கோழி வளர்ப்பு, பருத்தி விவசாயிகளால் மூங்கில் கூடை தொழிலாளர்களுக்கு வாழ்வு

கோழி வளர்ப்பு, பருத்தி விவசாயிகளால் மூங்கில் கூடை தொழிலாளர்களுக்கு வாழ்வு
X

தேனியில் நகராட்சி அலுவலகம் எதிரே பெரியகுளம் ரோட்டோரம் கூடை பின்னும் தொழிலாளி செல்வராஜ்.

கோழி வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் பருத்தி விவசாயிகளால், மூங்கில் கூடை பின்னும் தொழிலாளர்களுக்கு வாழ்வு கிடைத்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் ஏராளமானோர் மூங்கில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கேரளாவில் வாகமண் என்ற பகுதியில் விளையும் மூங்கில்களை விலைக்கு வாங்கி வருகின்றனர். தேனி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் இந்த மூங்கில்களை ஊற வைத்து சீவி, கூடை பின்னுகின்றனர்.

தற்போதய நிலையில் பிளாஸ்டிக் பக்கெட்டுகள், துாசி புடைக்க பயன்படும் பிளாஸ்டிக் ‛சுளகு’கள் வந்த பின்னர் இவர்களது தொழில் பெரும் மந்த நிலையை எட்டியது. அதே நேரத்தில் கிராமங்களில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்புக்கு மூங்கில் கூடைகள் பெருமளவில் தேவைப்படுகிறது. தவிர தற்போது மாவட்டத்தில் பருத்தி விவசாயம் அதிகரித்து வருகிறது. பருத்தி எடுத்து தாட்டுகள் போடுவதற்கு ஜின்னிங், ஸ்பின்னிங் மில்களுக்கு மூங்கில் கூடைகள் தேவைப்படுகிறது. இதனால் இதனை பின்னும் விவசாயிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கிறது.


இது குறித்து கூடை பின்னும் தொழிலாளி செல்வராஜ் கூறியதாவது: கேரளாவில் வாகமண் பகுதியில் இருந்து 10 மூங்கில்களை தேனிக்கு கொண்டு வர 500 ரூபாய் வரை செலவாகிறது. இதனை நாங்கள் பதப்படுத்தி சீவி, கூடை பின்னுகிறோம். சிறிய கூடை 200 ரூபாய்க்கும், பெரிய கூடை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். சராசரியாக ஒரு நாளைக்கு சிறிய கூடைகள் 5, பெரிய கூடைகள் 3 பின்ன முடியும். இதன் மூலம் எங்களுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் கூலி கிடைக்கும். சிலர் விற்பனை வாய்ப்பு கருதி ரோட்டோரம் மரத்தடியில் அமர்ந்து பின்னுகின்றனர். சிலர், வீடுகளில் வைத்து கூடை பின்னுகின்றனர்.

பெரும்பாலும் விவசாயிகள் எங்களிடமே நேரடியாக கூடை வாங்கி பயன்படுத்துவார்கள். தவிர ஆண்டிபட்டி, தேனி, போடி, பெரியகுளம் உட்பட பல்வேறு ஊர்களில் உள்ள கயிறு, இரும்பு கடைகளில் இந்த கூடைகளை வாங்கி விற்பனை செய்வார்கள். இந்த கூடை வாங்கியதும் மஞ்சள், வெந்தயம் அரைத்து மாவாக்கி கூடை முழுவதும் பூசி காய வைத்து பயன்படுத்தினால் நீண்ட நாள் உழைக்கும். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!