பால் உற்பத்தி அதிகரித்தாலும் மார்க்கெட் ‛டல்’..!

பால் உற்பத்தி அதிகரித்தாலும் மார்க்கெட் ‛டல்’..!
X

பால் உற்பத்தி (கோப்பு படம்)

தேனி மாவட்டத்தில் பாலை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் பசுந்தீவன உற்பத்தி அதிகரித்துள்ளது. பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஆனால் மார்க்கெட்டிங் வசதி இல்லாமல் விவசாயிகள் பாலை விற்க வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பால் மாடுகள் உள்ளன. தற்போது மழைக்காலம் என்பதாலும், போதிய அளவு மழை பெய்வதாலும் பசுந்தீவன உற்பத்தி அதிகரித்துள்ளது. தவிர குளிர்ச்சியான பருவநிலை நிலவுகிறது. இதனால் வழக்கமாக பசுக்கள் தரும் பாலின் அளவும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக தினமும் கோடை காலத்தில் 12 லிட்டர் பால் கறக்கும் பசு, தற்போது 15 லிட்டர் வரை கறக்கிறது. பொதுவாகவே மாவட்டத்தில் பால் உற்பத்தி 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. வெவ்வேறு முனைகளில் பால் சேகரிக்கப்படுவதால், மாவட்டத்தின் பால் உற்பத்தி குறித்த துல்லியமான தகவல் இல்லை. ஆனால் வழக்கத்தை விட பால் உற்பத்தி அதிகரித்துள்ளது என்பதை ஆவின் நிர்வாகம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கேரளாவிற்கு செல்லும் பாலுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் பேக்கரி, சுவீட் ஸ்டால்கள், டீக்கடைகள், ஓட்டல்களில் போதிய விற்பனை இல்லை. ஆவின் பால் விற்பனையும் சரிந்துள்ளது. இதனால் பால் உற்பத்தி அதிகரித்தாலும் விற்பனை வசதிகள் இல்லை.

இதனால் கிராமங்களில் உள்ள டீக்கடைகளுக்கு வழக்கத்தை விட குறைந்த விலைக்கு பல விவசாயிகள் பால் விநியோகம் செய்கின்றனர். இது போன்ற நேரங்களில் விவசாயிகளிடம் இருந்து அதிகளவு பால் கொள்முதல் செய்ய ஆவின் நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!