எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அதிகபாடல்கள் கண்ணதாசன் எழுதியவை

எம்.ஜி.ஆர் நடித்த படங்களில்  அதிகபாடல்கள்  கண்ணதாசன் எழுதியவை
X

பைல் படம்

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம் பெற்றுள்ளன

கண்ணதாசன் பாடல்களை எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே.ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த 'மர்மயோகி' படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த 'நேற்று, இன்று, நாளை' படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான 'உரிமைக்குரல்' படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த 'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனையும் இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூகமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன் என்ற கவியரசர் என்பதை இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்? நினைத்துப் பாருங்கள்! சிந்தனைக்குச் சில துளிகள்!

கவியரசர் கண்ணதாசன் 1961 – ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஒன்பதாம் தேதி, தி.மு.கழகத்தை விட்டு, விலகிச் சென்றுவிட்டார். கழகத்தை விட்டு, விலகிச் சென்ற கவியரசர்; கழகத் தலைவர்கள் பற்றியும், அவர்கள் அடைய விரும்பிய திராவிட நாடு கொள்கை பற்றியும், திராவிட நாடு கொள்கையை அவர்கள் கைவிட்டது பற்றியும்; நாட்டையாளும் நிலையில் நாற்காலிகளில் அவர்கள் அமர்ந்தால் நேரக்கூடிய அவலங்கள் பற்றியும் ஏராளமாக எழுதினார், மேடை முழக்கங்களும் செய்தார்.

இவற்றையெல்லாம் தனது இதயத்தின் ஒரு பகுதியில் இருத்திக் கொண்ட மக்கள் திலகம்; தனது படங்களில் கண்ணதாசன் பாடல்கள் எழுதக்கூடாது என்று, எந்தத் தயாரிப்பாளரிடமும் கட்டளை பிறப்பித்ததில்லை.இதனால் தான் தேவர் பிலிம்ஸ் தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த அனைத்துப் படங்களுக்கும் (ஒன்றிரண்டு தவிர) கண்ணதாசனே பாடல்களை எழுதிக் குவித்தார்.

பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர். பந்துலு தயாரித்த, எம்.ஜி.ஆர்., நடித்த படங்களுக்கும்; ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர்., ராமண்ணா தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும் கண்ணதாசனே பெரும்பாலும் பாடல்களை எழுதினார். இதற்கெல்லாம் காரணம், எம்.ஜி.ஆர் என்ற கலைஞானி, கண்ணதாசன் என்ற கவிஞரிடம் இருந்த கவித்துவத்தின் மீது செலுத்திய கவிப்பற்றும், கலைப்பற்றுமே எனலாம்.

திராவிட இயக்கத்தில் இருந்த போது கண்ணதாசன் எழுதிய 'அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!'என்ற பாடலை, தான் பயணம் செய்யும் வண்டியிலேயே எப்பொழுதும் கேட்கும் வண்ணம், கைவசம் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்பதனை, அவரே சொல்லக் கேட்டிருக்கின்றோம்.இந்த அளவிற்குக் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மீது, தனது எண்ண அலைகளின் தாகத்தைத் தக்கவைத்துக் கொண்டவரே எம்.ஜி.ஆர். என்பதனை நாடு நன்கறியும்!

எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக் கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரது படங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திட அனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின் மூல இரகசியமாகும்.

நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய, செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள், வசனங்களில் எம்.ஜி.ஆர்., இடம்பெறச் செய்தார். அவ்வாறு செய்த காரணத்தால் தான், எம்.ஜி.ஆர்., என்ற மந்திர சக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.

பெற்ற தாயின்மீது பெறுதற்கரிய பாசத்தைச் செலுத்தியதோடு, நாட்டிலுள்ள தாய்மார்களின் மீதெல்லாம் அளவிடற்கரிய பாசத்தைச் செலுத்தி, அவர்களது மானம் காக்க, களங்கத்தைப் போக்கக் காலமெல்லாம் துணையாய் நின்ற காவல் தெய்வமல்லவா எம்.ஜி.ஆர்! அதனாலன்றோ இன்றும் தாய்க்குலத்தின் தணியாத செல்வாக்கோடு, மறைந்தும் இம்மண்ணில் மங்காத புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்கின்றார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!