4 மாதங்களுக்கும் மேல் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்
தேனி மாவட்டத்தில் மழை பெய்தும் நிரம்பாமல் காணப்படும் லட்சுமிபுரம் கண்மாய்
தேனி மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக மழை பெய்தும் கண்மாய்கள் வறண்டே கிடக்கின்றன. இதனால் மாவட்டத்தி்ல பால் வளமும், பசுமைப்புல் வளமும் இன்னும் பெருகவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டது. வடகிழக்கு பருவமழை பரவலாக ஓரளவு மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் இயல்பான மழையளவுக்கு சற்று அதிகமான மழை பதிவாகி உள்ளது. இத்தனை நாட்கள் மழை கிடைத்தும், அந்த மழையால் நிலத்தில் ஈரம் கிடைத்தது மட்டுமே ஆறுதலான விஷயம் ஆகும்.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் மட்டும் 132 கண்மாய்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் 250க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதில் எந்த கண்மாயும் இதுவரை நிரம்பவில்லை. தன்னார்வலர்களின் முயற்சியால் துார்வாரப்பட்ட சில கண்மாய்களில் மட்டும் தண்ணீர் வரத்து ஓரளவு உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மாவட்டத்தில் கண்மாய்கள் நிரம்பும் அளவிற்கு இதுவரை மழை பெய்யவில்லை. நெல் சாகுபடி எடுத்து முடிக்க 120 நாள் தண்ணீர் தேவை. கண்மாய் முழுமையாக நிரம்பினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.
தவிர மாவட்டம் முழுவதும் கண்மாய்கள் நிரம்பினால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயரும். நிலத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். அப்போது பசுமைப்புல் உட்பட பசுந்தீவனங்கள் அதிகம் வளரும். இதனை மாடுகளுக்கு கொடுத்து பால் வளத்தை பெருக்க முடியும்.
தற்போது வரை மாவட்டத்தில் பெய்த மழை போதாது. மானாவாரி பயிர்களுக்கு மட்டுமே இந்த மழை ஆறுதலை தந்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த வாரம் தொடங்க உள்ளதால் இனி மூன்று மாதங்களுக்கு மழை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்று கூறினர்.
இயற்கை கொடையாம் வான்மழையை தகுந்த முறையில் சேமித்து வைத்தால் தான் நிலத்தடி நீர்மட்டம் மட்டுமல்லாது விவசாயமும் செழிக்கும். இனி வரும் காலங்களிலாவது கண்மாய்களை தூர்வாரி தண்ணீரை சேமித்து வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu