கேரளாவிடம் 300 டிஎம்சி தண்ணீரையும், 1400 சதுர கிலோ மீட்டர் நிலத்தையும் இழந்த தமிழகம்..
டிஜிட்டல் சர்வே மாதிரி படம்.
தமிழகம் மற்றும் கேரளாவிற்கு இடையே கடுமையான எல்லைப்பிரச்னை இருந்தாலும், தமிழக அரசு தங்கள் எல்லைகளை பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது கேரள அரசு டிஜிட்டல் சர்வே என்ற பெயரில் தமிழகத்தின் பல ஆயிரம் சதுர கி.மீ., நிலங்களை பறிக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் புகார் கூறியுள்ளது.
அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:
தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையும் 1956 ஆம் ஆண்டில் இருந்து நீடித்து வருகிறது. கர்நாடகத்திலும், மராட்டியத்திலும் உள்ள உணர்ச்சி உள்ள அரசியல்வாதிகள் எவரும் தமிழகத்தில் இல்லாததின் விளைவு, மொழிவழிப் பிரிவினையின் போது தமிழகம் கிட்டத்தட்ட 85 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பெரும்பரப்பை இழக்க காரணமாக அமைந்தது. அன்றிலிருந்து இன்று வரை இதுதான் தமிழகத்தின் நிலைமை.
கேரளா தன்னிச்சையாக டிஜிட்டல் ரீ சர்வே என்கிற பெயரில், கேரள-தமிழக எல்லையோர கிராமங்களில் நடத்தி, தமிழக நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்கிறது என்று இரண்டு மாதங்களாக கத்திக் கொண்டிருக்கிறோம். இரண்டு முறை வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரனையும் சந்தித்து முறையிட்டு இருக்கிறோம்.
தமிழக-கேரளா எல்லையோரங்களில் இருக்கும் நிலங்களை அளக்கும் பொறுப்பில் அன்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழக அதிகாரி ஒரு மலையாளி. (எங்களுடன் வந்திருந்த கட்டப்பனையைச் சேர்ந்த ஜான் என்பவரை, தன்னுடைய சேம்பருக்கு வந்து தன்னை சந்திக்குமாறு அந்த மலையாள அதிகாரி அழைப்பு விட்டது தனிக்கதை).
தமிழகத்தின் எல்லையோரம் இருக்கும் வருவாய் நிலங்களில் உள்ள பட்டா எண்களை, மலையாள அதிகாரிகளும் அச்சடித்து வைத்துக் கொண்டு, அதற்கு சட்டரீதியான உருவம் கொடுக்கவே டிஜிட்டல் ரீ சர்வே என்று நாங்கள் எழுப்பிய குரல், நிச்சயமாக நம்முடைய முதல்வரின் காதுகளுக்கு சென்று சேர வாய்ப்பு இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்.
1956 ஆம் ஆண்டு மொழிவழி பிரிவினையில் தமிழகம் கேரளாவிடம் இழந்த பரப்பு 1400 சதுர கிலோமீட்டர். அதே அளவுள்ள பரப்பை, தற்போது கேரளா செய்துவரும் டிஜிட்டல் ரீ சர்வே மூலமாகவும் நாம் இழக்க நேரிடும் என்கிற எங்களுடைய அச்சத்திற்கு செவிமடுக்கத்தான் இங்கு யாருமில்லை.
தன்னுடைய நிலங்களை கேட்டு, மராட்டியமும் கன்னடமும் களத்தில் நின்று போட்டு வரும் சண்டையை இங்குள்ள அரசியல்வாதிகள் உணர வேண்டும். மராட்டியத்தில் உள்ள முக்கிய நகரங்களான சோலாப்பூர், அக்கலகோட் போன்ற கன்னடம் பேசும் பகுதிகள், ஒரு கட்டத்தில் தானாகவே கர்நாடகத்துடன் இணையும் என்று கொக்கரிக்கிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.
ஆனால், தமிழகத்தில் இருந்து வல்லடியாக கேரளாவிற்கு தூக்கிக் கொடுக்கப்பட்ட, தமிழ் அப்பாவிகள் வாழும் தேவிகுளம் பீர்மேடு உடும்பன்சோலை எங்கள் பூமி. வளம்மிகுந்த நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, கொழிஞ்சாம்பாறை, அட்டப்பாடி, ஆரியங்காவு வனப்பகுதிகள், சித்தூர், பாலக்காடு, நிலம்பூரின் கிழக்குப் பகுதி, மறையூர் என கேரளாவிடம் நாம் இழந்த பகுதிகளை குறித்து எவரும் இங்கு பேச தயார் இல்லை என்பது எத்தனை பெருஞ்சோகம்.
1956 ஆம் ஆண்டு மொழிவழி பிரிவினையில் கேரளாவிடம் நாம் இழந்த 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பு நம்மிடம் இருந்திருந்தால், குறைந்தபட்சம் 250 முதல் 300 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெற்றிருக்கும் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu