Theni News Today-வரம்பு மீறும் மெடிக்கல் ஸ்டோர்கள் : உயிரிழப்பு அதிகரிக்க இதுவும் காரணம்..!

Theni News Today-வரம்பு மீறும் மெடிக்கல் ஸ்டோர்கள் :  உயிரிழப்பு அதிகரிக்க இதுவும் காரணம்..!

மெடிக்கல் ஸ்டோர்.(கோப்பு படம்)

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மெடிக்கல் ஸ்டோர்களும் காரணம் என டாக்டர்கள் கடும் புகார் எழுப்பி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருந்தகங்கள் வைத்துள்ளனர். ஆனாலும் தனியார் மருந்துக்கடைகள் நுாற்றுக்கணக்கில் உள்ளன. இதில் சில மருந்துக்கடைகள் தான் மிகவும் நியாயமான முறையில் நடந்து கொள்கின்றன. டாக்டர்களின் பரிந்துரைப்படி மருந்துகள் தருகின்றன. ஒரே மருந்தாக இருந்தாலும், வேறு கம்பெனி மருந்து மாற்றித்தரக்கூட சம்மந்தப்பட்ட டாக்டரிடம் அனுமதி பெறுகின்றன. அந்த அளவுக்கு மிகவும் நியாயமான மருந்தகங்களும் உள்ளன.

ஆனால் பல மெடிக்கல் ஸ்டோர்கள் மருத்துவமனைகளாக மாறி விட்டது தான் வேதனையான விஷயம். தலைவலி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு என சிறிய விஷயங்களில் தொடங்கி, கிட்னி, இருதயம், கல்லீரல், நுரையீரல், கண், பல் பிரச்னைகளுக்கு கூட மருந்து தரும் அளவுக்கு சில மெடிக்கல் ஸ்டோர்கள் முன்னேறி உள்ளது வேதனையான விஷயம்.

‘‘நோய் தன்மை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதே டாக்டர்களின் வேலை’’ ஆனாலும் சில டாக்டர்களே இதில் இருந்து தவறி விடுகின்றனர். முறையற்ற சிகிச்சை கொடுத்து விடுகின்றனர். குறிப்பாக எப்படிப்பட்ட காய்ச்சலையும் சில நிமிடங்களில் கட்டுக்குள் கொண்டு வரும் அபாயகரமான சிகிச்சை வழங்கக் கூட சில டாக்டர்கள் தயங்குவதில்லை.

இதற்கு இவர்கள் கூறும் காரணம், ‘நாங்கள் நோயாளியை உடனே குணப்படுத்தாவிட்டால் அடுத்து வர மாட்டார்கள். மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு விடுவார்கள்’ அதனால் தான் சற்று கடினமான சிகிச்சை முறைகளை நாங்கள் தேர்வு செய்கிறோம் என்று கூறுகின்றன்ர.

ஆனால் பெரும்பாலான டாக்டர்கள் மிக, மிக நியாயமான முறையில் செயல்படுகின்றனர். நோயாளிகளை பரிசோதித்து, அவர்களின் நோய் தன்மையையும், அவர்களுக்கு வழங்க வேண்டிய மருந்து மாத்திரைகளையும் மிகவும் கவனமாக தேர்வு செய்து வழங்குகின்றனர். இப்படி இவர்கள் மருத்துவத்தில் நிதானத்தையும், நேர்மையையும், சரியான நுட்பங்களை கடைபிடிப்பது நோயாளிகளுக்கு செலவு வைத்து விடுகிறது.

இப்போதைய நிலையில் நேர்மையான டாக்டர்களின் குறைந்தபட்ச ஆலோசனை கட்டணமே 200 ரூபாயினை தாண்டி விட்டது. அதிகபட்சம் ஆலோசனை கட்டணம் 800 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இதனால் செலவழித்து நொந்து போகும் நோயாளிகள் நேர்மையான டாக்டர்களை கூட, அவர் செலவு வைத்து விடுவார் என விமர்சிக்கின்றனர். இதனால் இவர்களிடமும் செல்லாமல் நேரடியாக மருந்துக்கடைகளுக்கு செல்கின்றனர்.

இது போன்ற நோயாளிகளின் பொருளாதார வாய்ப்புகளை பயன்படுத்தும் மருந்துக்கடைகள், மிக, மிக குறைந்த விலையில் வாங்கும் மாத்திரைகளை சற்று அதிக விலை வைத்து நோயாளிகளுக்கு கொடுத்து லாபம் சம்பாதிப்பதோடு, அடுத்த சில நாட்களில் அவர்களை சிக்கலிலும் மாட்டி விடுகின்றனர்.

ஆமாம் கிட்னி நோயாளிக்கு மிகவும் கடினமான பெயில் கில்லர் தருவது, கல்லீரல் நோயாளிகளுக்கு ஒவ்வாதா கடின மருந்துகளை தருவது, நுரையீரல், இருதய நோயாளிகளுக்கும் கொடுக்கக்கூடாத பல மருந்துகளை கொடுப்பது என தங்களுக்கு வியாபாரம் நடந்தால் போதும் என தள்ளி விடுகின்றனர். கடும் வயிற்றுப்போக்கினை கூட ஒரே நேரம் சாப்பிடும் மாத்திரையில் நிறுத்தி விடுகின்றனர்.

இதன் விபரீதம் என்னவாகும் என டாக்டர்களை கேட்டுப்பாருங்கள் தெரியும். இப்படி ஒவ்வாத சிகிச்சை எடுப்பதன் விளைவு சில நாட்கள், சில மாதங்களில் அந்த நோயாளி உயிரிழந்து விடுகிறார். தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக மருந்துக்கடைகள் சிகிச்சை அளிப்பது மிகவும் அதிகரித்து வந்தாலும், சுகாதாரத்துறையோ, மருத்துவத்துறையோ போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை என அனைத்து டாக்டர்களும் கடுமையாக புகார் எழுப்புகின்றனர்.

Tags

Next Story