விடுதி வசதி இல்லாமல் தவிக்கும் ஐ.டி.ஐ., மாணவர்கள்..!

விடுதி வசதி இல்லாமல் தவிக்கும் ஐ.டி.ஐ., மாணவர்கள்..!
X

தேனி தொழிற்பயிற்சி கல்லூரி (கோப்பு படம்)

தேனியில் ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள் விடுதி வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் தேனி, போடி, கோட்டூர் பகுதிகளில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். தேனியில் உள்ள ஐ.டி.ஐ.,க்கு சொந்தமான கட்டடத்தை 1996ம் ஆண்டே எஸ்.பி., அலுவலகமாக பயன்படுத்த ஒதுக்கி கொடுத்துள்ளனர். அதன் பின்னர் எஸ்.பி., அலுவலகம் கட்டி பல ஆண்டுகளாகியும், இந்த கட்டடத்தை போலீஸ் பயிற்சி மையமாகவும், பல்வேறு அலுவலக பயன்பாட்டிற்கும் போலீஸ் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.

ஐ.டி.ஐ., நிர்வாகிகள் கூறுகையில், ‛போலீஸ் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட எங்களது கட்டடத்தை மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க போலீஸ் நிர்வாகம் மறுத்து வருகிறது. இந்த அலுவலகம் கிடைத்தால், எங்கள் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‛தேனி ஐ.டி.ஐ., அலுவலகத்தை முறைப்படி போலீஸ் நிர்வாகத்திற்கு அரசு ஒப்படைத்துள்ளது. இதனால் இந்த கட்டடத்தை மீண்டும் ஐ.டி.ஐ.,க்கு வழங்கவே வழியில்லை. தவிர இந்த கட்டட்ததை சுற்றி போலீஸ் நிர்வாகம் தொடர்பான பல்வேறு அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் இந்த கட்டடத்தை விடுதிக்கு வழங்கினால் மாணவர்களும் சுதந்திரமாக இருக்க முடியாது.

போலீசாருக்கும் இடையூறுகள் அதிகமாக இருக்கும். எனவே ஐ.டி.ஐ.,க்கு வேறு புதிய கட்டடம் கட்டுவது மட்டுமே இப்பிரச்னைக்கு ஒரே தீர்வாக இருக்கும். கூடுதல் கட்டடம் கட்ட தேவையான இடமும் அவர்களிடம் உள்ளது’. இவ்வாறு கூறினர். 1996ம் ஆண்டு முதலே ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு விடுதி வசதிகள் இல்லாததால், ஏழை மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!