கேரளாவின் அத்துமீறிய விஷம பிரசாரம்: லோயர்கேம்பி்ல் தமிழக விவசாயிகள் மறியல்

கேரளாவின் அத்துமீறிய விஷம பிரசாரம்:  லோயர்கேம்பி்ல்  தமிழக விவசாயிகள் மறியல்
X

லோயர்கேம்ப்பில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மத்தியில் ஐந்து மாவட்ட வி வசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பேசினார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் பிரசாரத்தை கண்டித்து விவசாயிகள் சாலையில்அமர்ந்து போராட்டம் நடத்தினர்

முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரளாவில் நடைபெறும் அத்துமீறல் பிரசாரங்களை உடனடியாக நிறுத்தக்கோரி தமிழக விவசாயிகள் லோயர்கேம்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லை பெரியாறு அணையினை உடைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று கேரளாவில் இருசக்கர வாகன பேரணி நடந்தது.. இந்த ஊர்வலத்தை கண்டித்து தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் (தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம்) சார்பில் இன்று லோயர்கேம்பில் மறியல் போராட்டந் நடைபெற்றது.

ஐந்து மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். தமிழகம் கேரளா இடையே குமுளி ரோட்டில் நடக்கும் வாகன போக்குவரத்து இதனால் தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழக விவசாயிகளுடன், தேனி மாவட்ட வருவாய்த்துறை, போலீஸ்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கு விவசாயிகள் முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரளாவில் நடைபெறும் விஷம பிரசாரத்தை தடுக்க வேண்டும். அணையை பாதுகாக்க தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். கேரள அரசியல்வாதிகளை முல்லை பெரியாறு அணைக்குள் அனுமதிக்க கூடாது.

அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். கேரள எம்.பி.,க்கள் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக பேசிய பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். முல்லை பெரியாறு அணைக்கு எதிராக பேச அனுமதிக்க கூடாது. பேபி அணையினை பலத்தும் பணிகளை உடனே தொடங்க வேண்டும். அந்த பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

அதிகாரிகள் பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி, விவசாயிகளின் கோரிக்கையினை தமிழக அரசிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர்.. அதன் பின்னர் விவசாயிகள் பென்னிகுவிக் மணி மண்டபத்திற்குள் சென்று அமர்ந்து அங்கு தர்ணா செய்தனர். பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், கேரளாவில் முதலில் முல்லை பெரியாறு அணையினை பற்றி தவறாக பேசினர். தற்போது அணை கட்டிய பென்னிகுவிக் பற்றி தவறாக விஷம கருத்துகளை பரப்புகின்றனர். இதனால் இருமாநிலங்களிடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்பு இல்லை. பென்னிகுவிக் தமிழர்களின் தெய்வம். எனவே அவரை பற்றி பேசினால், கேரளா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும். இன்றைய விமர்சனமே பென்னிகுவிக் பற்றி பேசிய கடைசி விமர்சனமாக இருக்க வேண்டும். இனியும் பேசினால் நாங்கள் கடும் நடவடிக்கைகளில் இறங்க நேரிடும் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!