மேகமலை புலிகள் காப்பகத்தை மென்மேலும் வளர்த்தெடுக்க கோரிக்கை
அன்வர்பாலசிங்கம்.
வைகைநதியை வற்றாத ஜீவநதியாக மாற்ற மேகமலை புலிகள் காப்பகத்தை மென்மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
''மேகமலை புலிகள் காப்பகத்தை கை விடுக' என்ற ஒரு அபத்தமான முழக்கத்தை போடியில் எழுப்பியிருக்கிறார்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
இந்திய அளவில் தங்கள் செல்வாக்கை இழந்து விட்ட தோழர்கள், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் தங்கள் அடையாளத்தையே தொலைத்துவிட்ட தோழர்கள், அடுத்து தமிழகத்திலும் கொஞ்சநஞ்சம் இருக்கும் தங்களுக்கான மரியாதையை குலைக்கும் விதமாக நடந்து கொள்வது ஏற்புடைய செயலல்ல.
திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை கைவிடச் சொல்ல வேண்டிய அவசியம் எங்கே வந்தது.அதை கைவிட சொல்வதற்கு நீங்கள் யார்? இது தேனி மாவட்டத்தின் வாழ்வாதாரத்தையே சிதைக்கும் பொட்டிபுரம் நியூட்ரினோவை ஆதரித்த நீங்கள், எந்த அடிப்படையில் மேகமலை புலிகள் காப்பகத்தை கைவிடச் சொல்கிறீர்கள்?
முல்லைப் பெரியாறு அணை விடயத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத நீங்கள், மேகமலை புலிகள் காப்பகத்தை கைவிடச் சொல்வது எந்த அடிப்படையில்?
நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் முற்றுகையிடுங்கள். எங்களுக்கு அவசியமில்லை.ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை கைவிட வேண்டும் என்று களத்தில் இறங்கினால், உங்களுக்கு எதிராக நாங்களும் களத்தில் இறங்குவோம் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
இந்தப் புலிகள் காப்பகத்தின் மூலமாக வனத்தை செழுமையாக்காவிட்டால் அடுத்த பத்தாண்டுகளில் 5 மாவட்டங்களும் பாலைவனமாகும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
மலைமாடு சங்கத்தினருக்கும் நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.உங்களுக்கு ஆதரவாக வனத்துறைக்கு எதிராக நாங்கள் களத்தில் நிற்கிறோம். ஆனால் பொட்டிபுரம் நியூட்ரினோ, முல்லைப்பெரியாறு அணை விடயங்களில் தொடர்ந்து தேனி மாவட்டத்திற்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வரும் இடதுசாரிகளோடு நீங்கள் கூட்டணி வைத்தால்... உங்களுக்கு ஆதரவாக நிற்கும் நிலையை மறுபரிசீலனை செய்வோம்.
புலிகள் காப்பகத்திற்கு எவ்வளவு தூரம் வரை மலை மாடுகளை மேய்க்க முடியும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எங்களுடைய விவசாய சங்கம் கேள்வி கேட்டிருக்கும் நிலையில், இடதுசாரிகளுடன் நீங்கள் வைத்துக்கொள்ள போகும் கூட்டணி கண்டிப்பாக உங்களுக்கு எதிராகவே திரும்பும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu