கொட்டக்கம்பூர் டூ கிளாவரை ரோடு : கேரளாவின் பதட்டத்திற்கு காரணம் என்ன..?
கிளாவரை பகுதி (கோப்பு படம்)
விகடன் குழுமத்தில் வந்த மூணாறு டூ கொடைக்கானல் சாலை குறித்தான கட்டுரை, பல்வேறு தளங்களில் விவாதங்களை எழுப்பியிருப்பதோடு, கேரளாவை கடுமையாக பதற்றமடையச் செய்திருக்கிறது.
ஒரு சாலையை திறக்கச் செல்வதற்கு ஏன் கேரளா இத்தனை பதற்றமடைய வேண்டும் என்பதற்கு பின்னால் ஆயிரம் காரணங்கள் இருக்கிறது.
1939 முதல் 45 ஆம் ஆண்டு வரை நடந்த இரண்டாம் உலகப் போரின் இறுதி காலகட்டத்தில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைமையிலான நேச நாடுகளுக்கு எதிராக, அச்சு நாடுகள் என்றழைக்கப்பட்ட இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் அடங்கிய அச்சு நாடுகள் போர் நடத்திய காலகட்டம்.
திடீரென சென்னை மீது ஜப்பான் குண்டு வீசப் போவதாக ஒரு வதந்தி பரவியது. அப்போது சென்னையிலிருந்த ஆங்கிலேயர்கள் தங்கள் உயிருக்கு பயந்து சொந்த நாட்டுக்கு தப்பி ஓட முயற்சித்த போது, அவர்களுக்கு தோன்றிய வழிதான், கொடைக்கானலில் இருந்து மூணாறுக்கு சென்று, அங்கிருந்து கோதமங்கலம் வழியாக கொச்சிக்குச் சென்று கப்பலில் தப்பி ஓடுவதென்பது.
இதற்கு அவர்களுக்கு தடையாக இருந்தது கொடைக்கானல் கிளாவரையிலிருந்து, டாப் ஸ்டேஷன் வரை இருக்கும் வெறும் 16 கிலோமீட்டர் வனச்சாலை. மொழிவழிப் பிரிவினை முற்றாக நடந்திடாத காலகட்டத்தில், பிரிட்டிஷ்காரர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிளாவரையிலிருந்து கொட்டக்கம்பூருக்கு ஒரு சாலை வெட்டப்பட்டது. இன்னொரு புறத்தில் கொடைக்கானலை தாண்டி இருக்கும் பேரிஜம் ஏரியிலிருந்தும் கொட்டக்கம்பூரை இணைக்க முடியுமா என்று இணைப்புச் சாலையும் வெட்டப்பட்டது.
ஆனால் எளிதான கிழாவரை டூ கொட்டக்கம்பூர் பயணம் பிரிட்டிஷ் காரர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது. தங்கள் சொந்த நாட்டுக்கு ஜப்பானுக்கு பயந்து தப்பி ஓடினார்கள். பிரிட்டிஷ்காரர்கள் தப்பித்து ஓடிய பாதை என்பதால் அதற்கு தப்பி ஓடிய பாதை என்ற பெயர் ஏற்பட்டது. இதைத்தான் ஆங்கிலத்தில் Escape Road என்கிறோம்.
மொழி வழி பிரிவினைக்குப் பிறகு, கேரளா தேவிகுளம் தாலுகாவை முழுமையாக தன்வசப்படுத்தியது. ஆனாலும் கூட வட்டவடை, கோவிலூர், கொட்டக்கம்பூர் உள்ளிட்ட 28 மலை கிராமங்களில் வாழ்ந்த தமிழர்கள், காலம் காலமாக தங்களுடைய பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வந்ததால் எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை.
1990 கள் வரை வட்டவடை கோவிலூர் எங்கிருக்கிறது என்றே தெரியாத மலையாள சகோதரர்கள், எர்ணாகுளத்தில் இருந்து கோவிலூருக்கு KSRTC பேருந்து விட்டு, இப்படி ஒரு ஊர் இருக்கிறது என்று ஒட்டுமொத்த கேரளத்திற்கும் அம்பலப்படுத்தினார்கள். அன்றைக்கு ஆரம்பித்த பிரச்சனை. சர்வ சாதாரணமாக மலையாளிகள் எளிதாக கோவிலூருக்கு வந்து செல்வதற்கான வழியை அந்த அரசு பேருந்து உருவாக்கியது.
