தேனி மாவட்டத்தில் தொடரும் மேகமலை வினோதங்கள்...

தேனி மாவட்டத்தில் தொடரும் மேகமலை வினோதங்கள்...
X

தேனி  மாவட்டம் மேகமலையின் ரம்மியமான ஒரு பகுதி.

கடந்த 2011 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலையில், தொடர்ந்து தனியார் முதலாளிகளால் அத்துமீறல்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

தேனி மாவட்டத்தில் மாசுபடாத ஒரு பகுதியாக விளங்கும் மேகமலையில், கட்டிடங்களுக்கான வரைமுறை என்பது இன்னமும் முறைப்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

மேகமலை பஞ்சாயத்தில் பெறும் வரைபடங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, என்ன வேண்டுமானாலும் அந்த புலிகள் சரணாலயத்திற்குள் செய்துவிட முடியும் என்றும் சிலர் நம்புகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு ஆண்டொன்றை கடந்த பிறகும் இன்னமும் அது தன் வனவளத்தை முழுமையாக பெறவில்லை என்றே கருதுகிறோம்.

தேசிய புலிகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்ட நிலையிலும் கூட, அதன் பசுமைத் தன்மையை நம்மால் காப்பாற்ற இயலவில்லை. நாட்டில் காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்கிற குரல்கள் பிரதமர் அலுவலகத்திலிருந்தே வந்துவிட்ட பிறகும் கூட, இதோ பார் என்னிடம் பணம் இருக்கிறது; அடியாட்கள் இருக்கிறது என்று கொக்கரிப்பவர்களை என்னவென்று சொல்வது.

இந்த லட்சணத்தில் சில மலையாள இன வெறியர்களும் மேகமலையில் பட்டா நிலங்களை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. கட்டுப்பாடற்ற வனமாக மாறிவிட்ட மேகமலையில், அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்து வருவது கண்கூடாக தெரிகிறது.

வேகவலைக்குள் கட்டிடம் கட்டுவதில் ஏற்பட்ட போட்டியில் நீதிமன்றத்திற்கு ஒரு அம்மையார் செல்ல, பதிலுக்கு நாங்களும் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என்று இன்னொருவர் மனு செய்ய, இறுதியாக நீதி அரசர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

வழக்கறிஞர் ஜானகி அம்மையார் தலைமையில், வழக்கறிஞர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, விரைவில் மேகமலையில் விசாரணை தொடங்கவிருக்கிறது. அதில் ஒருவர் நான் தொழிலாளர்கள் தங்குவதற்கான கட்டிடத்தை கட்டி இருக்கிறேன் என்று தன் தரப்பு வாதமாக வைத்திருக்கிறார்.

அவர் நடத்துவது சொகுசு விடுதி. ஆனால் தன்னிடம் பணி புரியும் தொழிலாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் என்று அதை வகைப்படுத்தி நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். அதை முழுமையாக விசாரிக்கத்தான் வழக்கறிஞர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: நாங்கள் வழக்கறிஞர் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி, மேகமலையில் உள்ள சொகுசு விடுதிகளின் உண்மைத் தன்மை குறித்து அறிக்கை தாக்கல் செய்வோம்.

அது சொகுசு விடுதி தான் என்பதை நிரூபிக்க அத்தனை ஆவணங்களையும் கடந்த ஓராண்டாக சேகரித்து வைத்திருக்கிறோம்.

மேகமலை வியாபார பகுதி அல்ல (Meghamalai is not a commercial area) என்ற ஒற்றை சொல்லை உறுதிப்படுத்துவதற்காக களத்தில் நிற்போம். எங்கள் அறிக்கையில் உட்பிரையார் தேயிலை கம்பெனி நடத்தும் 3 சொகுசு விடுதிகளும் அடக்கம்.

வரும் 2028 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையிலிருந்து, அங்கு தேயிலை கம்பெனி நடத்தி வரும் பிபிடிசி நிர்வாகம் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்.

விரைவில் மேகமலையிலிருந்தும் அத்தனையும் வெளியேற வேண்டும் என்று உத்தரவு போடும் காலம் வரும். அந்த உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

சுற்றுச்சூழல் காக்க மேகமலையை காக்க எங்களோடு கைகோர்க்க வாருங்கள் என்று வெள்ளை உள்ளம் படைத்த மனிதர்களை அழைக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!