தேனியில் நடந்த விருந்தில் கலாய்த்த தங்க தமிழ்ச்செல்வன்
தேனியில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் பேசினார்.
தேனி உள்ளாட்சி தேர்தல் தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வனுக்கு தலைவலி தொடங்கியது. வடக்கு மாவட்ட நகராட்சிகளில் ஏற்பட்ட பதவிச்சண்டை, அதனால் தலைமையில் ஏற்பட்ட அதிருப்தி, தொடர்ந்து தி.மு.க., உள்கட்சி தேர்தல் என தினமும், தினம் தங்க.தமிழ்செல்வனுக்கு டென்சன் மிகுந்த நாட்களாகவே அமைந்திருந்தன. சில நாட்களில் அவர் டென்சனின் உச்சத்திற்கே சென்றதை பார்த்து மிரண்டதாக தி.மு.க.,வினர் பகிரங்கமாக பேசிக்கொண்டனர்.
இந்நிலையில் தேனி நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா அன்னதானம் (சிறப்பு விருந்து) நடைபெற்றது. இதில் பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டனர். மண்டபத்தில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது.
இந்நிலையில் தங்க.தமிழ்செல்வன் பேச தொடங்கும் போதே, ஒரு தொண்டர் அவரை சந்தித்து ஏதோ சொல்ல முற்பட, மற்றவர்கள் அவரை அமர வைத்தனர். இதனை கவனித்த தங்க.தமிழ்செல்வன், 'மணி ஒண்ணரை தானப்பா ஆகுது... இந்நேரமேவா... என கலாய்த்தார்'. அடுத்து அவர் பேசும்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இந்த மாதம் முழுக்க கொண்டாடப்படுகிறது. இன்று துப்பரவுப்பணியாளர்களுக்கு நாம் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். அவர்கள் மட்டும் ஒரு நாள் ஸ்டிரைக் செய்தால் நகராட்சி நாறிப்போகும். மதுரையில் ஒரு நாள் ஸ்டிரைக் செய்தனர். அவ்வளவு தான் மதுரை அதோகதி ஆகிப்போனது. அவர்களின் பணி மகத்தானது. துப்புரவு பணி என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் விடுமுறை எடுத்தாலே நம்மால் சமாளிக்க முடியாது. எனவே அவர்களை நாம் அனுசரித்து மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களின் வேலைக்கு மரியாதை செய்யும் விதமாக அவர்களுக்கு உடைகள் வழங்கப்படுகிறது. இங்கு நடைபெறும் விருந்திலும் அவர்கள் பங்கேற்கின்றனர்.
அ.தி.மு.க.,வினர் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு, அவர்கள் வீட்டின் கல்லாக்களை நிரப்பிக் கொண்டு சென்று விட்டனர். அ.தி.மு.க., தலைவர்கள் சொத்துக்களை கணக்கெடுத்தால் 50 ஆயிரம் கோடி, ஒரு லட்சம் கோடி என போய்க்கொண்டே இருக்கிறது. தற்போது தமிழகத்தின் நிதி நிலைமையினையும் சீராக்கி, மக்கள் நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் அவர் கூறியதை எல்லாம் நிச்சயம் நிறைவேற்றுவார். தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கிடைக்கும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu