முல்லை பெரியாறு அணையில் சோக முகத்துடன் அமைச்சர்கள் ஆய்வு
கடந்த மாதம் 21ம் தேதி முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீர் திறந்தது. தனது அதிகார வம்பினை மீறி கேரளா செயல்படுகிறது என தமிழக விவசாயிகள் கொந்தளித்தனர். தற்போது கேரளா வழியாக 8 ஷட்டர்கள் திறக்கப்பட்டு விநாடிக்கு 3800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் தினமும் முல்லை பெரியாறு அணைக்கு தினமும் விசிட் செய்து ஆய்வு செய்தனர். இது அவர்களுக்கு சம்மந்தம் இல்லாத வேலை எனக்கூறி தமிழக விவசாயிகளும், தமிழக அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியன், தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, எம்.எல்.ஏ.,க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார், மதுரை வடக்கு தளபதி, சோழவந்தான் வெங்கடேசன் ஆகியோர் இன்று தேக்கடி வழியாக பெரியாறு அணைக்கு சென்றனர்.
அவர்களுடன் பெரியாறு அணை தலைமை பொறியாளர் கிருஷ்ணன், தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், கூடுதல் தலைமை பொறியாளர் ஞானசேகரன், கண்காணிப்பு பொறியாளர் சுகுமாறன், செயற்பொறியாளர் சியாம், முன்னாள் எம்.எல்.ஏ., தங்க.தமிழ் செல்வன் ஆகியோர் சென்றனர்.
அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் முல்லை பெரியாறு அணைப்பகுதி முழுவதையும் ஆய்வு செய்ததோடு, அணையில் இருந்து கேரளாவிற்கு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரையும் பார்வையிட்டனர். அப்போது தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் முகங்களில் கடும் சோகம் இழையோடியதை நேரடியாக பார்க்க முடிந்தது என தேனி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடன் சென்ற தமிழக பத்திரிக்கையாளர்கள் தேக்கடியிலேயே தங்க வைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu