பாகிஸ்தானுக்கு மோடி விடுத்த சவால்... இந்தியா வென்றதன் பின்னணி என்ன?

பாகிஸ்தானுக்கு மோடி விடுத்த சவால்...  இந்தியா வென்றதன் பின்னணி என்ன?
X

பைல் படம்

மோடி விடுத்த சவாலை பாகிஸ்தான் ஏற்றிருந்தால் திவாலாகியிருக்காது என அரசியல் விமர்சகர் பாரிஸ்டர் ஹமீத் பஷானி கூறியுள்ளார்

பாகிஸ்தானில் ஒரே நாளில் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 19 ரூபாய் குறைந்தது. இது வங்கி வர்த்தகங்களுக்கான அதிகாரப்பூர்வமான விலை தான். ஆனால் வெளிமார்க்கெட்டில் ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் 300ஐ தொட்டு விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐ.எம்.எஃப்பிடமிருந்து வெறும் 1.2 பில்லியன் டாலர்களைப் பெறுவதற்காக, பாகிஸ்தான் தொடர்ச்சியான பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் நீட்சியாக, வங்கியில் வட்டி விகிதம் 20% ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பணவீக்கம் 50% அளவுக்குப் போய் விட்டதால், இந்த வட்டி விகித உயர்வும் ஜுஜூபிதான்.

இதுவரைக்கும் கராச்சி துறைமுகத்தில், சுங்கம் கட்டி விடுவிக்க காசில்லாமல் ஊசலாடியபடி நின்று கொண்டிருக்கிற கண்டெயினர்களின் எண்ணிக்கை 10000-த்தைத் தாண்டி விட்டன. மூடீஸ் தன் பங்குக்கு பாகிஸ்தானின் அந்தஸ்தை அதலபாதாளத்துக்குத் தள்ளியிருக்கிறது. அங்கே இப்படியிருக்க, இங்கு இந்தியாவில் வெகுவிமர்சையாக ஜி-20 நடந்து கொண்டிருக்கிறது. இத்தாலி பிரதமர் இந்தியாவுக்கு தனது பரிவாரங்களுடன் வந்து ரைசினா டயலாக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடியை வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் மேன் ஆஃப் தி மேட்ச் ஜெய்சங்கர் கலக்கிக் கொண்டிருக்கிறார். பொறுக்குமா பாகிஸ்தானியர்களுக்கு?

பாகிஸ்தானில் பிரபல அரசியல் விமர்சகரான கமர் சீமா, மூத்த அரசியல் விமர்சகரான பாரிஸ்டர் ஹமீத் பஷானியுடனான தனது யூட்யூப் உரையாடலில் கேட்கிறார். ‘‘அதெப்படி, பாகிஸ்தான் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்க, இந்தியா இப்படி அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது?” இதற்கு பதிலளித்த பாரிஸ்டர் ஹமீத் பஹானி, இந்திய பிரதமர் மோடி விட்ட சவாலை பாக்கிஸ்தான் செயல்படுத்தியிருக்க வேண்டும்,” என்று பதிலளிக்கிறார்

பல வருடங்களுக்கு முன்னால் மோடி பாகிஸ்தானுக்கு என்ன சவால் விடுத்தார்? போராடுவது என்று முடிவாகி விட்டால், நம் இரண்டு தேசங்களும் வறுமைக்கு எதிராக, வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எதிராக, கல்வியின்மைக்கு எதிராக போராடுவோம். நாங்கள் இந்தியாவில் போராடுகிறோம். நீங்கள் பாகிஸ்தானில் போராடுங்கள். யார் முதலில் எவ்வளவு வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். இதில் யார் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் ஜெயிக்கப்போவது அந்தந்த நாட்டு மக்கள் தான்,’ என்று ஒரு சவால் விடுத்தாரே? அதை எந்த பாகிஸ்தானிய தலைவராவது ஏற்றுக் கொண்டார்களா?”

இன்று பாகிஸ்தான் 1.2 பில்லியன் டாலர்களுக்காக கையேந்தி நிற்கிறது. ஆனால், இந்தியாவின் ஒரு தனியார் நிறுவனம் 70 பில்லியன் டாலர்களுக்கு விமானம் வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது. பாக்கிஸ்தானில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஜி-20, SCO கூட்டங்கள் நடைபெறுகின்றன. Global South-க்கு மோதி தலைமை ஏற்க வேண்டுமென்று ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை வைக்கின்றன. ரஷியா உக்ரைன் சண்டையில் மோடி சமாதானம் செய்து வைக்க வேண்டுமென்று கேட்கிறார்கள்.

இந்த அழகில் இந்தியாவைப் பார்த்து பொறாமைப்பட என்ன இருக்கிறது? மோடி இந்தியாவுக்குச் செய்திருப்பதில் ஒரு சிறு அளவாவது பாகிஸ்தான் தலைவர்கள் செய்ய முயன்றிருந்தால், இன்று நாம் பாகிஸ்தான் இவ்வளவு அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது என்று ஆணித்தரமாகப் பேசியிருக்கிறார் பாரிஸ்டர் ஹமீத் பஷானி. முற்றத்துக்கு முல்லைக்கு மணமில்லை என்பது போல, வாராது வந்த மாமணியான நமது பிரதமரின் அருமை நம் நாட்டில் இன்னும் பலருக்கு புரியாமல் இருப்பதுதான் இதில் வேதனை.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!