தென்மேற்கு பருவமழை குறைவு: மதுரை, சிவகங்கை பாசனம் கேள்விக்குறி
தேனி மாவட்டம், முதல் போக நெல் சாகுபடி வயல்கள் கதிர்பிடிக்கும் பருவத்திற்கு வந்து விட்டன.
முல்லை பெரியாறு அணை பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2,420 மி.மீ. மழையும், சுரங்கப் பாதை அமைந்துள்ள தேக்கடி பகுதியில் 1,952 மி.மீ. மழைப் பொழிவும் இருக்கிறது. நீர்பிடிப்பு பகுதி 240.80 சதுர மைல். சுரங்கப் பாதை வழியாக வெளியேறும் தண்ணீர், கூடலூரில் வைகையின் துணை நதியான வைரவன் ஆற்றில் விடப்படும். இந்த தண்ணீர் சுருளி ஆற்றுடன் கலந்து, தேனி அருகே வைகை ஆற்றில் நேரடியாக கலக்கிறது. அங்கிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கிட்டத்தட்ட பொய்து போன நிலையை எட்டி உள்ளது. இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கி 60 நாட்களை கடந்த பின்னரும், லேசான சாரல் தவிர வேறு பலத்த மழை எங்கும் பெய்யவில்லை. பெரியாறு அணைப்பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கிட்டத்தட்ட மழை பொய்த்து போனது. பெரியாறு அணைப்பகுதியில் மழை இல்லாததால், அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது.
நேற்று பெரியாறு அணைப்பகுதியிலும், தேக்கடியிலும் லேசான மேகமூட்டம் மட்டும் காணப்பட்டது. ஈரப்பதம் நிறைந்த காற்று மட்டுமே வீசியது. வெறும் ஒரு மி.மீ., கூட மழை பதிவாகவில்லை. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 977 கனஅடியாக இருந்து வருகிறது. அணையில் இருந்து தேனி மாவட்ட பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 121.45 அடியாக உள்ளது.
வைகை அணைக்கும் நீர் வரத்து இல்லை. இன்று காலை நிலவரப்படி வைகை அணைக்கு விநாடிக்கு 93 கனஅடி மட்டுமே நீர் வந்தது. அணையில் இருந்து மதுரை, மற்றும் ஆண்டிபட்டி, சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணை நீர் மட்டம், வைகை அணை நீர் மட்டம் தொடர்ந்து தடுமாற்றமான நிலையில் உள்ளதால், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனங்களுக்கு நீர் திறக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் மதுரை மாவட்ட இருபோக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறப்பது சாத்தியமாகுமா என கணிக்க முடியவில்லை. தற்போதய நிலவரம் கேள்விக்குறியாகவே உள்ளது. தேனி மாவட்ட நெல் விவசாயத்தை முழுமையாக எடுத்து விடலாம். ஆனால் மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனங்கள் தடுமாறுகிறது என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu