாட்டில் உள்ள போடிநாயக்கனூருக்கு அருகில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாழிடம் ஆகும். இந்த மலைப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தென்னை, மா, மசாலாப் பொருட்கள், காப்பி போன்றவை வளர்க்கப்படுகின்றன.
குரங்கணி மலையானது மலையேற்றம் மற்றும் இயற்கை நடைப்பயிற்சிக்கு ஏற்றது. குரங்கணி மலையின் மைய கிராமத்தில் இருந்து 12 கி.மீ நடக்கும் தொலைவில் டாப் ஸ்டேஷன் உள்ளது. கேரளத்தில் உள்ள மூணாறுக்கு இங்கிருந்து, அடர்ந்த வனப்பகுதிகளையும், புல்வெளிகளையும் கடந்து நடந்தே செல்ல முடியும்.
குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வரை டிரக்கிங் செல்லும் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற வர மலைவாழ் மக்கள் வழிகாட்டிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வனத்திற்குள் பாதை மாறிச் செல்லும் பயணிகளை கைது செய்ய வனத்துறையின் சார்பில் ரோந்து பணிகளும் நடந்து வருகின்றன.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் பாதை மாறி டிரக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் 22 பேர் 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்தில் சிக்கினர். அதன் பின்னர் டிரக்கிங் செல்லும் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆன்லைனின் விண்ணப்பங்கள் பெற்று, ஆதார் எண் உட்பட முழு விவரங்களையும் ஆன்லைன் மூலம் தேனி மாவட்ட வனத்துறைக்கு அனுப்பி ஒரு நபருக்கு 350 ரூபாய் கட்டணம் கட்டி டிரக்கிங் செல்ல வேண்டும். இவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வர மலைவாழ் மக்கள் வழிகாட்டிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வனம் தொடர்பான அத்தனை அபாயங்களும் தெரியும். அதில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் வழிமுறைகளும் தெரியும். இவர்களுக்கு தினசரி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது குரங்கணி- சென்ட்ரல்- டாப்ஸ்டேஷன் வரை 11.4 கி.மீ., துாரம் டிரக்கிங் நடந்து வருகிறது. இந்த பாதைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இங்கு நடந்து செல்ல குறைந்தபட்சம் 4 மணி நேரம் வரை ஆகும். டாப்ஸ்டேஷன் செல்பவர்கள் அப்படியே மூணாறுக்கு சென்று விடுகின்றனர். திரும்ப வர நினைப்பவர்கள் மீண்டும் அதே துாரம் நடந்து வர வேண்டும். இதனால் பெரும்பாலும் டிரக்கிங் செல்பவர்கள் குரங்கணியில் இருந்து சென்ட்ரல் வரை சென்று விட்டு திரும்பி விடுகின்றனர்.
வழியில் அவர்களுக்கு குடிநீர் கிடைக்கும். உணவு, மற்றும் தின்பண்டகளை பயணிகளே கொண்டு செல்ல வேண்டும். கடந்த மழைக்காலங்களில் அனுமதி இல்லை. மற்ற நேரங்களில் டிரக்கிங் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் மலைவாழ் மக்கள் அல்லது வனத்துறையினர் அனுமதி இல்லாமல் தனியாக செல்லவே கூடாது.
விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் பயணிகள் இந்த விதிமுறைகளை பின்பற்ற முடியாமல் தவிக்கின்றனர். குரங்கனியை பொறுத்தவரை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பயணிகள் அதிகம் வருவார்கள். ஆனால் இது கடுமையான மழைக்காலம் என்பதால் அனுமதிக்க முடியாது. கடும் வெயில் காலங்களிலும் அனுமதிக்க முடியாது. எனவே டிரக்கிங் வருபவர்கள் எக்காரணம் கொண்டும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, வனத்துறை, மலைவாழ் மக்கள் உதவியோடு சென்று வரலாம்.
தற்போது டிரக்கிங் செல்ல விரும்பும் பயணிகள் அனுமதிக்கப்பட்ட பாதையில், வழிகாட்டிகளுடன் சென்று வந்தால் எந்த பிரச்னையும் இருக்காது. சிலர் இன்னமும் குரங்கணி, கொழுக்குமலை, பீச்சாங்கரை, கொட்டகுடி பகுதிகளில் பாதை மாறி அடர்ந்த வனத்திற்குள் செல்கின்றனர். இவர்களை செல்ல விடாமல் தடுக்க இப்பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், பாதை மாறி வனத்திற்குள் சென்றால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கூறினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu