ஊழலுக்கு எதிரான போர் கூட்டணி உண்டா? இல்லையா?

ஊழலுக்கு எதிரான போர் கூட்டணி உண்டா? இல்லையா?
X

அண்ணாமலை (பைல் படம்).

அண்ணாமலை தொடங்கி உள்ள ஊழலுக்கு எதிரான போரால் கூட்டணி உண்டா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை ஏப்., 14ம் தேதி சில தி.மு.க., தலைவர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். இதற்கு தி.மு.க.,விடம் இருந்து பெரிய அளவில் ரியாக்ஷன் எதுவும் இல்லை. பார்மாலிட்டிக்காக அண்ணாமலைக்கு நோட்டீஸ் மட்டும் அனுப்பி உள்ளனர். அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் குறித்து தி.மு.க.,வினர் கண்டு கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. இந்நிலையில் தொடர்ந்து பேசி வரும் அண்ணாமலை வரும் 2024ம் ஆண்டு தேர்தலுக்கு தமிழகத்தை ஆண்ட அத்தனை கட்சிகளின் ஊழல் மற்றும் சொத்துப்பட்டியல் வெளிவரும். ஊழலுக்கு எதிராக நான் தமிழ்நாடு முழுவதும் பேரணி செல்லப்போகிறேன் என்ற அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளார்.

இது மக்கள் மத்தியில் பெரும் அளவில் பரபரப்பினை ஏற்படுத்தாவிட்டாலும், நிச்சயம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பிரிண்டிங் மீடியாக்கள், விஷூவல் மீடியாக்கள் அண்ணாமலையின் பேட்டியை பெரிய அளவில் ஒளிபரப்பாவிட்டாலும், தற்போதைய சூழலில் சோசியல் மீடியா மூலம் பா.ஜ.,வினர் தமிழகத்தின் மூலை முடுக்கு எல்லாம் கொண்டு போய் சேர்த்து விட்டனர்.

முதல் பட்டியல் வெளியான நிலையில் அடுத்தடுத்து இன்னும் மூன்று பட்டயல் வெளியாகும். இந்த பட்டியலில் அ.தி.மு.க.,வினர் ஊழல், சொத்துப்பட்டியல் குறித்த விவரமும் உள்ளது. ஊழலுக்கு எதிரான போரில் பா.ஜ.க., பேதமின்றி அத்தனை பேரையும் அம்பலப்படுத்தும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். இதற்கு அ.தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘கூட்டணியில் இருந்து கொண்டே இப்படி பட்டியல் வெளியிடுவேன் என மிரட்டுவது சரியா’, பட்டியல் வந்தாலும் பார்ப்போம். அண்ணாமலை மட்டும் தான் ஊழலுக்கு எதிரானவர் என்ற மாயையினை ஏற்படுத்த பார்க்கிறார்’ என பதிலடி கொடுத்துள்ளார். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ‘அண்ணாமலை பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். அவர் பேசியே பெரிய ஆளாக நினைக்கிறார்‘ என கொந்தளித்துள்ளார்.

எதிரும், புதிருமாக உள்ள தி.மு.க.,வே பட்டியல் வெளியான பின்னரும் இந்த பிரச்னையை நிதானமாக கையாண்டு வருகையில், அ.தி.மு.க., பட்டியல் வரும் முன்பே கொந்தளிக்க காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியும் அண்ணாமலையின் பேச்சுக்களை கவனிக்கும் போது, அவர் இந்த பிரச்னையை லேசில் விடுவதாக இல்லை என்றே தெரிகிறது. பிரதமர், உள்துறை அமைச்சர் என மத்திய அரசின் வலுவான தலைவர்களின் முழு ஆதரவு உள்ளதால் அண்ணாமலை அ.தி.மு.க., தி.மு.க., என இரு கட்சிகளுடனும் கடுமையாக மோத தயாராகி விட்டார்.

அப்படியானால் கூட்டணி என்னாச்சு... வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., தனித்து களம் இறங்கப்போகிறதா... இல்லை தி.மு.க., அ.தி.மு.க., தவிர பிற கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கப்போகிறதா?. அந்த கூட்டணியில் யார்? யார்?இடம் பெறுவார்கள்? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. எது எப்படியே இன்று தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் அண்ணாமலை மீது திரும்பி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!