வைகை, முல்லை பெரியாறு அணைகள் நிரம்பி வழிந்தாலும் கால்வாய்களில் நீர் திறக்கவில்லை
நீர் நிரம்பி காணப்படும் முல்லை பெரியாறு அணை (பைல் படம்)
வைகை பெரியாறு அணைகள் நிரம்பி வழிந்தாலும், பல கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ச்சியாக பெய்த பெரு மழையினால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை ஆகிய இரண்டு அணைகளும் முறையே 142 மற்றும் 70 அடி தண்ணீர் தேக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் இல்லாத வகையில் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து வெளியேறும் அணை நீர் வங்கக்கடலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஆனால், பெரியாறு பாசனத்தின் கீழ் வரும் பிரதான கால்வாய்கள் இன்னும் தன்நிறைவு பெறாமல் உள்ளது, பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் உசிலம்பட்டி58-ஆம் கால்வாயின் பாசன பகுதிக்கும் தண்ணீர் முழுமையாக செல்லவில்லை. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி கால்வாய், மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாய் உள்ளிட்ட 7 கால்வாய்களுக்கு இதுவரை தண்ணீர் செல்லவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு கடைமடை விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இரண்டு அணைகளிலும் முழுக்க முழுக்க மழை வெள்ளம் நிரம்பி வழிகிறது. எனவே, உடனடியாக பெரியாறு வடிநில கோட்ட தலைமை பொறியாளர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை அலுவலர்களை அழைத்து, பெரியாறு பாசனத்தில் இன்னமும் தண்ணீர் வராத கண்மாய்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க வேண்டும். பெரியாறு பாசனத்தில் ஏற்கெனவே பயன்பெற்று வந்து, பிறகு பல்வேறு காரணங்களால் ஆயக்கட்டிலிருந்து விடுபட்டுப் போன கண்மாய் களையும் கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.
பிரதான மற்றும் நீட்டிப்பு கால்வாய்களுக்கு முழுமையான தண்ணீரை அடுத்த இரண்டு மாதத்திற்கு வழங்குவதற்கு அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர், தமிழக முதல்வர் அவர்களுக்கும் இது குறித்து மனு அனுப்பி உள்ளோதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu