கண்ணகி கோயில் விழா: விவசாயிகளுக்கு தடை?
கண்ணகி கோயில் (பைல் படம்).
தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில், தமிழக வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது கண்ணகி கோயில். இக்கோயிலுக்கு செல்லும் பாதை கேரள வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. இதனால் இருமாநில அரசு அதிகாரிகளும் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்கின்றனர். இதுவரை பிரச்னை இல்லாமல் விழா நடந்து வந்தது.
இந்த ஆண்டு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எழுப்பிய கேள்வி இடுக்கி, தேனி மாவட்டங்களில் தீயாய் பற்றிக் கொண்டுள்ளது. வரும் மே மாதம் ஐந்தாம் தேதி சித்ராபவுர்ணமி திருவிழா கண்ணகி கோயிலில் நடக்க உள்ள சூழ்நிலையில், இந்த விழாவில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் சிலரை பங்கேற்க விடாமல் தடுக்க இருமாநில உளவுத்துறைகளும் இணைந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் வேலை செய்து வருகின்றன. பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் நாங்கள் சாமி மட்டும் கும்பிடுகிறோம். எந்த பேச்சும் பேச மாட்டோம். வந்து மட்டும் செல்கிறோம் என அறிவித்தும், போலீசார் வரவே வேண்டாம் என பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கண்ணகி அறக்கட்டளைக்கும், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்திற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த சிக்கலுக்கு காரணம். கண்ணகி அறக்கட்டளையினர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில், கண்ணகிக்கு கோயில் கட்டித்தருமாறு கேரள அரசிடம் முறையிட்டனர் என்ற கேள்விக்கு இப்போது வரை யாரும் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினால், நாங்களும் வழங்குவோம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகளும், பல்வேறு அமைப்புகளும் களம் இறங்கி உள்ளது பிரச்னையை தீவிரமாக்கி உள்ளது.
இதனால் தமிழக இந்து சமயஅறநிலையத்துறையினர் முதன் முறையாக இந்த ஆண்டு தாங்களே அன்னதானம் வழங்க உள்ளதாகவும், வேறு யாரும் அன்னதானம் வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம், மருத்துவ வசதி உட்பட அத்தனை வசதிகளையும் தேனி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையினர் கண்ணகி கோயிலில் அன்னதானம் வழங்க 3 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கி ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். அப்படியானால் கண்ணகி அறக்கட்டளை அன்னதானம் வழங்கினால் எதிர்ப்போம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் அறிவித்திருப்பது நிலைமையை சிக்கலாக்கி உள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி விழா நடக்க உள்ள நிலையில், இந்த சிக்கலை எப்படியாவது தீர்த்து விட வேண்டும் என இருமாநில போலீஸ் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சமாதான பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளனர். எப்படியும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் விழாவில் பங்கேற்காமல் இருப்பது ஒன்று மட்டுமே எந்த சிக்கலும், இல்லாமல் விழாவினை நடத்துவதற்கான தீர்வாகும் என கேரள போலீசார் தெளிவாக அறிவித்துள்ளனர். கோயிலுக்கு சாமி கும்பிட வரவேண்டாம் என எப்படி தடுக்க முடியும். என்ன நடக்கப்போகிறதோ என இருமாவட்ட மக்களும் கவனமுடன் இப்பிரச்னையை கவனித்து, சிக்கலின்றி விழா நடத்த உதவு தாயே என கண்ணகியை வேண்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu