தேனியில் கட்டிட தொழில் நலிவு : வேலையின்றி தொழிலாளர்கள் தவிப்பு ..!

தேனியில் கட்டிட தொழில் நலிவு : வேலையின்றி தொழிலாளர்கள் தவிப்பு ..!
X

கட்டிட பணியாளர்கள் (கோப்பு படம்)

தேனியில் கட்டுமானத்தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சியால் தினமும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

தேனி மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் காலை 7 மணிக்கே பெத்தாட்ஷி விநாயகர் கோயில் முன் கூடுவார்கள். குறைந்தபட்சம் 500 பேர் கூடுவார்கள். கட்டிட வேலையினை செய்யும் ஒப்பந்ததாரர்கள் இங்கு வந்து தங்களது பணிக்குத் தேவையான கொத்தனார்கள், நிமிர்ந்தாள், சித்தாள்களை வேலைக்கு அழைத்துச் செல்வார்கள். வேகமாக வளர்ந்து வரும் தேனியில் கட்டுமானத்துறை முன்பு விறுவிறுப்பாக நடந்தது. சில மாதங்களாக இத்தொழிலில் பெரும் நலிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் நுாறு முதல் 150 பேர் வரை வேலையின்றி வீடு திரும்புகின்றனர்.

கட்டுமானத் தொழிலாளர்கள் கூறியதாவது:-

மணல் தட்டுப்பாடு, சி்மெண்ட் விலை உயர்வு, மூலப்பொருள்கள் விலை உயர்வால் கட்டுமான செலவுகள் அதிகரித்துள்ளது. கொத்தனாருக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய், நிமிர்ந்தாளுக்கு எழுநுாறு ரூபாய், சித்தாளுக்கு அறுநுாறு ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் கட்டிடம் கட்டுபவர்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால், கட்டுமானத்தொழில் தேனியில் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே தினமும் 100 முதல் 150 பேர் வரை வேலையின்றி வீடு திரும்புகிறோம். நாங்கள் பக்கத்து கிராமத்தில் இருந்து இங்கு வந்து செல்ல பஸ் செலவு மட்டும் 50 ரூபாய் ஆகிறது. வேலை கிடைக்காவிட்டால் இந்த செலவு நஷ்டம் தான். இவ்வாறு கூறினர்.

பெண் தொழிலாளி ஒருவர் கூறியதாவது:

எங்களுக்கு குடியிருக்க வீடு கூட இல்லை. வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். பல மாதங்கள் வீட்டுக்கு வாடகை கொடுக்கும் அளவுக்கு கூட சம்பாதிக்க முடியாது. எங்களுடன் வரும் பல பெண்களின் நிலை மிகவும் வறுமையான சூழலில் உள்ளது. அவர்கள் வேலையில்லா விட்டால் பல நாட்கள் வீட்டிற்கு பல கி.மீ., துாரம் நடந்து செல்கின்றனர். செல்லும் வழியில் தோட்ட வரப்புகளில் கீரை பறித்து விற்பனை செய்து சிறிய செலவுகளை ஈடுகட்டி வருகின்றனர். கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள் கூட தெரியவில்லை. அவர்கள் எங்களை பதிவு செய்து ஏதாவது உதவிகள் செய்தால் நல்லது. இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!