எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும் காலத்தில் அழியாத கூட்டணி

எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும்  காலத்தில் அழியாத கூட்டணி
X

பைல் படம்

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன..இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூகமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

1951 ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே.ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும், இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும், 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

நினைத்துப் பாருங்கள்! சிந்தனைக்குச் சில துளிகள்!

கவியரசர் கண்ணதாசன் 1961 – ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஒன்பதாம் தேதி, தி.மு.கழகத்தை விட்டு, விலகிச் சென்றுவிட்டார். கழகத்தை விட்டு, விலகிச் சென்ற கவியரசர் கழகத் தலைவர்கள் பற்றியும், அவர்கள் அடைய விரும்பிய திராவிட நாடு கொள்கை பற்றியும், திராவிட நாடு கொள்கையை அவர்கள் கைவிட்டது பற்றியும், நாட்டையாளும் நிலையில் நாற்காலிகளில் அவர்கள் அமர்ந்தால் நேரக்கூடிய அவலங்கள் பற்றியும் ஏராளமாக எழுதினார், மேடை முழக்கங்களும் செய்தார்.

இவற்றையெல்லாம் தனது இதயத்தின் ஒரு பகுதியில் இருத்திக் கொண்ட மக்கள் திலகம், தனது படங்களில் கண்ணதாசன் பாடல்கள் எழுதக்கூடாது என்று, எந்தத் தயாரிப்பாளரிடமும் கட்டளை பிறப்பித்ததில்லை.இதனால் தான் தேவர் பிலிம்ஸ் தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த அனைத்துப் படங்களுக்கும் (ஒன்றிரண்டு தவிர) கண்ணதாசனே பாடல்களை எழுதிக் குவித்தார்.

பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர். பந்துலு தயாரித்த, எம்.ஜி.ஆர்., நடித்த படங்களுக்கும் ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர்., ராமண்ணா தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும் கண்ணதாசனே பெரும்பாலும் பாடல்களை எழுதினார். இதற்கெல்லாம் காரணம், எம்.ஜி.ஆர் என்ற கலைஞானி, கண்ணதாசன் என்ற கவிஞரிடம் இருந்த கவித்துவத்தின் மீது செலுத்திய கவிப்பற்றும், கலைப்பற்றுமே எனலாம்.

திராவிட இயக்கத்தில் இருந்த போது கண்ணதாசன் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!’ என்ற பாடலை, தான் பயணம் செய்யும் வண்டியிலேயே எப்பொழுதும் கேட்கும் வண்ணம், கைவசம் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்பதனை, அவரே சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

இந்த அளவிற்குக் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மீது, தனது எண்ண அலைகளின் தாகத்தைத் தக்கவைத்துக் கொண்டவரே எம்.ஜி.ஆர். என்பதனை நாடு நன்கறியும்!

எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக் கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரது படங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திட அனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின் மூல இரகசியமாகும்.

நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய, செய்ய வேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களை யுமே தனது படங்களின் பாடல்கள், வசனங்களில் எம்.ஜி.ஆர்., இடம்பெறச் செய்தார். அவ்வாறு செய்த காரணத்தால் தான், எம்.ஜி.ஆர்., என்ற மந்திர சக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.

இனி, எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசனின் கவித்துவம் வாக்குப் பலித்தமாய் வாகை சூடிய விதங்களை விவரமாய்க் காண்போம். ஆரம்பகாலப் பாடல்கள்…. சில!

1956 – ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ‘மதுரைவீரன்’ படத்தில் இடம்பெற்ற,

‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலேஆடும் விழியிலே! – கீதம்பாடும் மொழியிலே!…”இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் ரசித்துக் கேட்கக் காண்கிறோம்.

இப்பாடலில்,.“தேடிய இன்பம் கண்டேன்! இன்றுகண்ணா வாழ்விலே – உங்கள் அன்பால் நேரிலே!…”“ஸ்வாமி! உன் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே!அலைபாயும் தென்றலாலே சிலை மேனி கொஞ்சுதே!”

என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்ப ‘ஜிக்கி’ பாடும் போதும், அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர்., நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி.எம்.சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார் தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள் தானே!

1957–ஆம் ஆண்டில், கவியரசரின் கருத்தாழமிக்க திரைக்கதை வசனத்தோடு வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்திலும், கவிஞரின் பொன்னான பாடல்கள் முத்திரை பதிக்கத் தவறவில்லை. “கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே! கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!”

“சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் எதுக்கம்மா!” இந்த இளமை, இனிமை ததும்பும் இவ்விரு பாடல்களோடு, மகாபாரதப் போரில் அபிமன்யூ மாள, மகனை பிரிவால் தாய் சுபத்திரை துடிதுடிப்பதைப் படம்பிடித்துக் காட்டும்,

“மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டுவாழ்வது நமது சமுதாயம்!மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்மாறிவிடாது ஒரு நாளும்!”என்ற பல்லவியுடன், படத்திற்கே முத்தாய்ப்பாய் அமைந்த பாடலும்; “காமுகர் நெஞ்சில் நீதியில்லை – அவர்க்குத் தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை!” என்ற தத்துவ சமூகநீதிப் பாடலும்; எம்.ஜி.ஆர் படத்திற்குப் புகழ் சேர்ந்த பாடல்களே!

காலத்தை வென்ற பாடல்கள்!‘அச்சம் என்பது மடமையடா!’ 1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, என்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப் படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’

இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,

“அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு, நூறிலும் சாவு! தாயகம் காப்பது கடமையடா!” என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!

உண்மை தானே...! அச்சம் என்பது மூடர்களின் மூலதனமல்லவா! ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களே ஒன்றுகூடி 1972 – ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றிய போது, தனது இரசிகப் பெரும் பட்டாளத்தோடும், தாய்க்குலத்தின் தனிப்பெரும் ஆதரவோடும், துணிவையே துணையாகக் கொண்டு, தன்னைக் கட்சியில் இருந்து வெளியெற்றியவர்களையே ஆட்சியில் இருந்து அகற்றிய அஞ்சாத, அச்சமில்லாத சிங்கமல்லவா எம்.ஜி.ஆர்.,அவர் தானே, ‘அஞ்சாமை திராவிடர் உடமையடா !’ என்று கூறத்தகுந்தவர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil