கேரள அரசின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: ஐந்து மாவட்ட விவசாயிகள் கருத்து
பைல் படம்
முல்லை பெரியாறு அணையில் கேரள அரசின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உ ள்ளதாக ஐந்து மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 42 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கும் சிக்கலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. அதனால்தான் கடந்த 29ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணைக்குள் அத்துமீறி பிரவேசித்த கேரள மாநில அமைச்சர்களை கூட கண்டிக்காமல், இருமாநில உறவு முக்கியம் என்கிற அர்த்தம் தொனிக்கும் வகையில் தன்னுடைய செயல்பாட்டை அமைத்துக் கொண்டார்.உள்ளபடியே தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு கேரள மாநில அரசு கை கொடுத்திருக்க வேண்டும்.
கேரள அரசின் நடவடிக்கையால் தமிழக அரசுக்கு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியை கூட கருத்தில் கொள்ளாமல், இரு மாநில உறவு முக்கியம் என்கிற நிலைப்பாட்டை எடுத்த தமிழக முதல்வரை போற்றிப் புகழ்ந்திருக்க வேண்டும். பேபி அணைக்கு செல்லும் வழியில் உள்ள 15 மரங்களை கேரள மாநில அரசு அகற்ற உத்தரவிட்ட தகவல் தனக்கு நீர்வளத் துறை மூலம் கிடைத்ததாகவும், உள்ளபடியே அந்தத் தகவல் இரு மாநில உறவுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாகவும், நேற்றைக்கு கேரள மாநில முதல்வருக்கு, நம்முடைய தமிழக முதல்வர் அவர்கள் எழுதிய நன்றிக் கடிதத்தை துச்சமாக நினைத்து, அதை கேரள வனத்துறை அமைச்சரான சசிதரனுக்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்ட கேரள மாநில முதல்வரின் செயல் என்பது, எங்கள் முதல்வரை அவமானப்படுத்தியதல்ல,உங்களுக்கு காலங்காலமாக சோறு போடும் 10 கோடித் தமிழர்களை அவமானப்படுத்திய செயலாகவே பார்க்கிறோம்.
இந்தநிலையில், எங்களுடைய முதல்வருக்கு தகவல் தந்த நீர்வளத்துறை அதிகாரிகள் யார் என்பது எங்களுக்கு தெரியவேண்டும். ஒரு அண்டை மாநில முதல்வர்,நமக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் கூடுமானவரை அந்த கடிதத்தை எப்படி செயல்படுத்தலாம் என்று சிந்திப்பதற்கு மாறாக, கேரள மாநில வனத்துறை அமைச்சரை அழைத்து, அந்தக் கடிதம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்ட பினராயினுடைய செயல் மனிதத் தன்மையற்றது.
இது தான் மார்க்சியம் உங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடமா.நேற்றைக்கு தமிழக தொலைகாட்சிகளில் 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள மாநில அரசு அனுமதி என்கிற செய்தியை பார்த்த போது உள்ளுக்குள் இனம்புரியாத அச்சம் பரவியது எங்களுக்கு. ஏற்கனவே சபரிமலை விவகாரம், கொரோனாவை கட்டுப்படுத்தத் தவறியது என்று சொல்லி பினராயி விஜயனுடைய அரசு சமூக ரீதியாக கடும் தோல்வியைச் சந்தித்து இருக்கும் நிலையில், எப்படி மரங்களை வெட்ட அனுமதித்தார் என்கிற சந்தேகம் உள்ளுக்குள் எழுந்தது.
சபரிமலை விவகாரத்தை கூட மலையாளிகள் மன்னித்துக் கொள்வார்கள், கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதைக் கூட ஏற்றுக் கொள்வார்கள், ஆனால் முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டால் கூட,பினராயி அரசையே கவிழ்ந்து விடுவார்கள் கேரளத்தவர்கள்.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கேரள வனத்துறை அமைச்சரான சசீந்திரன்.மரபுப்படி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் அனுமதி பெறாமல் இந்த உத்தரவை பிறப்பித்தது கேரள மாநில தலைமை வார்டன், கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்ட நிலையில், முதல்வர் அலுவலகமும் இதை மறுத்து விட்ட நிலையில், ஒரு அதிகாரியால் இது எப்படி செயல்படுத்த முடியும்.
எனவே இந்தச் சிக்கலுக்கு காரணமான தலைமை வார்டன் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளேன் என்று அறிவித்திருக்கிறார்.மிகவும் பிற்போக்குத்தனமான சகித்துக் கொள்ள முடியாத இந்த பத்திரிகையாளர் சந்திப்பை, உள்ளபடியே தமிழக அரசை சீண்டிப்பார்க்கும் செயல்களில் ஒன்றாகவே நாங்கள் கருதுகிறோம். எத்தனைதான் கேரளாவோடு இணக்கமாக செல்ல வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்கள் நினைத்தால் கூட, அதை போகிற போக்கில் உதாசீனப்படுத்தும், இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு தமிழக முதல்வரிடம் தக்க மன்னிப்பைக் கோரிப் பெற வேண்டும்.
ஒரு அண்டை மாநில முதல்வரின் நட்புறவு பேணும் கடிதத்தையே விசாரணைக்கு உட்படுத்தும் அளவுக்கு, எதில் உயர்ந்து விட்டார்கள் இந்த மலையாளிகள்.தமிழக முதல்வர் தனக்கு இந்த தகவலை கூறிய அதிகாரி யார் என்பது குறித்தான உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கடந்த 29ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணைக்குள் அழையா விருந்தாளிகளாக வந்த கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், கேரள மாநில வருவாய் துறை அமைச்சர் ராஜன், கேரள மாநில விவசாயத் துறை அமைச்சர் பிரசாத், பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் சோமன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
கூடுதலாக அணை பகுதியில் இருக்கும் கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து சட்ட விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu