அனல்மின் நிலையங்களுக்கு பொருள் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பா?

அனல்மின் நிலையங்களுக்கு பொருள்   இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பா?
X

பைல் படம்

தமிழகத்தில் அனல்மின் நிலையங்க ளுக்கு பொருள் இறக்குமதி செய்த தில் வரி ஏய்ப்பு நடந்ததாக 40 இடங்களில் ஐடி ரெய்டு நடந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 4 அனல் மின் நிலையங்களுக்கு உதிரிபாகங்கள், இயந்திரங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக ராதா இன்ஜினியரிங் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை, எண்ணூர் ஆகிய 4 இடங்களில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் இயங்கி வருகிறது.

இந்த 4 அனல் மின் நிலையத்திற்கும் தேவையான இயந்திரங்கள், அதற்கான உதிரிபாகங்கள், நிலக்கரி கையாளும் வகையில் கன்வேயர் பெல்ட் ஆகியவை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. மேலும், இந்த நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் பல்வேறு ஒப்பந்தங்கள் எடுத்து பணிகள் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ராதா இன்ஜினியரிங் குழுமத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள், கன்வேயர் பெல்ட் மற்றும் உதிரிபாகங்களில் இறக்குமதி செய்ததில் போலி ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேநேரம், ராதா இன்ஜினியரிங் குழுமத்தின் சார்பில் வருமான வரித்துறைக்கு வழங்கப்பட்ட கணக்குகளிலும் முரண்பாடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ராதா இன்ஜினியரிங் குழுமத்திற்கு சொந்தமான இடங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவோடு இரவாக ரகசியமாக 40 கார்களை ஒரே நேரத்தில் முன்பதிவு செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவனில் நிறுத்தினர்.

அதைதொடர்ந்து அதிகாலை 40 கார்களில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், அதன் துணை நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதோடு இல்லாமல் இந்த நிறுவனம் மூலம் கொள்முதல் செய்து கொடுத்த இயந்திரங்கள், கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட உதிரிபாகங்கள் தொடர்பான விபரங்களை ஆய்வு செய்யும் வகையில், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையம், மேட்டூரில் உள்ள அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம் மற்றும் எண்ணூர் அனல் மின் நிலைய அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ராதா இன்ஜினியரிங் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்த இயந்திரங்கள் எத்தனை கோடிக்கு வாங்கப்பட்டது என்ற விபரங்களை ஆய்வு செய்தனர். அப்போது 4 அனல் மின் நிலையங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆணங்களும், ராதா இன்ஜினியரிங் குழுமம் சார்பில் வருமான வரித்துறையில் தாக்கல் ெசய்யப்பட்ட விபரங்களில் பல முரண்பாடுகள் இருந்ததற்கான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ராதா இன்ஜினியரிங் குழுமத்தில் கிடைத்த ஆவணங்களின் படி, சென்னை தேனாம்பேட்டை வெங்கட ரத்தினம் சாலையில் வசித்து வரும் மின்வாரிய முன்னாள் அதிகாரி காசி என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அனல் மின்நிலையத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் ஒதுக்கியதில் பல கோடி ரூபாய் முன்னாள் மின்வாரிய அதிகாரி காசி வங்கி கணக்கிற்கு பணம் மாற்றபட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து வடசென்னை அனல் மின்நிலையத்துக்கு கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு செல்லுதல், அங்கு மின் உற்பத்தி இயந்திரங்களில் நிலக்கரி கையாளுதல், பின்னர் சாம்பல் கழிவுகளை கையாளுதல் என கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, சிறுசேரி சிப்காட் மென்பொருள் பூங்காவில் உள்ள தலைமை அலுவலகம், மணலி புதுநகர் வெளிவாயல் சாவடியில் உள்ள அலுவலகம், திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலாளர் கணேசன் வீடு, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் கோல்டன் காலனியில் உள்ள வீடு, வெள்ளி வாயல், மேட்டூர் பகுதியில் உள்ள அலுவலகங்கள் மற்றும் புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் உள்ள லும்பினி சதுக்கம் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தொழிலதிபர் மகேந்திரா பி.ஜெயின் என்பவரின் வீடு, படூர் பசிபிகா ஆரம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அம்பலவாணன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மயிலாப்பூரில் உள்ள அலுவலகம், பையனூரில் உள்ள அவரது தோட்டம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதே போல் ராதா இன்ஜினியரிங் குழுமத்தின் துணை நிறுவனங்களான இயங்கி வரும் தி.நகர் சங்கார தெருவில் உள்ள பண்டாரி என்பவருக்கு சொந்தமான வீடு, வேப்பேரியில் உள்ள வி.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனம், எழுகிணறு பகுதியில் உள்ள ஆதிநாத் ஸ்டீல் நிறுவனம், கிண்டி ஆலந்தூரில் உள்ள அபி ஜெனிக்ஸ் பயோ சொல்யூஷன்ஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் ஏகாத்தூரில் உள்ள ஹிரணந்தனி பிரிட்ஸ் உட் நிறுவனம், பாரிமுனை மூக்கர் நல்ல முத்து தெருவில் உள்ள தனியார் நிறுவனம், கீழ்ப்பாக்கம் குளக்கரை சாலையில் உள்ள வீடு, ஜாபர்கான் பேட்டையில் உள்ள அலுவலகம், ஒரகடம் பகுதியில் உள்ள இன்டஸ்ட்ரியல் காரிடார் நிறுவனம், இன்டர்லேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் சோதனை நடந்தது.

ராதா இன்ஜினியரிங் குழமம், அதன் துணை நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள், மின்வாரிய முன்னாள் அதிகாரி காசி வீடு என மொத்தம் 40 இடங்களில் சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. இந்த சோதனையில் இருவேறு கணக்குகள் கையாண்டு வந்ததற்கான ஆவணங்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், போலியான பெயரில் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் ஆவணங்கள், வெளிநாடுகளில் இருந்து இயந்திரம் கொள்முதல் செய்ததில் இரண்டு விதமான கணக்குகள் காட்டப்பட்ட ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனை இன்றும் தொடரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவில் தான் எத்தனை கோடி ரூபாய் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வரிஏய்ப்பு இந்த நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுனங்கள் செய்துள்ளனர் என தெரிவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் ராதா இனிஜினியரிங் குழுமத்திற்கு சொந்தமான இடங்கள் மற்றும் மின்வாரிய முன்னாள் அதிகாரி வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil