இதுவரை சொல்லாத உண்மையை சொல்கிறேன்: தேனியில் டி.டி.வி., தினகரன்
அமமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் தினகரன்
தேனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் டி.டி.வி., தினகரன் பேசியதாவது: நான் பதவிக்காக அலைபவன் இல்லை. ஆசைப்படுபவனும் இல்லை. பதவிக்காக எடப்பாடியை போல் காலில் விழுபவனும் இல்லை. நான் பிறருக்கு பதவி கொடுத்து பழக்கப்பட்டவன். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவன்.
தேனி தொகுதி மக்கள் என்மீது அன்பு வைத்திருக்கிறார்கள். பூர்ணிமா பவுர்ணமி, மகம் நட்சத்திரத்தின் போது ஜெயலலிதா பிறந்தார். 76 ஆண்டுகள் கழித்து தற்போது அதே பூர்ணிமா பவுர்ணமி, மகம் நட்சத்திரம் நடக்கும் இப்போது நான் சொல்கிறேன். அ.தி.மு.க.,வை நிச்சயம் மீட்பேன். தொண்டர்களின் நலனுக்காகவும், தமிழகத்தின் நன்மைக்காகவும் இதனை நான் செய்வேன். அ.தி.மு.க.,வை மீட்டு கட்டாயம் அம்மாவின் பொற்கால ஆட்சியை திரும்பவும் அமைப்போம். இதற்காகவே ஓ.பி.எஸ்., உடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளோம்.
அரசியலை தாண்டி நானும் அவரும் நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். காலம் செய்த கோலம் இடையில் சில நாட்கள் பிரிந்திருந்தோம். எம்.ஜி.ஆர்., உருவாக்கிய இரட்டை இலை சின்னம் தற்போது பி.எஸ்.வீரப்பாவிடமும், எம்.என்.,நம்பியாரிடமும் உள்ளது. அது மீண்டும் எம்.ஜி.ஆர்., கைக்கு வர வேண்டும்.
கல்லாப்பெட்டி கம்பெனி தலைவர் பழனிச்சாமி கும்பலிடம் இருந்து இரட்டை இலையை மீட்க வேண்டும். நான் இதுவரை சொல்லாத உண்மையை தற்போது சொல்கிறேன். ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி நினைக்கவில்லை. யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதை முடிவு செய்ய எனது சித்தியை அதாவது தொண்டர்களின் சின்னம்மாவை சந்திக்க பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றேன். அவர் தான் என்னை போட்டியிட சொல்லி அறிவுறுத்தினார்.
அப்போது முதல்வராக இருந்த பழனிச்சாமி அனுப்பிய ஒரு உளவுப்பிரிவு அதிகாரி என்னை சந்தித்து, ‘‘சார் நீங்கள் போட்டியிட்டால் வெற்றி பெறுவீர்கள். ஆனால் போட்டியிட வேண்டாம்’’ என்றார். அப்போது நான் புரிந்து கொண்டேன். நான் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் சென்றால் முதல்வராகி விடுவேன் என்ற அச்சத்தில் பழனிச்சாமி இந்த திட்டத்தை வகுத்துள்ளார்.
இருப்பினும் நான் போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததால் என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார். எம்.ஜி.ஆர்., உருவாக்கி, அம்மா கட்டிக்காத்த கட்சியை மீட்டு தொண்டர்களிடம் வழங்கவே நான் தனிக்கட்சி தொடங்கினேன். பழனிச்சாமி மீது இருந்த கோபத்தால் மக்கள் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு ஒட்டுப்போட்டனர். தி.மு.க.,வின் செயல்பாடுகளை பார்த்து மக்கள் மிக, மிக கோபத்தில் உள்ளனர். இதனால் நானும், ஓ.பி.எஸ்.,சும் சேர்ந்து அ.தி.மு.க., தொண்டர்களை இணைத்து கட்சியை மீட்டு அம்மாவின் பொற்கால ஆட்சியை கொண்டு வருவோம். இதற்காகவே ஒன்று சேர்ந்துள்ளோம் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu