முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணையினை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட "கண்காணிப்பு குழுவை" உச்சநீதிமன்றம் நியமித்தது. தற்போது இந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள பிரதிநிதியாக கேரள நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ஜோஸ் உள்ளனர். இக்குழுவினர் கடந்த 2021 பிப்ரவரி 19ல் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் கண்காணிப்பு குழுவில் இரு மாநிலம் சார்பில் தலா ஒரு தொழில் நுட்ப வல்லுனர்களையும் சேர்க்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியமும், கேரளா சார்பில் கேரள நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீசும் சேர்க்கப்பட்டனர். விரிவாக்கம் செய்யப்பட்ட இக்குழுவினர் இன்று முதன் முறையாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.50 அடியாக உள்ள நிலையில் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். இவர்கள் தமிழக பொதுப்பணித்துறையின் கண்ணகி படகில், தேக்கடி படகு துறையில் இருந்து பெரியாறு அணைக்கு சென்றனர். அணைப்பகுதியில் எதிர்காலங்களில் அணையில் மேற்கொள்ளவேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். குறிப்பாக பெரியாறு மெயின் அணைப்பகுதி, கேலரி பகுதியில் கசிவு நீர் (சீப்பேஜ் வாட்டர்) குறித்தும், பேபிஅணைப் பகுதியையும் குழுவினர் ஆய்வு செய்தனர். இதை அடுத்து அணையின் மதகுகளின் இயக்கத்தை சரிபார்த்தனர். பிற்பகல் முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்பு குழு கமிட்டி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் காலங்களில் அணையில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு பணிகள் குறித்தும் பேபி அணையை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu