பனிப்பிரதேசத்தில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரனுக்கு இத்தனை பிரச்சினையா?

பனிப்பிரதேசத்தில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரனுக்கு இத்தனை பிரச்சினையா?
X
பனிப்பிரதேசத்தில் நாட்டை பாதுகாக்கும் பணியில் உள்ள ராணுவ வீரர்கள் அன்றாடம் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

கரணம் தப்பினால் மரணம்...என்ற நிலையில்...உலகின் மிகப் பெரிய மலைச் சிகரங்களின் மேல் உள்ள போர்க்களத்தையும் அதற்கான பயிற்சியையும் கொண்ட திறமையான பலம் வாய்ந்த உலகின் மிகப்பெரிய ராணுவம் நமது இந்திய ராணுவம் தான்.

ஐ.நா.சபையே பல போர்களில் இந்திய ராணுவத்தின் உதவியை நாட முன்னிலையில் நின்று ஐ.நா. படைகள் வெற்றி பெற உதவியிருக்கிறது. மக்களில் சிலர் ராணுவ வேலையை எண்ணற்ற வேலைகளில் அதுவும் ஒரு சாதாரண வேலை என்பது போல நினைக்கின்றனர்.நமது ராணுவத்தினர் மிக உயரமான பனிப்பிரதேசங்களுக்கு போய் வருவது மிக சுலபமான வேலை போல் நினைக்கிறார்கள்.இந்த பகுதிகள் நீங்கள் நினைப்பது போல் ஊட்டி, கொடைக்கானல், குலுமணாலி, சிம்லா போல் அல்ல.

அங்குள்ள தட்பவெப்ப நிலை மைனஸ் 40 (Minus 40 degree) வரை சென்று விடும். அங்கு நினைக்கும் நேரத்தில் சென்று வரமுடியாது.... அதுபோல் அங்கிருந்து நினைத்த நேரத்தில் விடுமுறை எடுத்து ஊருக்கெல்லாம் வரமுடியாது..... பனி பிரதேசங்களுக்கு போகும் முன்னர் 90 நாட்கள் அடிவாரத்திலிருந்து நமது உடல்நிலையை அந்த தட்பவெப்பத்திற்கு பழகுவார்கள். அங்கே ஏற்படும் உடல் உபாதைகளை எப்படி சமாளிப்பது, வீரர்கள் தங்களது உடல்நிலையை எப்படி பாதுகாப்பது என்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.

பின்பு மருத்துவ தகுதி பெற்ற பின் மிக உயரிய பனிப்பிரதேசங்களுக்கு அனுப்புவார்கள்.அங்கே அவர்கள் 90 நாட்கள் மட்டுமே பணிபுரிவார்கள். நாம் அங்கே சென்றுவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் ?..... சூரிய வெளிச்சம் 10 மணிக்குமேல் வரும். 3 மணிக்கு இருட்டி விடும். நமக்கு வேண்டிய அனைத்து சத்தான விலையுயர்ந்த உணவுப்பொருட்கள் இருக்கும் .ஆனால் சாப்பிட முடியாது.குளிரில் பசியெடுக்காது.

மதியம் மட்டும் வேண்டா வெறுப்பாக உயிர்வாழ்வதற்காக சாப்பிடுவார்கள்.. மிக உயரம் என்பதால் காற்றின் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கும்,.... மூச்சுத் திணறல் ஏற்படும் . தினமும் டெண்டை சுற்றி குழி தோண்டி நிலக்கரியை போட்டு எரிப்பார்கள். இருந்தும் குளிர் அடங்காது. தீயெரியும் இடத்தில வாளிகளில் பனியை போட்டு தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும்.அதை பாட்டில்களில் நிறைத்து முன்பகுதியில் இரண்டு பாட்டில் பின் பகுதியில் இரண்டு பாட்டில் கட்டிக்கொண்டு படுக்கவேண்டும்.

இதன் சூடு பத்து நிமிடம் கூட இருக்காது.அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சென்று சுடுதண்ணீரை பாட்டிலில் மாற்றி வந்து படுக்கவேண்டும். இது தான் இரவு முழுவதும் டைம் பாஸ். சவப்பெட்டிபோல் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்லீப்பிங் பேக்கில் தூங்க வேண்டும். பனிப்பாறைகளை வெறும் கண்களால் பார்த்தால் கண் எரியும். கலர் பிளைண்ட்னஸ் வந்து விடும். 11 மணிக்குமேல் வெயில் அடிக்கிறது என்று வெயிலில் நின்றால் உடம்பில் கொப்புளங்கள் வந்துவிடும்.

மதியம் ஒரு மணிக்குமேல் சுழல் காற்று வீசும். அது உடலில் படும்பொழுது உயிர்போய் விடும் வேதனை.சிலசமயம் இந்த சுழல்காற்று பனிச்சரிவை ஏற்படுத்திவிடும். பனிச்சரிவு மணிக்கு 80 கிமீ வேகத்தில் நகரும் தப்பிப்பது என்பது இயலாத காரியம். அங்கே பணிபுரியும்போது.ஏதாவது உடல்நிலை கோளாறு ஏற்பட்டால் சண்டிகருக்கோ அல்லது டெல்லிக்கோ அவர்களை அழைத்து வர முடியாது. வெப்பநிலை மாறும்போது ஸ்ட்ரோக் வந்து இறந்து விடுவார்கள். ஏதாவது காயங்கள் ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும்.

சில பள்ளமான இடங்களில் பனிக்கு கீழ் தண்ணீர் இருக்கும். கால்தவறி அதனுள் விழுந்துவிட்டால் உயிர் பிழைப்பது மிக கடினம். அதிகப்படியான பனி என்பதால் உடல் கருத்துவிடும். 90 நாட்கள் பணிமுடிந்த பின் மலை அடிவாரத்திற்கு சென்று 30 நாட்கள் கீழ இருக்கும் தட்பவெட்பத்திற்கு உடலை பழக்கவேண்டும்(de acclimatization) .பின்பு விடுமுறை கிடைக்கும்.ஏழு மாதங்களுக்கு வீரர்கள் குடும்பத்தில் என்ன நடந்தாலும் விடுமுறைக்கு வரமுடியாது. இங்க பணிபுரிந்து விட்டு வந்த பிறகு பலவித உடல் உபாதைகள் ஏற்படும்.

சிலருக்கு நினைவு தப்பிவிடும்.ஒரு ராணுவவீரன் நாட்டை காக்க இவ்வளவு தியாகங்கள் செய்யவேண்டியிருக்கிறது. இங்கே உட்கார்ந்துகொண்டு பேசுவது மிகவும் சுலபம்.அங்கிருக்கும் சூழலை அனுபவித்தவர்களுக்கு தெரியும் .அதன் வேதனை என்னவென்று, ஒருமுறை அங்கே சென்றுவிட்டு வந்தபின்.உடல் பழையநிலைக்கு வர பல வருடங்கள் பிடிக்கும்.இவ்வளவு கடினமான பணியினை நமது ராணுவவீரர்கள் மிகவும் சாதாரணமாக செய்து நாட்டினை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!