வட்டவடை கோவிலூர் தமிழர்கள் இயல்பாகவே விவசாயத்தின் மூலமாக ஈட்டிய பொருளை கொண்டு சுகவாழ்வு தான் வாழ்ந்தார்கள். ஆனால் மலையாளிகளின் வருகை அங்குள்ள இடத்தின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியது. ஒரு கட்டத்தில் கொட்டக்கம்பூர் பஞ்சாயத்தில் வெளி நபர்களுக்கு இடத்தை விற்கக் கூடாது என்று தீர்மானம் போடும் அளவிற்கு நிலைமை தீவிரமானது. பட்டய பூமி என்பதால் கேரள மாநில அரசால் வட்டவடை கோவிலூருக்குள் எளிதாக நுழைய முடியவில்லை.
ஆனால் இடத்தின் விலை பன்மடங்கு அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் மலையாள ஆதிக்கத்திற்கான வழி ஏற்பட்டது. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்த கொட்டக்கம்பூர் டூ கிளாவரை செல்லும் சாலையை, கவனமாக இழுத்துப் பூட்டியது கேரள மாநில அரசு. வட்டவடை கோவிலூருக்கும், கிளாவரை, கவுஞ்சி, மன்னவனூர், பூண்டி, பூம்பாறை உள்ளிட்ட பகுதி தமிழ் மக்களுக்கும் இடையே காலங்காலமாக இருந்து வந்த திருமண உறவுக்கு பெரும் தடையாக அமைந்தது. கேரள வனத்துறையின் இந்த வேலை.
இந்த நிலையில் தான் தமிழகத்தின் கொடைக்கானல் மலை கிராமங்களில் இருந்து எவரும் வட்டவடை கோவிலூரை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது என்பதற்காக 2003 ஆம் ஆண்டு, சம்மந்தமே இல்லாமல் *பாம்பாடும் சோலை தேசிய பூங்கா* என்ற பூங்காவை அறிவித்தது கேரள மாநில அரசு.
இந்த வேலை அவர்களுக்கு எளிதாக கை கொடுத்தது. பாதையை பூட்டுவதற்கு இதையே காரணமாக காண்பித்தார்கள் கேரள வனத்துறையினர். மூணாறில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் 89 கிலோமீட்டர் சாலையில், இரவிகுளம் தேசிய பூங்கா, நீலக்குறிஞ்சி சரணாலயம், சின்னாறு வன உய்வகம், இந்திராகாந்தி தேசிய பூங்கா நான்கு தேசிய பூங்காக்களை ஊடறுத்து, வன விலங்குகள் நிறைந்த அந்தச் சாலையில், இரவும் பகலும் வாகனங்கள் சென்று வரும் நிலையில், பாம்பாடும்சோலை தேசிய பூங்காவை ஊடறுத்து வாகனங்கள் செல்வதற்கு என்ன தடை இருந்துவிட முடியும்.
கிளாவரை என்ற கொடைக்கானல் தாலுகாவில் உள்ள கிராமம், போடியிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள கிராமம் என்பதை கவனமாக மறந்து விட்டார்கள், மலையாள சகோதரர்கள். நாம் சொல்வது என்னவென்றால்,,, மூணாறையும் கொடைக்கானலையும் இணைக்கும் இந்த சாலையை எதற்காக கேரள மாநில வனத்துறை பூட்டு போட்டு பூட்ட வேண்டும்...? மக்கள் பயன்பாட்டுக்கு அந்தச் சாலையை திறந்து விடுவதில் என்ன சிக்கல் கேரளாவிற்கு...?
கிளாவரை டூ கொட்டக்கம்பூருக்குமிடையிலான தூரம் வெறும் 16 கிமீ மட்டுமே என்பதை நாங்கள் தரவுகளுடன் உறுதிப்படுத்தினால் கேரளா சாலையை திறக்குமா...? நாம் என்ன மேற்கோள்களை, தரவுகளை அவர்களிடம் கொடுத்தாலும் இந்த சாலையை ஒருபோதும் திறக்க மாட்டார்கள்.
