ஆன் லைனில் தாய்மொழியைக்கற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்
பைல் படம்
வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வசிக்கும் இந்தியர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் தாய்மொழி கற்றுத்தரும் நிகழ்வு தாய்மொழிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
உலக அளவில் வெளிநாடுகளில் வசிப்பவர்கள், குடியுரிமை பெற்றவர்கள், வேலை செய்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்வரிசையில் இடம் பிடித்துள்ளது. பல கோடி இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அங்கேயே குடியுரிமையும் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருசிலர் தவிர மற்றவர்கள் இந்தியர் பெண்களையே மணம் புரிந்துமுடித்து, மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு தாய்மொழி கற்றுத்தருவது இதுவரை மிகப்பெரும் பிரச்னையாகவே இருந்து வந்தது. கொரோனா கற்றுக்கொடுத்த பாடம் அந்த பிரச்னையை தீர்த்து வைத்து விட்டது. அது தான் ஆன்லைன் கல்வி. வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களது தாய்மொழி எதுவோ, அந்த மொழியில் புலமை பெற்ற ஆசிரியர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளும் நல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் மூலம் தங்களது குழந்தைகளுக்கு ஆன்லைனில் கிடைத்துள்ள வாய்ப்பை வைத்து ஏறத்தாழ கைவிட்டுப் போன மறந்து போன தாய்மொழியை ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர். இதற்கு தேவையான புத்தகங்களை அந்த ஆசிரியர்களே வாங்கி தங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.தாய் மொழி மட்டுமின்றி தங்கள் நாட்டின் பாரம்பரியம், வரலாறு, இதிகாசங்கள், பண்பாடுகள், நாகரீகங்கள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், இந்தியர்களின் திருவிழாக்கள், திருவிழா நடப்பதற்கான காரணங்களையும் இதன் மூலம் அறிந்து கொள்கின்றனர்.
இவற்றில் புலமை பெற்று தேர்வு எழுதி இந்திய அரசு பணிகளில் சேர வேண்டும் என்பதெல்லாம் இவர்களது கனவு இல்லை. ஆனால் தங்களது தாய்மொழியையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் விரும்புவதால் இப்போது ஆன்லைன் கல்வி சக்கைபோடு போடுகிறது என்றால் மிகையில்லை. பெரும்பாலும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களையே வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது குழந்தைகளின் ஆசிரியர்களாக (குருவாக) தேர்வு செய்கின்றனர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக வேலையை இழந்து, வறுமையில் பரிதவிக்கும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வேலை வாய்ப்பையும், போதிய வருவாயும் கிடைத்து வருகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. மேலும், இந்த ஆசிரியர் கேட்கும் மாதந்திர கல்வி கட்டணம் என்பது வெளிநாடுவாழ் இந்தியர்களை பொறுத்தவரை அவர்கள் நாட்டின் பணமதிப்புக்கு மிகவும் சொற்பான தொகைதான் என்பதால், ஆசிரியர்கள் கேட்பதை விட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதிகமாகவே அள்ளிக் கொடுக்கின்றனர். இதன் மூலம் நம்நாட்டின் மொழி, பண்பாடு, நாகரீகம், கல்வி, கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவி வருகிறது என ஆன்லைன் ஆசிரியர்கள் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu