நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிக்கல் : பெரியாறு விவசாயிகள் கொந்தளிப்பு..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிக்கல் :  பெரியாறு விவசாயிகள் கொந்தளிப்பு..!
X

பெரியாறு அணை உரிமைக்காக உத்தமபாளையத்தில் நடந்த தமிழக விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் ச.பென்னிகுயிக் பேசினார்.

பெரியாறு அணை குறித்த அத்துமீறல் கருத்துகளை கேரள அரசு தடுக்காவிட்டால், நிச்சயம் மீண்டும் ஒரு பிரளயத்தை சந்திக்க நேரிடும்.

பெரியாறு அணை குறித்த எச்சரிக்கையினை இருமாநில உளவுத்துறை போலீசார் தமிழக, கேரள அரசுகளுக்கு அனுப்பி உள்ளனர். கேரளாவில் உள்ள சிலர் தங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காக முல்லைப்பெரியாறு அணை குறித்து விஷம கருத்துக்களை பரப்பி வருகின்றனர். லைக் வேண்டும், அதிக பார்வையாளர்கள் வேண்டும் என்ற ஒரு சுயநலத்திற்காக கேரள யூடியூபர்கள் முதல் செய்தி சேனல்கள் வரை முல்லைப்பெரியாறு அணை குறித்து மிக, மிக தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

முல்லைப்பெரியாறு அணையினை தமிழக அரசு மிகவும் சிறப்பான முறையில் பலப்படுத்தி உள்ளது. அணை உடைய வாய்ப்புகளே இல்லை என மத்திய நீர்வள கமிஷன் நிபுணர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சுப்ரீம்கோர்ட் பேபி அணையினை பலப்படுத்தி முடித்த பின்னர், அணையில் 152 அடி நீர் தேக்கலாம் என இரண்டு முறை உத்தரவிட்டுள்ளது.

பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கேரள மாபியாக்கள் பலர் ஹோட்டல்களை கட்டி உள்ளனர். பல தங்கும் விடுதிகள் உட்பட பல்வேறு குடியிருப்பு கட்டுமானங்களும் கட்டப்பட்டுள்ளன. தவிர கேரள அரசு ஒரு படி மேலே போய் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பஸ்ஸ்டாண்ட் போல் செயல்படும், வாகன நிறுத்துமிடமும் கட்டி உள்ளது.

அணையில் நீர் நிரம்பினால், அத்தனை கட்டுமானங்களும் நீருக்குள் சென்று விடும். இதனால் நீர் மட்டத்தை உயர்த்தக்கூடாது என கேரள மாபியாக்கள் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வருகின்றனர். இந்த கேரள மாபியாக்கள் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் மிகப்பெரிய அதிகார பலமும், பணபலமும் கொண்ட ஒரு வலுவான நிழல் உலகம். இவர்கள் சொல்வதை கேட்காவிட்டால், கேரள அரசை இவர்களே பல சிக்கல்களை உருவாக்கி கவிழ்த்து விடுவார்கள். அந்த அளவுக்கு பலம் படைத்தவர்கள்.

இது பற்றிய முழு விவரமும் தமிழக அரசுக்கும் தெரியும். கேரள அரசுக்கும் தெரியும். மத்திய அரசுக்கும் தெரியும். இருப்பினும் கேரள அரசு அரசியல் காரணங்களுக்காக பெரியாறு அணை பிரச்னை பற்றிய அவதுாறு கருத்துக்களை பரப்புபவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. இப்போது கேரள மாநில பா.ஜ.க.,வும் தங்கள் அரசியல் லாபத்திற்காக பெரியாறு அணை பற்றி அவதுாறு பேச தொடங்கி உள்ளது.

அந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி, ‘பெரியாறு அணை உடைந்தால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா’ என கோர்ட்டை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்வி ‘நாங்கள் பெரியாறு அணையினை உடைக்க எந்த எல்லைக்கும் செல்வோம்’ என்று மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளது. கடந்த பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் கேரள எம்.பி.,க்கள் சிலர் பெரியாறு அணை குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவி்த்தனர்.

தமிழகத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்திற்கு பொருளாதார பலம் மட்டுமே இல்லை. மற்றபடி மிகுந்த அறிவுத்திறன் கொண்ட நிர்வாகிகள் இந்த சங்கத்திற்கு தலைமை பொறுப்பு வகித்து வருகின்றனர். இவர்கள் பெரியாறு பாயும் ஐந்து மாவட்டத்திலும் மிகுந்த பலத்துடன் நிற்கிறார்கள்.

ஒரு சில மணி நேரத்தில் பல ஆயிரம் பேரை திரட்டும் திறன் கொண்டவர்கள். ஏற்கனவே 2011ம் ஆண்டு இது போன்ற சிக்கல்கள் உருவான போது, பொங்கிய தமிழக விவசாயிகள் கேரளாவை மொத்தமாக சுருட்டி விட்டனர். அப்போது விவசாயிகள் காட்டிய ஆவேசம், கேரளாவை மட்டுமின்றி, தமிழக அரசையும், மத்திய அரசையும் மிரட்டி விட்டது. உண்மையில் அப்போது பெரியாறு அணைக்காக தமிழகத்தில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை அப்போதைய தமிழக அரசு ரசித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

விட்டுப்பிடிக்கும் ஒரு நுட்பத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடைபிடித்தார். அதாவது விவசாயிகள் தங்களின் முழு பலத்தையும் கேரளாவை நோக்கிய திருப்பிய பின்னரே விவசாயிகளை கட்டுக்குள் கொண்டு வந்தார். மிகவும் சரியான நேரத்தில், துல்லியமாக ஜெயலலிதா எடுத்த முடிவு காரணமாக ஒட்டுமொத்த கேரளாவும் ஆடிப்போனது.

கிட்டத்தட்ட பெரியாறு அணை விஷயத்தில் எப்படி கேரள அரசுகள் ஒரே மாதிரி செயல்படுகின்றவோ அதே பாணியினை தமிழக அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன. பெரியாறு அணை உரிமையினை பாதுகாப்பதில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் சமபலத்தில் தான் செயல்படுகின்றன. இரண்டு அரசுகளுமே கேரளாவில் சிக்கல் வரும் போதெல்லாம், தமிழக விவசாயிகளின் கொந்தளிப்பையும், மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் தடுப்பதில்லை.

வெளிப்படையாக ஆதரவு தருவது இல்லையே தவிர தமிழக விவசாயிகளின் நியாயமான உரிமை போராட்டத்தை தடுப்பதில்லை. தடுப்பது போன்ற ஒரு மாயை மட்டும் உருவாக்குகின்றனர். காரணம் பெரியாறு வைகை பாசன விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து விட்டால், கேரளாவில் உள்ள விஷமர்களின் ஆட்டம் அதிகரித்து விடும். எனவே தமிழக விவசாயிகளையும் சற்று விளையாட விட்டே தமிழக அரசும் வேடிக்கை பார்க்கிறது.

இப்போது கேரளாவில் வயநாடு பிரச்னையை மையப்படுத்தி, அதேபோல் பெரியாறிலும் நடக்கும். எனவே கட்டாயம் புதிய அணை கட்ட வேண்டும் என கேரளாவில் விஷமப்பிரச்சாரங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக விவசாயிகள் கொந்தளித்து விட்டனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து கேரளாவிற்கு எதிராக போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் கேரள விஷமர்களை நோக்கி சவால் விட்டுள்ளார். முடிந்தால் பெரியாறு அணைக்கு வந்து பார். ஒரு கோடி தமிழர்கள் பெரியாறு அணையினை பாதுகாக்கிறோம் என அவர் விடுத்த சவால், விவசாயிகளை உசுப்பேற்றி உள்ளது. நேற்று கூட கேரளாவை கண்டித்து உத்தமபாளையத்தில் ச.பென்னிகுயிக் தலைமையில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ‘பெரியாறு அணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்.காட்சிக்கண்ணன் தலைமையில் நுாற்றுக்கணக்கான நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். 18ம் கால்வாய் விவசாயிகள் சங்கம், 58ம் கால்வாய் விவசாய சங்கம், தமிழ்நாடு நில வணிகர் விவசாய சங்கம் உட்பட பல்வேறு சங்கத்தினர் பங்கேற்றனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கை நிருபர்கள், செய்தி சேனல்களின் நிருபர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி, செய்திகளை தமிழகம், கேரளா உட்பட நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்தனர்.

இந்த போராட்டங்களை உன்னிப்பாக கவனித்து வரும் கேரள, தமிழக உளவுத்துறை போலீசார், நாளுக்கு நாள் தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கேரளாவில் பெரியாறு அணைக்கு எதிராக நடக்கும் விஷமப்பிரச்சாரங்களை தடுக்காவிட்டால், நிச்சயம் அடுத்து ஒரு பெரும் பிரளயத்தை எதிர்பார்க்கலாம் என எச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளனர்.

தமிழக விவசாயிகள் பொங்கினாலும், தமிழக அரசின் பேச்சை கேட்பார்கள். தமிழக அரசின் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை தாண்டி செல்லமாட்டார்கள். ஆனால் கேரள அரசுக்கு அங்குள்ள விஷமர்களை கட்டுப்படுத்தும் சக்தி இல்லை. எனவே அடுத்து சிக்கல் பெரிதானால் அதற்கு கேரளா தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என தமிழகத்தின் முக்கியஸ்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!