அதற்குப் பல காரணங்கள் இருக்கிறது...
அது குறித்த செய்தி விகடனில் செய்தி வந்ததும் கேரளா பற்றிகக் கொண்டது. அதுவும் பிரச்சனையின் ஆணிவேரை எடுத்து வைத்து பேச நாம் ஆரம்பித்ததும் கூடுதல் பதற்றம் வந்தது. ஒரு சாலையை திறப்பதற்கு ஏன் இத்தனை பதற்றம். கொடைக்கானல் டூ மூணாறு சாலையை திறந்தால் மூணாறில் சுற்றுலா சுத்தமாக அடிபட்டு போகும்.
இரவிகுளம் தேசிய பூங்கா வரையாடுகளை தவிர்த்து மூணாறில் பார்ப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில், சுற்றுலா வாசிகள் கொட்டக்கம்பூர்- கிழாவரை வழியாக கொடைக்கானலை அடைந்து விடக்கூடும் என்கிற அச்சம்தான் கேரளாவை இப்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் எங்களுடைய நிலைப்பாடு என்பது வேறு. வட்ட வடை, கோவிலூர் உள்ளிட்ட 28 மலை கிராமங்களில் விளைய வைக்கப்படும் காய்கறிகளை தவிர்த்து, டாட்டா தேயிலைத் தோட்டங்களின் கீழ் வரும் விவசாய நிலங்களில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அபரிமிதமாக விளைய வைக்கும் கேரட்டுகளை சந்தைப்படுத்துவதற்கும் இந்த வழி ஒரு வாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறோம்.
எல்லப்பட்டி, செண்டுவாரை, சிட்டிவாரை, மாட்டுப்பட்டி, குண்டல கிராம்ஸ்லேண்ட், நெற்றிமுடி, அருவிக்காடு உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் விளைய வைக்கப்படும் கேரட்டுகளை எளிதில் சந்தைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்படும் என்பதற்காக தான் இந்த பாதையை நாங்கள் கோருகிறோம்.
மேலாக திருமண உறவுகளை பேணுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இந்த சாலை அமையும் என்கிற நம்பிக்கைதான் எங்களுடைய நிலைப்பாடே தவிர மொட்டையாக கேரளாவை எதிர்க்க வேண்டும் என்பது இல்லை. உங்களை மொட்டையாக எதிர்க்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தால் ,குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன் செல்லும் சாலைக்கான எல்லை அளவீடு முடிந்து விட்ட நிலையில் கூட, அந்த சாலைக்கான வேலை உயிர் பெறவில்லை என்பதற்கு பின்னால் கேரள மாநில அரசு இருக்கிறது என்று நாங்கள் குற்றம் சாட்ட முடியும்.
உங்களுடைய மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா மாபியாக்களும், மூணாறில் கோடிக்கணக்கில் வருமானம் வரும் ரிசார்டுகளை கட்டிக்குவித்திருக்கும் அரசியல்வாதிகளும் தான் குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன் வரையிலான சாலை போடுவதை தடுக்கும் குற்றவாளிகள். எனவே முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கும் இந்த சாலை பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மலையாள அதிகாரிகள் உணர வேண்டும். முல்லைப் பெரியாறு எங்கள் உயிர் சார்ந்தது.
கொடைக்கானல் டூ மூணாறு சாலை எங்கள் உணர்வு சார்ந்தது, உரிமை சார்ந்தது. தரவுகளை எடுத்து வைத்து கேரள அதிகாரிகளுடன் விவாதிக்க இந்த சங்கம் தயாராக இருக்கிறது. தேவையற்ற வதந்திகளை பரப்புவதை விட்டு விட்டு கேரள மாநில அதிகாரிகள் எங்களோடு பேச்சுவார்த்தைக்கு முன் வாருங்கள்.
அதுதான் ஜனநாயகத்தின் பன்முகத்தன்மைக்கு சான்று என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க முக்கிய நிர்வாகிகள் இ.சலேத்து, பொன்.காட்சிக் கண்ணன், மை.தாமஸ், பா.ராதா கணேசன். கடமலை ஜெயக்குமார். சிலமலை மாரிஸ் மற்றும் ச.அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu