இளையராஜாவை கண்டபடி திட்டிய கண்ணதாசன்
இளையராஜா-எம்.எஸ்.வி- கண்ணதாசன்.
இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படம் “அன்னக்கிளி” என்பதை சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிவார்கள். இத்திரைப்படம் 1976 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
இத்திரைப்படத்திற்கு பிறகு இளையராஜா “பாலூட்டி வளர்த்த கிளி” என்ற படத்திற்கு இசையமைத்தார். இதில் சில பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து இளையராஜா தமிழ் சினிமாவின் மிக பிசியான இசையமைப்பாளராக வலம் வந்தார்.
இந்த சமயத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் மார்க்கெட் குறைந்து கொண்டே வந்தது. எம்.எஸ்.விக்கு வாய்ப்புகளே இல்லை. ஆதலால் கவலையில் ஆழ்ந்தார். தினமும் இரவு கண்ணதாசனுக்கு தொடர்புகொண்டு புலம்புவாராம் எம்.எஸ்.வி. கண்ணதாசனும் எம்.எஸ்.வியும் மிகச் சிறந்த நண்பர்கள் என்பதை பலரும் அறிவார்கள்.
இந்த நிலையில் தனது பத்திரிக்கையில் மறைமுகமாக இளையராஜாவை திட்டி எழுதத் தொடங்கினாராம் கண்ணதாசன். எனினும் கவிஞர் தன்னைத்தான் திட்டுகிறார் என இளையராஜாவுக்கு தெரியவந்திருக்கிறது. ஒரு நாள் கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை கண்ணதாசனை இளையராஜா சந்தித்த போது, “ஏன் கவிஞர் என்னை திட்டி எழுதுகிறார். நான் அப்படி என்ன தவறு செய்தேன்” என புலம்பியிருக்கிறார்.
அன்று இரவு வீட்டிற்கு சென்ற அண்ணாதுரை கண்ணதாசன், கண்ணதாசனை பார்த்து, “இன்னைக்கு இளையராஜா சாரை பார்த்தேன். நீங்கள் அவரை திட்டி எழுதுவதாக கூறினார். ஏன்?” என கேட்டிருக்கிறார். அதற்கு கண்ணதாசன், “இளையராஜாவே வந்து கேட்டாரா?” என்று கேட்க, அதற்கு அண்ணாதுரை கண்ணதாசன், “ஆம், அவரே தான் வந்து கேட்டார்” என கூறியிருக்கிறார். “அப்படியா சரி” என்ற வார்த்தையை மட்டும் கூறினாராம் கண்ணதாசன்.
இதனை தொடர்ந்து கண்ணதாசன், இளையராஜாவை திட்டி எழுதுவதை நிறுத்திக் கொண்டாராம். அதன்பின் இளையராஜாவின் இசையில் சில பாடல்களையும் எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu