காவிரி பிரச்சினையில் தலையிட்ட கர்நாடகாவின் ஆதிசுஞ்சனகிரி மட பீடாதிபதி
ஆதி சுஞ்சனகிரி பீடாதிபதி சுவாமி நிர்மலானந்தா.
கர்நாடகாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மட பீடாதிபதி நிர்மலானந்தா தமிழர்களையும் நேசிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவில் சக்தி வாய்ந்த 50 பீடாதிபதிகளில், ஆதி சுஞ்சனகிரி பீடாதிபதி முதல் 10 இடங்களுக்குள் வந்து விடுகிறார்.
கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் மாண்டியா மாவட்டத்தில், நாகமங்கலா தாலுகாவில், கடல் மட்டத்திலிருந்து 3,330 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மகா சமஸ்தான மடம் தான் ஆதி சுஞ்சனகிரி மடம்.
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காலபைரவேஸ்வரர் கோயில் இந்த மடத்தில் தான் அமைந்திருக்கிறது. சிவபெருமானின் தவத்தால் புனிதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் இந்த மடம், கர்நாடக அரசியலின் போக்கை மாற்றக்கூடிய மடமாகவும் கணிக்கப்படுகிறது.
பெங்களூரு நகரத்தை நிர்மாணித்த கெம்பே கவுடா இந்த ஆதி சுஞ்சனகிரி மடத்திலிருந்து வந்தவர் தான் என்கிறது வரலாறு. இந்தியாவின் பெரிய மடமாக அறியப்படும் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி, அரசியல் சார்ந்து எந்த நடவடிக்கையையும் அமைத்துக் கொள்ளாத நிலையில், ஆதி சுஞ்சனகிரி மடம் அரசியலை பிரதானமாக கைக்கொண்டு இருக்கிறது.
உலகளாவிய சகோதரத்துவம், உலகளாவிய அமைதி, அதற்காக ஆன்மீகத்தை கருவியாக கொள்வது என்கிற சுஞ்சனகிரி மடத்தின் நோக்கம் மிகவும் உயர்வானது. உணவு, கல்வி, ஆரோக்கியம் என்கிற அதனுடைய தாரக மந்திரத்திற்கு இணையாக ஈடு இணை எதுவும் இல்லை.
இந்தியாவில் பெரிய மடமாக அறியப்படும் திருவாவடுதுறை ஆதீனமடம், கல்விக்கென்று பெரிய அளவிற்கு மெனக்கிடாத நிலையில், ஆதி சுஞ்சனகிரி மடம், நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை ஸ்தாபித்து, கிட்டத்தட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கூடுதலாக நாளொன்றுக்கு இருபதாயிரம் மக்களுக்கு உணவளிக்கும் வேலையையும் காலங்காலமாக செய்து வருகிறது. இந்த அர்ப்பணிப்பான உணவளிக்கும் வேலைக்காகவே அன்னதானி மடம் என்ற பெயரையும் ஆதி சுஞ்சனகிரி மடம் பெற்றிருக்கிறது.
இயற்கை பேரிடர்களின் போது மடத்தினுடைய நிவாரணப் பணிகள், அசுர வேகத்தில் நடக்கும். நாடு முழுவதும் 30 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டிருக்கும் இந்த ஆதி சுஞ்சனகிரி மடத்திற்கு வெளிநாட்டிலும் இரண்டு அறக்கட்டளை கிளைகள் இருக்கிறது. அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள பிளின்டில் ஒரு மடமும், ஜெர்மனியில் உள்ள பெர்லினில் ஒரு மடமும் என இரண்டு மடங்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் பெரும்பான்மையாக வாழும் ஒக்கலிக மக்களின் குரு பீடமாக அறியப்படும் இந்த ஆதி சுஞ்சனகிரி மடத்திற்கு தேனி மாவட்டம், கம்பத்திலும் ஒரு கிளை இருக்கிறது. ஒரு மகளிர் கல்லூரியும் அங்கு செயல்பட்டு வருகிறது.
அதுபோல ராமேஸ்வரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதி சுஞ்சனகிரி மடத்தின் ஒரு கிளை திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் கர்நாடகத்தினுடைய முன்னாள் முதல்வரான குமாரசாமி. அந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தவர் நம்முடைய கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்.
சன்னியாசிகள் என்றாலே சாதுவாக இருப்பார்கள் என்பதெல்லாம் உடைத்தெறிந்து, ஆதி சுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி ஆக்ரோசம் மிகுந்த சாதுவாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஆதி சுஞ்சனகிரி மடத்தின் 72 ஆவது தலைமை மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட சுவாமி ஸ்ரீ நிர்மலானந்த நாத சுவாமிகள், ஆன்மீகப் பணிகளோடு, மடம் சார்ந்த ஒக்கலிக மக்களுக்கான பிரச்சினைகளுக்காகவும் உரத்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஒக்கலிக மக்களுக்கான இட ஒதுக்கீடாகட்டும், கல்வி உரிமையாகட்டும், இன்ன பிற தேவைகள் எதுவாக இருந்தாலும் சுவாமி நிர்மலானந்தாவின் குரல் கட்டாயம் ஒலிக்கும். ஒன்றுபட்ட கர்நாடக மாநில எல்லை வரையறையில் கூட மடம் ஒரு காலத்தில் தலையிட்டது என்றால் அந்த மாநில மக்களின் நலனில் மடம் எத்தனை அக்கறையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
காவிரி படுகையில் அமைந்திருக்கும் மாவட்டம் மாண்டியா என்பதால், காவேரி பிரச்சனை எழும்போதெல்லாம் ஆதி சுஞ்சனகிரி மடத்தினுடைய மடாதிபதி வீதிக்கு வருகிறார். மக்களோடு மக்களாக நின்று உரத்து முழங்குகிறார்.
சன்னியாசம் என்பது மக்கள் பணிக்கான ஒரு அடையாளம் என்பது அவரது முழக்கம். உலகளாவிய சகோதரத்துவத்தை பேசக்கூடிய ஆதி சுஞ்சனகிரி மடத்தின் தலைமை மடாதிபதி, காவிரி பிரச்சனை எழும்போதெல்லாம் தன்னுடைய மாநில நலனுக்காக மட்டும் பேசுவது என்பது ஏற்புடையதல்ல என்றாலும், தனக்கு விதித்தது அதுதான் என்கிற அவரது விளக்கம் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
உள்ளூர் பிரச்சனை என்றால் ஒக்கலிக மக்களின் கேடயமாக நிற்பதும், அண்டை மாநில பிரச்சனை என்றால் ஒன்றுபட்ட கர்நாடகாவிற்காக உரத்து முழங்குவதும், மடத்தின் நோக்கத்திற்கும், தத்துவத்திற்கும் எதிரானதாக இருந்தாலும், அதுதான் தன்னுடைய அடையாளம் என்கிறார் சுவாமி நிர்மலானந்தா.
ஒக்கலிக மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக ஆதி சுஞ்சனகிரி மடம் எழுப்பிய அதிகாரக் குரல், கர்நாடகத்தின் பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. தமிழகத்தில் இருக்கிற எல்லா மடாதிபதியும், ஒரு சாதி சார்ந்து தான் இயங்கி வருகிறார்கள். பெரும்பாலும் சைவ மடங்களே தமிழகத்தில் சொத்துள்ள மடங்களாக இருக்கிறது.
காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை மடம், இதுவரை தன்னுடைய மாநில நலனுக்காக வாய் திறக்காத நிலையில், ஆதி சுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி கர்நாடகத்தின் குரலை இரண்டு நாட்களுக்கு முன்னால் பழைய மைசூரு பகுதியில் ஓங்கி ஒலித்தார்.
மத்திய அரசு பாதிக்கப்பட்ட கர்நாடக மக்களின் பக்கம் நிற்க வேண்டும், எங்களுக்கு நீதி வேண்டும் என்று அவர் எழுப்பிய குரல் அடுத்த நொடியே டெல்லிக்கு சென்று சேர்ந்திருக்கும். சுஞ்சனகிரி மடத்தின் பலம் அப்படியானது. கடந்த 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு டெல்லிக்குச் சென்ற சுவாமி நிர்மலானந்தா, நேரடியாக பிரதமர் மோடியினுடைய இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். சாது என்றால் மடத்திற்குள் முடங்கி கிடக்க வேண்டும் என்கிற இலக்கணத்தை உடைத்து தன்னுடைய மாநில நலனுக்காக பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு தன்னுடைய தகவமைப்பை மாற்றிக் கொண்டிருக்கிறார் சுவாமி நிர்மலானந்தா.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலையில் உள்ள ஸ்ரீ நாராயண குரு மடத்திற்கு வராத இந்திய தலைவர்களே இல்லை. கேரளத்தில் பெரும்பான்மையாக வாழும் ஈழவ மக்களின் ஒளிவிளக்காக விளங்கிய நாராயண குரு மடத்து ஏட்டில், காந்தி முதல் மோடி வரை கையெழுத்திட்டிருப்பார்கள். அதுபோலத்தான் ஆதி சுஞ்சனகிரி மடத்திலும்.
அதிகாரத்தின் பீடங்களை நினைத்த மாத்திரத்தில் அசைத்துப் பார்க்கும் அசாத்திய தைரியம் படைத்த ஆதி சுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி, இந்த மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்தையும் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு அனைவரையும் காத்தருள்வது கால பைரவர் தான் என்கிற முடிவுக்கு வர வேண்டும்.
கடவுளுக்கு முன்னால் தமிழன், தெலுங்கன், கன்னடன், என்ற வேறுபாடு உண்டா... இங்கு அனைவரையும் சமமாக பார்க்கக் கூடியதுதான் கடவுள் எனப்படுவது.
அதுபோல சன்னியாசிகள் என்பவர்கள் தனித்தன்மை படைத்தவர்கள், தன்னிகரற்றவர்கள், அனைத்து உயிர்களையும் அரவணைக்கக் கூடியவர்கள் என்பது ஆதி சுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதிக்கு நன்கு தெரியும். வரும் காலங்களில் சுவாமி நிர்மலானந்தா தமிழர்களையும் நேசிக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் சுவாமி நிர்மலானந்தா, தமிழகத்திற்கும் நீதி கிடைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கம்பம், ராமேஸ்வரத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடங்களை விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி முற்றுகையிடுவோம் இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu