தமிழக வனப்பகுதிகளை சொந்தம் கொண்டாடும் கேரளா?

தமிழக வனப்பகுதிகளை சொந்தம் கொண்டாடும் கேரளா?
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.

தமிழக வன எல்லைக்குள் பெரியாறு புலிகள் காப்பகம் அத்து மீறுவதாக விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் கூறியதாவது: சில நாட்களாக, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், பீர்மேடு தாலுகா, தேக்கடியில் அமைந்திருக்கும் பெரியார் புலிகள் காப்பகத்தின் எல்லைகள் குறித்து ஒரு விரிவான ஆய்வில் ஈடுபட்டேன். அதன் முடிவு எனக்கு அதிர்ச்சியையே கொடுத்திருக்கிறது.

தமிழகத்திற்கு சொந்தமான வனப் பகுதிகளின் பெயர்களை எல்லாம், அவர்கள் தங்களுடைய டிவிஷனுக்கு சூட்டியிருப்பதை பார்த்தால், கண்டிப்பாக பெரியார் புலிகள் காப்பகம் தமிழக எல்லைக்குள் அத்துமீறி இருக்கிறது என்பது புலனாகிறது. பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிஷன் எல்லைகளை முதலில் பார்க்கலாம்.

இரவங்கலார் ரேஞ்ச், கோட்டமலை ரேஞ்ச், மணலாறு ரேஞ்ச், மாவடி ரேஞ்ச், மயிலப்பாரா ரேஞ்ச், மூலவைகை ரேஞ்ச், பெரியார் ரேஞ்ச், சுந்தர மலை ரேஞ்ச், தானிக்குடி ரேஞ்ச், உம்மி குப்பம் ரேஞ்ச், தாமரை ரேஞ்ச், ரெண்டாண்டிங்கற ரேஞ்ச் , தேக்கடி ரேஞ்ச், வல்லக்கடவு ரேஞ்ச் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பெரியார் புலிகள் காப்பகத்தின் மேற்கு டிவிஷனில் அழுதா ரேஞ்ச், பம்பா ரேஞ்ச், என பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள இரண்டு டிவிசன்களும் பெயர் சூட்டி வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதில் பெரியாறு கிழக்கு டிவிசனின் தலைமையகமாக குமுளி இருக்கிறது. இந்த கிழக்கு டிவிஷன் தன்னுடைய எல்லைக்கு சூட்டி இருக்கும் பெயர்கள் அத்தனையும் தமிழக வனப்பகுதியின் பெயர்கள். அதிலும் குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் வரும் பகுதிகளின் பெயர்களாகும்.

இந்த கிழக்கு டிவிஷனின் கீழ் வரும் கோட்டமலை ரேஞ்ச், சுந்தரமலை ரேஞ்ச், மைலப்பாறை ரேஞ்ச் ஆகிய மூன்றும் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவில் வருகிறது. சிறிய அளவிலான பகுதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்குள் வருகிறது.

தமிழக வனப்பகுதிகளுக்கு சூட்டப்பட்டு இருக்கும் பெயர்களை, போகிற போக்கில், பெரியார் புலிகள் காப்பகம் எடுத்து பயன்படுத்துவது ஏற்புடைய ஒன்று அல்ல. அதுபோல இரவங்கலார் ரேஞ்ச், மணலாறு ரேஞ்ச், மூல வைகை ரேஞ்ச், தானிக்குடி ரேஞ்ச், பெரியார் ரேஞ்ச் ஆகிய ஐந்தும் தேனி மாவட்ட வன எல்லைக்குள் வருகிறது.

மேற்கண்ட 5 பெயர்களுமே, மேகமலை மற்றும் வெள்ளிமலை வனப் பகுதியை ஒட்டி வரும் தமிழக வனப்பகுதியின் இடப்பெயர்கள் ஆகும். தமிழக வனப் பகுதியில் பெயர்களை எந்த அடிப்படையில் பெரியார் புலிகள் காப்பக அதிகாரிகள் தங்களுடைய கிழக்கு டிவிஷனுக்கு சூட்டி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தென்காசி மாவட்ட வனத்துறை, விருதுநகர் மாவட்ட வனத்துறை மற்றும் தேனி மாவட்ட வனத்துறை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கொண்ட கூட்டு கமிட்டியை உடனடியாக தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

கூட்டு கமிட்டியை உருவாக்குவதோடு உடனடியாக பெரியாறு புலிகள் காப்பகத்தின் உடைய தமிழக எல்லைகளை அளவீடு செய்வதற்கும் அதை உறுதிப்படுத்துவதற்கும் செயலில் இறங்க வேண்டும்.

கடந்த 12-6-2015 ஆம் ஆண்டு, தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, வாசுதேவநல்லூர் நகரத்திலிருந்து தலையணை செல்லும் வழியில், பெரியாறு புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிஷன் ஒன்று கட்டப்பட்டு அது செயல்பாட்டில் இருந்து வருகிறது. குமுளியில் இருந்து நமது தலையணைக்கு மேலே உள்ள செண்பகவல்லி கால்வாய் பகுதிக்கு கேரளா வன அதிகாரிகள் வரவேண்டுமானால், கூடுதலாக கோட்டமலை டிவிஷனுக்கு ஒரு கேரள வன அதிகாரி வர வேண்டுமானால், அவர் தமிழகத்தின் மூன்று மாவட்ட எல்லைகளை கடந்து தான் வர வேண்டும்.

பெயர்களை சூட்டியதோடு தமிழக எல்லைக்குள்ளேயே வந்து, ஒரு அலுவலகத்தையும் கட்டி, அதை நிரந்தர செயல்பாட்டில் வைத்திருப்பது என்பது அயோக்கியத்தனத்தின் உச்சம்.

எல்லாவற்றிற்கும் மேலாக குமளியிலிருந்து ஆயுதங்களை கூடலூர் கம்பம் தேனி ஆண்டிபட்டி உசிலம்பட்டி பேரையூர் ராஜபாளையம் சிவகிரி வாசுதேவநல்லூர் வழியாக எவ்வித அனுமதியும் இன்றி தலையணை செல்லும் வழியில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு எடுத்து வருகிறார்கள் பெரியார் புலிகள் காப்பக அதிகாரிகள்.

இந்த ஆயுதப் பயன்பாடு வாசுதேவநல்லூர் காவல் சரக எல்லைக்குள் வருவதால், வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர், முழுமையாக அதனை கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதுபோல தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வெள்ளிமலை வனப்பகுதி வழியாக, தானிக்குடி, மூல வைகை மற்றும் உம்மிக்குப்பம் பகுதிகளுக்கும், நேரம் காலம் பார்க்காது, 24 மணி நேரமும் மஞ்சனூத்து சோதனை சாவடி வழியாக பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு. டிவிஷன் அதிகாரிகள் சென்று வருவதையும் கண்காணிக்க வேண்டும். நமக்குத் தேவை மூன்று விடையங்கள்

1-பெரியார் புலிகள் காப்பகம் தமிழகத்தோடு பகிர்ந்து கொள்ளும் எல்லைகளை உடனடியாக கூட்டு அதிகாரிகள் கமிட்டி மூலம் அளப்பது.

2-ட்ரோன் மூலம் தமிழக கேரள வன எல்லைகளை, கண்காணிப்பதற்கு தமிழக அரசு உத்தரவு விட வேண்டும்.

3-பெரியார் புலிகள் காப்பக டிவிஷன்களுக்கு சூட்டப்பட்டு இருக்கும் பெயர்களை மறு பெயர் சூட்ட சொல்லி பெரியார் புலிகள் காப்பகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தின் பெயர்களை அவர்களுடைய வனப்பகுதிகளுக்கு சூட்டிக்கொண்டு, நாளை நம்முடைய வனப்பகுதிகளை கபளீகரம் செய்வதற்கும் அவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!