தமிழர் வாழ்வு நிலையை படம் பிடித்துக்காட்டும் மலையாள சினிமா !
பைல் படம்
லிஜோ ஜோஸ் இயக்கத்தில், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி தமிழிலும், மலையாளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது ’நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம். புதிய அனுபவங்களைத் தருகிறது. மம்முட்டி வெளுத்து வாங்கி இருக்கிறார். ஒரு மலையாள சினிமா, தமிழ் வாழ்வை புறநிலையிலிருந்து பார்க்கும் ஒரு வினோத அனுபவத்தை படம் தருகிறது.
கதை வழக்கம் போல எளிமையானது. வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வரும் ஜேம்ஸ், கேரளா திரும்பும் வழியில் தூங்கி விடுகிறார். ஒரு கிராமத்தின் அருகே விழித்துப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொல்லி அந்த கிராமத்தில் காணாமல் போன சுந்தரம் என்பவரின் வீட்டுக்குச் சென்று அவரைப் போலவே நடந்து கொள்கிறார். ஜேம்ஸுடன் வந்தவர்களும், அந்த ஊரில் இருப்பவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
மறுநாள் நண்பகல் மீண்டும் தூங்கி எழும் போது ஜேம்ஸாக மாறி விழிக்கிறார். உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்ற திருக்குறளின் கருத்துகளை அடித்தளமாக வைத்து ஒரு மாய எதார்த்த (Magical Realism) சினிமாவை இயக்கி இருக்கிறார் லிஜோ. படத்தில் ஜேம்ஸாகவும் சுந்தரமாகவும் வாழ்ந்திருக்கிறார் மம்மூட்டி.
ஆரம்ப காட்சிகளில் சிடுசிடுவென்று ஜேம்ஸ் கதாபாத்திரத்தில் இறுக்கமான உடல் மொழியை வெளிப்படுத்தும் மம்மூட்டி, சுந்தரம் பாத்திரத்தில் இன்னொரு உடல் மொழியையும் காட்டுகிறார். உடலால் ஜேம்ஸாகவும், மனதால் சுந்தரமாகவும் அவர் வெளிப்படுத்தும் அனாயசமான நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது. மது குடித்துக் கொண்டே சிவாஜியின் இருவேறு பாத்திரங்களை காட்சி சட்டகத்தின் இரு பிரிவுகளுக்குள்ளும் மாறி மாறி நுழைந்து நடிக்கும் காட்சியில் அட்டகாசம் செய்துள்ளார். படத்தில் ரம்யா பாண்டியனின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் அருமை. அவரது மகளாக வரும் பெண்ணின் நடிப்பும் பூ ராமு கச்சிதமான நடிப்பும் அத்தனை நேர்த்தி. படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்தில் சிறு சிறு பங்களிப்புகளை தந்து கொண்டிருக்கின்றன.
சுந்தரத்தின் தாயாக வரும் அந்த பாட்டி படம் முழுக்க ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஆனால், அவர் குரல் காட்டும் வித்தியாசம் கதையை நகர்த்திச் செல்ல வைக்கிறது.
படத்தின் திரைக்கதையும், ஆக்கமும் உலகத் தரத்திற்கு இணையாக இருக்கிறது. சிறு சிறு விவரங்களை (Details) தருவதன் மூலம் திரைக் கதையில் சீர்மை நிறுவப்படுகிறது. கறாரான ஜேம்ஸ் பாத்திரம் நெகிழ்வான சுந்தரமாக மாறும் போது நிகழும் உருமாற்றம் நுட்பமானது. அந்த கதாபாத்திரங்களுக்கிடையேயான காண்ட்ராஸ்ட் துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழ் உரையாடல்களை மண் குதிரை எழுதியிருக்கிறார். சினிமாவிற்கு தேவையான குறைவான, செறிவான மொழி அவருக்கு வாய்த்திருக்கிறது.
படத்தின் இன்னொரு கதாநாயகன் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். கிட்டத்தட்ட ஒன்றிரண்டு காட்சிகளைத் தவிர, அனைத்து காட்சிகளுமே நிலைத்த (Static) ஷாட்களாக உருவாக்கி இருக்கிறார். நிலப்பகுதியை காட்டும் போதும் சரி, கிராமத்தின் தெருக்களிலும் சரி, கேமராவில் எந்த அசைவும் இல்லாமல் நம் கண் முன் நிகழ்வது போல உணர்கிறோம். இதை விட்னெஸிங் கோணம் என்று வகைப்படுத்தலாம்.
ஏற்கனவே, மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் இதே போன்ற (Blocked Shots) பயன்படுத்தப்பட்டிருந்தது. அதிலும், தேனி ஈஸ்வர் தான் ஒளிப்பதிவாளர். கதை நிகழும் வெளியை (Space) தனது அற்புதமான கம்போசிஷன் மூலம் நிறுவுகிறார். படத்தில் இரண்டே இரண்டு, மூன்று ஷாட்களில் மட்டுமே கேமரா அசைகிறது. மம்மூட்டி கண்ணாடியில் முகம் பார்க்கும் போது மட்டுமே குளாசப் ஷாட் வருகிறது. அந்த குளோசப்தான் கதையின் முக்கிய தருணமாகிறது. ஜேம்ஸின் மனைவி மற்றும் பையன், சுந்தரத்தின் மனைவி மற்றும் மகள் ஆகியோரை ஒரே சட்டகத்தில் இரண்டு பிரிவுகளாக கம்போஸ் செய்யும் காட்சி அழகியலின் உச்சம்.
சுந்தரத்தின் கதை நிகழும் காட்சிகளில் ஒரே ஒரு குளோசப் காட்சி வருகிறது. அதுவரை யாருடைய முகங்களையும் தெளிவாக காட்டாமல், மிட் லாங் ஷாட்களாகவே வருகின்றன. ஒளியமைப்புகளும், ஒளிக்கு நேர் எதிராக வைக்கப்பட்டிருக்கும் கோணங்களும் ஈஸ்வரின் மேதைமைக்கு சான்று. ஜேம்ஸின் மனைவி, சுந்தரத்தின் மனைவி, அவர்களது குழந்தைகள் யாருக்கும் குளோசப் காட்சிகளே வைக்காமல் தவிர்க்கிறார்.
இதன் மூலம் ஒரு ஊசலாட்டமான, நிச்சயமற்ற கனவுத் தன்மையை உருவாக்குகிறார் ஈஸ்வர். படம் முழுக்க கேமரா கதைக்களத்தில் பங்கேற்பாளனாக செயல்படுவதன் மூலம் பார்வையாளர்களும் கதையின் ஒரு கேரக்டர் என்பதை உணரத்தொடங்கி விடுகிறார்கள். சினிமாவின் மொழி என்பது அந்த சினிமா நிகழும் வெளி, காலம் இரண்டையும் எப்படி கையாள்கிறது என்பதை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தப்படத்தின் சாட்சிய வகைமையான ஒளிப்பதிவு படத்தை உயர் தரத்திற்கு கொண்டு செல்கிறது.
படம் முழுக்க தனியாக இசைத் தடம் இல்லை. தமிழ் நிலத்தில் கேட்கும் ஒலிகளையே, அதாவது, பெரும்பாலும் சினிமா, டிவி ஒலிகளையே பயன்படுத்தி இருக்கிறார்கள். பழைய சினிமா பாட்டுக்கள், வசனங்கள் என தமிழ் நிலத்தில் கேட்கும் ஒலிகளின் மூலம் தமிழ் பண்பாட்டில் சினிமாவின் தாக்கத்தை பூடகமாக உணர்த்துகிறார் இயக்குனர். மயக்கமா கலக்கமா? பாடல், இரத்தக் கண்ணீர் வசனங்கள் மூலம் தமிழ் வாழ்வின் ஒலிப் பிம்பங்களை தொகுத்திருக்கிறார் இயக்குனர். ஒலி வடிவமைப்புக்காக இந்தப் படம் விருதுகளை பெறக்கூடும். தமிழர்களைப் பற்றியும், அவர்களின் பண்பாடு குறித்தும் கேரளாவின் பார்வையையும் படம் பேசுகிறது. அந்த அளவில் இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட மலையாள சினிமா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu