மேகமலைக்குள் கேரள அதிகாரிகள் : பெரியாறு பாசன விவசாயிகள் எச்சரிக்கை..!
மேகமலைக்கு வருஷநாடு வழியாக செல்லும் வழியில் உள்ள சின்னசுருளி அருவி. (பைல் படம்)
மேகமலைக்கு வெள்ளிமலை வனப்பகுதி வழியாக கேரள அதிகாரிகள் வந்துசெல்வது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மேகமலைக்கு உட்பட்ட கம்பம்- பாளையம்- சின்னமனூர்- அண்ணாநகர்- கடமலைக்குண்டு- குமணந்தொழு- கோரையூத்து- மஞ்சனூத்து வனச்சோதனை சாவடி வழியாக தாண்டிக்குடி வனப்பகுதிக்கு செல்லும் பெரியார் புலிகள் காப்பக வாகனங்கள் தமிழக எல்லையில் சோதனையிடப்பட்ட பின் அனுப்பப்படுகிறதா அல்லது சோதனை எதுவும் இன்றி அரசரடி வெள்ளிமலை வழியாக பெரியார் புலிகள் காப்பக எல்லைக்கு செல்கிறதா என்பது தெரிய வேண்டும்.
சமீபகாலமாக அதிகமான கேரள மாநில வனத்துறை வண்டிகள் வெள்ளிமலை வழியாக இரவும் பகலும் சென்று வருவதாக தெரிவிக்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.
பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிஷனுக்கு வெள்ளிமலை வழியாகத்தான் சென்றாக வேண்டுமா என்கிற கேள்வியும் இந்த நேரத்தில் எழுகிறது. வண்டிகளில் கேரள மாநில வனத்துறை அதிகாரிகள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்.
அதுபோல தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு மேற்கே உள்ள தலையணைக்கு அருகே பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிஷனுக்கான தங்குமிட வசதியும் தமிழக எல்லையில் இருக்கிறது.
செண்பகவல்லி கால்வாய் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் 5000 அடி உயரமுள்ள உச்சியில் பெரியார் புலிகள் காப்பகத்தில் கிழக்கு டிவிசன் செயல்பட்டு வருகிறது. சாஸ்தா கோயில் அணையில் இருந்து குமுளி வரை ஒரு தெளிவான நில அளவீட்டு பணிகளை இரண்டு மாநில அரசுகளும் இணைந்து செய்ய வேண்டும்.
அதிகமான தமிழக வனப்பகுதி இதற்கு இடைப்பட்ட பகுதியில் தான் கேரள மாநில அரசால் அபகரிக்கப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வெள்ளி மலைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள மஞ்சனூத்து வனச் சோதனை சாவடியில் கேரள மாநில வனத்துறை வண்டிகள் முழுமையாக சோதனை செய்யப்படாவிட்டால் சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு போராட வேண்டிய நெருக்கடி ஏற்படும்.
ஐயப்பன் கோவிலில் மகரஜோதி பூஜை வரை பத்தனம்திட்டா காடுகளில் உள்ள அத்தனை யானைகளும் மாடுகளும் வெள்ளி மலை வனப் பகுதிக்குள் தஞ்சமடைந்திருப்பதால் மஞ்சனூத்து சோதனை சாவடியில் இரவு நேர போக்குவரத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும். இரவு நேரத்தில் கேரள மாநில வனத்துறை வாகனங்கள் சர்வ சாதாரணமாக வெள்ளிமலை வனப்பகுதி வழியாக சென்று வருவதை நிறுத்தாவிட்டால் போராடி அதை நிறுத்துவோம். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu