முல்லைப் பெரியாறு அணையின் மீது வன்மம் கக்கும் கேரளத்து இடதுசாரிகள்

முல்லைப் பெரியாறு அணையின் மீது வன்மம் கக்கும் கேரளத்து இடதுசாரிகள்
X

முல்லை பெரியாறு அணை - கோப்புப்படம் 

மக்களைவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கேரளா பெரியாறு அணை பிரச்னையை கிளப்புகிறது என விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர்.

இடுக்கி நாடாளுமன்றத் தேர்தல் களத்தை தீர்மானித்து, கேரளத்து அரசியல்வாதிகளின் பெரியாறு அரசியல் நாடகங்களை அம்பலப்படுத்துவோம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேரள சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடர் நடந்து வரும் நிலையில், அரசின் குரலாக ஒலிக்கும் கவர்னர் உரையில், முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாகவும், அதனால் புதிய அணையை தமிழகத்தின் உதவியோடு கட்ட இருப்பதாகவும் கேரள அரசின் எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் வாசித்து முடித்திருக்கிறார் ஆளுநர் ஆரிப் முகமது கான்.

கேரள அரசு நேரடியாக முல்லைப் பெரியாறு அணை மீது கை வைக்க விரும்பாமல், ஆளுநர் மூலமாக கை வைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளை மீறி தொடர்ச்சியாக அணை மீது கை வைக்க முயலும் கேரளத்து இடதுசாரிகளின் சாயம் விரைவில் வெளுக்கும்.

எப்போதெல்லாம் கேரளாவில் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் கேரளத்து இடதுசாரிகள் களத்திற்கு வருவதும், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கையில் எடுத்து திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை ஒரு பதற்றத்தை பற்ற வைப்பதும் வாடிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு காரணம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் சட்டமன்றத்திற்கு நடந்த இடைத்தேர்தல். அந்தத் தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்காவிட்டால் அரசு கவிழும் என்கிற நிலையில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கையில் எடுத்தது கேரள காங்கிரஸ் கட்சி. அதற்கு பலனும் இருந்தது. இரண்டு மாதத்திற்கு மேலாக தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையேயான உறவு முற்றிலுமாக சீர்குலைந்தது.

அடுத்து எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் முல்லைப் பெரியாறு அணையைப் பற்றி பேசினால் மட்டுமே வாக்கு விழும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது கேரளத்து அரசியல் கட்சிகள்.

1979 ஆம் ஆண்டு அன்றைக்கு பீர்மேடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி.ஏ. குரியனால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பேரபாயம், இன்று வரை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக மஞ்சமலை என்கிற தேயிலைத் தோட்டத்தை மையப்படுத்தி புதிய அணை கட்ட இருப்பதாகவும், அதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து ஏற்கனவே பெற்றுக் கொண்டு விட்டதாகவும் தம்பட்டம் அடிக்கும் கேரள மாநில இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, இப்போது பகிரங்கமாக கவர்னர் உரையின் மூலம் தங்களுடைய உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது

முல்லைப் பெரியாறு அணை தான் இரண்டு மாநில உறவுக்கான மையப்புள்ளி என்கிற நிலையில் அதன் மீது கேரளா கை வைத்தால் இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நல்ல உறவில் சிக்கல் எழுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

ஆனாலும் கேரள மாநிலத்தை ஆளும் முதல்வர்கள், முல்லைப் பெரியாறு அணை குறித்து சிக்கல்களை அவ்வப்போது எழுப்புவதும், பதற்றத்தின் உச்சியிலேயே இரண்டு மாநில எல்லையையும் வைத்திருப்பதும் சாபக்கேடு. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அணை பலவீனமாக இருக்கிறது என்ற குரல்கள் கேரளாவின் ஏழு மாவட்டங்களில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் கூட 40 ஆண்டுகளாக எவ்வித சிக்கலுக்கும் ஆட்படாமல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது முல்லைப் பெரியாறு அணை.

2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்கிற நிலையில், இடுக்கி அணை நிர்வாகம்,தான் செய்த தவறை நியாயப்படுத்தவே முல்லைப் பெரியாறு அணை மீது பழியை தூக்கி போட்டது. அரை மணி நேரத்தில் அணை உடைய போவதாக வதந்திகளை கேரள மாநிலம் முழுவதும் கிளப்பி விட்டு வருகின்றனர், அது ஒரு கோடி பேருக்கு குடிக்க நீரும், 10 லட்சம் விவசாயிகளுக்கான வாழ்வாதாரத்தையும் தங்கு தடையின்றி தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதாலும், மொத்தமுள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் ஆலப்புழா என்கிற ஒன்றை தொகுதியை மட்டுமே கைவசமாக சி பி எம் வைத்திருக்கும் நிலையில், இழந்ததை பெறுவதற்காக முல்லைப் பெரியாறு அணையை கவர்னர் உரையில் கவனமாகக் கொண்டு வந்திருக்கிறது கேரள மாநில அரசு.

ஆனால் இந்த முறை நாங்கள் விடுவதாக இல்லை. கேரளத்தில் ஆதிவாசி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஜனாதிபத்திய ராஷ்ட்ரீய பார்ட்டி சார்பில் நானே களத்தில் இறங்குகிறேன். முல்லைப் பெரியாறு அணையை சொல்லி 40 ஆண்டுகளாக கேரளத்து அரசியல்வாதிகள் நடத்தும் அத்தனை கபட நாடகங்களையும் அம்பலப்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டதாகவே நினைக்கிறேன்.

2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் உள்ள சாராம்சங்களை கேரள மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொண்டு போய் சேர்ப்பதற்காக களத்தில் நிற்கிறேன். முல்லைப் பெரியாறு அணை எதிர்ப்பாளர்கள் என்கிற பெயரில் நாற்பது ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் உள்ள மலையாள சகோதரர்களிடமிருந்து வசூல் வேட்டை நடத்திய ஏமாற்றுக்காரர்களை, பித்தலாட்டவாதிகளை களத்தில் அம்பலப்படுத்துவோம்.

பள்ளத்தாக்கில் ஓடக்கூடிய ஒரு நதியைச் சொல்லி, பல்லாயிரம் கோடிகளை கேரளத்து அரசியல்வாதிகள் குவித்ததை ஆதாரங்களுடன் மலையாள சகோதரர்கள் முன்னால் வைப்போம். தேக்கடி பெரியாறு அணையையொட்டி கட்டப்பட்டிருக்கும் சொகுசு விடுதிகளுக்கு ஏதும் கெடுதல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, கேரளத்து அரசியல்வாதிகள் பெரியாறு அணையை கையில் எடுத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் இடுக்கி தொகுதி முழுவதும் கொண்டு போய் சேர்ப்போம்.

இடுக்கி, தொடுபுழா, மூவாற்று புழா, கோதமங்கலம், உடும்பஞ்சோலை, தேவிகுளம், பீர்மேடு, என இடுக்கி நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் எங்கள் பிரச்சாரம் தீவிரம் எடுக்கும். 40 ஆண்டு கால கேரளத்து அரசியல்வாதிகளின் கபட நாடகங்களை அந்த அப்பாவி மக்கள் முன்னால் வைப்போம். 10 லட்சம் விவசாயிகளின் வயிற்றில் அடித்து தான் கேரளத்து இடதுசாரிகள் வெற்றி பெற வேண்டுமானால், இதைவிட பெருங்கேடு வேறெதுவும் இல்லை.

பெரியாறு அணைக்கு எதிராக விஷத்தை கக்கிய மறைந்த பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் சி ஏ குரியன், பாதர் ஜோ நிரப்பல், ஜோன்ஸ் பெருவந்தானம், பாதர் ஜெபாஸ்டியன் இடுக்கி எம்பி ஆக இருந்த ஜோயிஸ் சார்ஜ், நேற்று முளைத்த அட்வகேட் ரசல் ஜோயி உள்ளிட்ட எவரும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. அந்த வரிசையில் இப்போதைய முதல்வர் பினராயி விஜயனும் சேர்வதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இடுக்கி நாடாளுமன்றத் தேர்தலில் களத்தில் நிற்பதோடு, இந்த பித்தலாட்ட அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவோம். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இடுக்கி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிக்கனியைப் பறித்து எங்கள் பலத்தை நிரூபிப்போம் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு