தேனி எம்.பி.க்கு விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

தேனி எம்.பி.க்கு விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் 

கண்ணகி கோவிலை பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என கூறிய தேனி எம்.பி., ரவீந்திரநாத்துக்கு கடும் எதிர்ப்பு.

மங்கலதேவி கண்ணகி கோவிலை பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என அதிமுக எம்பி ரவீந்திரநாத் நாடாளுமன்றத்தில் பேசினார், இதற்கு தேனி மாவட்ட விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடாளுமன்ற மக்களவையில் விதி எண் 377ன் கீழான கவன அறிவிப்பின் கீழ், மங்கலதேவி கண்ணகி கோவிலைப் பற்றி நீங்கள் பேசியதைப் பார்த்தேன். உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக மங்கலதேவி கண்ணகி கோவிலை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்கிற உங்களது கோரிக்கை, ஏற்புடையது இல்லை.

ஏற்கனவே கண்ணகி கோயில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள திருச்சூர் வட்ட தொல்லியல் துறையின் அதிகாரத்தின் கீழ் தான் இருக்கிறது. இந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த புராதன சின்னங்களை மட்டுமே தொல்லியல் துறை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ளும் என்பதை எப்படி மறந்தீர்கள் என்று தெரியவில்லை.

என்றைக்கு மங்கலதேவி கண்ணகி கோவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் போனதோ, அன்றே அது புராதன சின்னம் தான். வரலாற்று ஆய்வின்படி இந்த ஆலயம் தமிழகத்திற்கு சொந்தமானது எனவும், தற்போது அது கேரள மாநில எல்லையில் வருவதாகவும் நீங்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறீர்கள்.

மங்கலதேவி கண்ணகி கோவில், கேரள எல்லையில் இருந்து 33 மீட்டருக்கு உட்புறம், தமிழக எல்லைக்குள் அமைந்திருக்கிறது என்பது இந்திய சர்வே துறையால் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் காலத்திலிருந்து அது தமிழகத்திற்கு சொந்தமானது என்பதற்கான பட்டயங்களும் தெளிவாகவே இருக்கிறது.

1976ம் ஆண்டு வரை கண்ணகி கோவிலுக்கு கேரளா எந்தவித உரிமையையும் கோரவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம். மேலும் அந்த கோவில் தமிழக-கேரள எல்லையில் அது இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். முழுக்க முழுக்க அது தமிழக எல்லைக்குள் தான் வருகிறது என்பதற்கான ஆயிரக்கணக்கான சான்றுகள் இங்கே குவிந்து கிடக்கிறது.

வராது வந்த மாமணியாய் கடந்த சில நாட்களுக்கு முன்னால், தமிழக இந்து சமய அறநிலையத்துறை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கண்ணகி கோவிலை கொண்டுவரும் நடவடிக்கையை தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று நீங்கள் ஆற்றிய உரை, அந்த நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக அமையுமோ என்கிற அச்சமும் எங்களுக்குள் எழுகிறது.

ஏனென்றால் கோவில் கேரளாவிற்கு சொந்தம் என்று சில பேர் கேரள உயர்நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்து, கிட்டத்தட்ட மங்கலதேவியை கேரளாவிற்குள்ளேயே கொண்டு போய் விட்டு விட்ட நிலையில், இந்து சமய அறநிலையத் துறை களம் இறங்கியுள்ள சமயம் இது.

ஆகம விதிப்படி மங்கலதேவி கண்ணகி கோவிலின் வாயிலும், அதனுடைய பார்வையும் தமிழகத்தை நோக்கி இருக்கும் நிலையில், அதற்கு எந்த வகையில் மலையாளிகள் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை.

உள்ளபடியே தமிழ் ஓதுவார்களுக்கும், மலையாள நம்பூதிரிகளுக்குமிடையேயான வழிபட வைக்கும் முறையில் பல வித வேறுபாடுகள் இருக்கும் நிலையில், ஒரு நம்பூதிரியால் எப்படி கண்ணகி அம்மனை, வழிபட வைக்க முடியும்?

முத்தாய்ப்பாக மத்திய அரசின் பிரசாத் திட்டத்தின் கீழ் மங்கலதேவி கண்ணகி கோவிலை சேர்க்க வேண்டும் என்கிற உங்களுடைய உரை, தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்து விடும்.

இந்து சமய வழிபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நீங்கள், மங்கலதேவி கண்ணகி கோவிலை தமிழக இந்து சமய அறநிலைத்துறை கைவசம் கொண்டு வருவது தான் சரியாக இருக்கும் என்று உரையாற்றி இருக்க வேண்டுமே தவிர, மத்திய அரசின் பிரசாத் திட்டத்திற்கு கொண்டு போகச் சொல்வது, மறுபடியும் மலையாள ஆதிக்கத்திற்கு தான் வழிவகுக்கும்.

மற்றபடி சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமல்லாது, வருடத்தின் எல்லா நாட்களும் கோவில் திறக்கப்பட வேண்டும் என்கிற உங்களுடைய கோரிக்கைக்கு சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

கூடுதலாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நீங்களே முன்வந்து, பளியங்குடி முதல் கண்ணகி கோவில் வரையான தெல்லுகுடி வழி சாலையை அமைப்பதற்கு, ஏன் முன்வரக்கூடாது? என்று உரிமையோடு கேட்க கடமைப்பட்டிருக்கிறோம்.

மங்கலதேவி கண்ணகி கோவில் முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது, கேரள மாநில அரசுக்கும் கண்ணகி கோவிலுக்கும் எவ்வித தொடர்பும் எப்போதும், இப்போதும் இல்லை என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் கட்சிகளுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இது வழிபாட்டு உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒருமித்த கருத்தில் அனைவரும் நிற்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஒரு துடிப்பு மிக்க இளைஞராக, கண்ணகி கோயிலை மீட்பதற்கு வாருங்கள் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுக்கிறது. மங்கலதேவி கண்ணகி கோவில் விரைவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால் தான், அது நாம் இளங்கோவடிகளுக்கு செய்யும் தர்மமாக இருக்கும் என்று கூறியுள்ளார்

Tags

Next Story