முதலாளியை கண்ணீர் விட வைத்த எம்.ஜி.ஆர்...

முதலாளியை கண்ணீர் விட வைத்த எம்.ஜி.ஆர்...
X
கலங்கரை விளக்கம் பட ரிலீஸ் பரபரப்பில் இருந்த போதிலும் வேலுமணி, ஓர் அதிகாலை நேரம் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் செல்கிறார்

அப்பொழுது எம்.ஜி.ஆர். முண்டா பனியனுக்கு மேலே, மார்பு வரை கட்டிய லுங்கியுடன் தோட்டத்தைச்சுற்றி வாங்கிங் செயது கொண்டிருக்கிறார். வேலுமணியைப் பார்த்தவுடன், “என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?” என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர். அதற்கு வேலுமணி, “அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால் தானே உங்களைப் பார்க்க வந்தேன்….” என்கிறார்.

“சொல்லுங்க!” “பையன் சரவணன் ஒரு பொண்ணைக் காதலிக்கிறான். அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.” “அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”

“இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழையாம்! அது மட்டும்மல்லாம: பொண்ணு, அம்மா-அப்பா இல்லாத அநாதையாம்! அதான்…நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்..” என்று வேலுமணி தயங்கித் தயங்கிச்சொல்லி முடிக்கிறார்.

எல்லாவற்றையும் பொறுமையாக்கேட்டுக் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் “என்ன முதலாளி பெரிய ஸ்டேட்டஸ் இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்…” என்று கொஞ்சம் மிரட்டும் தோரணையில் சொல்லி அனுப்புகிறார்.

மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். போன வேகத்தில், 7.3.1966ஆம் தேதியில் சென்னை ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தன்மகனுக்கு அந்த ஏழைப் பெண்ணுக்கும் திருமணம் என்றுநாள் குறித்து, முதல்பத்திரிக்கையை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கிறார். திருமண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்த வேளையில் மூன்றாம் தேதி அன்று கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்து விடுகிறார்.

“ஏழாம் தேதி திருமணம். மூன்றாம்தேதி இப்படியா?’ என்று எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, வரப்போகிற பெண்ணின் ராசியால் தான் நடந்திருக்கிறது என்றும், திருமணத்திற்கு முன்பே இப்படியென்றால், திருமணத்திற்குப் பிறகு இந்தப் பெண்ணின் ராசி என்ன பாடுபடுத்துமோ என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள். தன் குடம்பத்தினர் எடுத்த இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க தங்களின் குடும்பத் தலைவரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ராமாவரம் வீட்டில் சந்தித்து, விஷயத்தைச் சொல்கிறார் வேலுமணி.

கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், “இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி. எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க…’ என்று சொல்லி அனுப்பி விட்டு காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, “இதோ பாருங்க முதலாளி… ஒருவேளை நீங்க எல்லோருமா சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறுத்தணும்னு முடிவெடுத்திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா தத்து எடுத்துக்கிறேன்…” என்ற பொன்மனச்செம்மலின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.

அப்படியே ஓடோடிப் போய்க் கண்ணீர் மல்க-மக்கள் திலகத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள்.. அதே தேதியில் தான் திருமணம்.. இதில் எந்த மாற்றும் இல்லை!” என்று சொல்லிவிட்டு , அதே தேதியில் திருமணத்தையும் நடத்தி முடித்தார் வேலுமணி .

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!