தேனியில் கழிவுகளை கொட்டி விட்டு உரம் வாங்கிச் செல்லும் கேரள லாரிகள்..!
கேரளாவில் இருந்து கொண்டுவந்து காட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் (கோப்பு படம்)
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் கேரள மக்களிடையே விழிப்புணர்வு அதிகம் உள்ளது. கேரளாவில் பாலீதீன் மற்றும் மருத்துவக் கழிவுகளை அழிக்க இடம் இல்லை. இதனால் திருட்டுத்தனமாக லாரிகளில் ஏற்றி தேனி மாவட்டத்துக்கு அனுப்பி விடுகின்றனர். மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் ஆள் நடமாட்டம் இல்லாதவை. இரவில் எந்த இடத்தில் கொட்டினால் பாதுகாப்பாக வெளியேற முடியும் என கேரள லாரி ஓட்டுனர்கள் மிக தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர்.
குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனைச் சாவடிகளில் எவ்வளவு கிடுக்குப்பிடி போட்டாலும், கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள் எப்படியோ?? தப்பி தேனி மாவட்டத்திற்குள் வந்து விடுகின்றன. இரவில் அவர்கள் கழிவுகளை ஏதாவது ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி கொட்டி புதைத்து விடுகின்றனர். சில நாட்கள் முன்பு வரை கழிவுகளை அப்படியே கொட்டி தீ வைத்தனர். தற்போது புதைத்து விடுவதால் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது.
கழிவுகளை கொட்டி விட்டு காலியான லாரியுடன் கேரளா செல்வதில்லை. தேனியில் மட்டும் கடலை, வேம்பு, எள்ளு, போன்ற ஏழு வகை புண்ணாக்குகள் மற்றும் கலவை உரங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. தவிர ஆடு, மாடு கழிவு உரங்களும் அதிகளவில் உள்ளன. இந்த இயற்கை உரங்களை ஏற்றிக் கொண்டு கேரளா சென்று அங்கு நல்ல விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இதன் மூலம் வரும் போதும் சரக்கு ஏற்றி வந்த வருவாய், திரும்ப செல்லும் போதும் லோடு ஏற்றிச் சென்ற வருவாய் என கேரள லாரி டிரைவர்களுக்கு வருவாய் கொட்டுகிறது. தேனியில் இருந்து இயற்கை உரங்களை வாங்கிச் சென்று அங்குள்ள ஏலம், மிளகு, காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இப்படி உரங்களை வாங்கிச் செல்வதில் எந்த தவறும் இல்லை. இது நல்ல விஷயம் தான். ஆனால் வரும் போது கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தான் ஏற்க முடியாத விஷயமாக உள்ளது என தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu